.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts

Saturday, January 18, 2014

நாமளா நாடிப்போனா குறைவு ; அதுவா தேடி வந்தா அதிகம்;



ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்..

Friday, January 17, 2014

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!




இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

 சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

 திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

 முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..?



நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.???

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்.

வெரி குட்..
மனோஜ் .. நீ சொல்லு.. மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது.. மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து சார்..!!

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்..

"மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

Thursday, January 16, 2014

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்......?

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

 



தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."...

"எப்ப தூக்கம் வரும்பா?"

"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."

"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."

"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."

"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"

"கடவுள்..."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"

"கடிக்காது..."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."

"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"

"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்...."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான் நீ தூங்கு..."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்கு பசிக்குது..."

"கொசு இட்லி சாப்பிடுமா?"

"அதெல்லாம் பிடிக்காது..."

"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"

"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."

"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"

"கேட்டுத் தொலை"

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்கு பல்லே இல்லை..."

"பிறகு எப்படி கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."

"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"

"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"

"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"

  • இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வேலை தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!

Wednesday, January 15, 2014

அஜித்துக்கும் எனக்கும் போட்டி..! விஜய் பேச்சு

அஜித்துக்கும் எனக்கும் ஆரோக்கியமான போட்டி உள்ளது...! விஜய் பேச்சு
 
 
 
'ஜில்லா' படம் விஜய் ரசிகர்களை திருத்திபடுத்தியுள்ளது என்றும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்து உள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் ஜில்லா படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் ரசிகர்களால் தான் என் படங்களின் வெற்றி சாத்தியமாகிறது என்றும் தெரிவித்தார்.

சமீபகாலமாக பண்டிகை நாளில் ஒரு படம் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இந்த பொங்கலுக்கு வீரம், ஜில்லா என்று இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. வீரம் வெற்றியடைந்ததாக கேள்விப்பட்டேன். அஜீத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

இதை எங்களுக்குள் இருக்கிற ஆரோக்கியமான போட்டியாகவே நினைக்கிறேன். இதை ஆரோக்கியமான போட்டியாகவே ரசிகர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
 
 
 

குரு – சிஷ்யன் ...!


துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான்.

 கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.

”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.

நீதி :முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு (First Deserve & then Desire)

Tuesday, January 14, 2014

அதுதான் நல்ல நட்பு ..! -



வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது .

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும் அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்..

Monday, January 13, 2014

உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்...!!!



வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்.

உரமிட்டார். நீர் பாய்ச்சினார்.

செடிகள் பெரிதாக வளரவில்லை.

பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.

இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.

வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.

அதே தண்ணீர். அதே உரம்.அதே இடம்.இது எப்படி சாத்தியம்?

கிழவர் சொன்னார்,

“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள்.

நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.

உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்...!!!

Friday, January 10, 2014

சுவாமி விவேகானந்தர் - ஒருவரின் பண்ணை வீட்டில் ?




ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

Wednesday, January 8, 2014

அமெரிக்கன் சொன்னான்..




அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

ரஷ்யன் சொன்னான்..

எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

இந்தியன் சொன்னான்..

பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

Tuesday, January 7, 2014

எனக்காகவும் கொஞ்சம்...!

எனக்காகவும் கொஞ்சம்...!


ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம். அனைவரும் கொஞ்சம் இத படிங்க!!

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?

தந்தை: கேளேன்...

மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?

தந்தை: 100 டாலர் ...

மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!

தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.

மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.

தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?

மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.

தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

  •  இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் விசயம் என்னவென்றால் "தன்னை நேசிப்பவர்களுக்கு காட்டப்படும் அன்பை விட 100 டாலர் ஒன்றும் பெரிதல்ல".

குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள். நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே! இதை யோசித்தீர்களா?

ரொம்ப யோசிக்க வேண்டாம்... நாளையெனும் .... நாளை ... பிறகு இல்லாமேலே போகலாம்.

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!




*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை மட்டும் கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

அன்புள்ள கணவருக்கு...




ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!! 

Monday, January 6, 2014

அன்புள்ள கணவருக்கு...




ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

Sunday, January 5, 2014

23 முறை கேட்ட கேள்வி - (சிறுகதை)




23 முறை கேட்ட கேள்வி:-

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்



அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

Tuesday, December 31, 2013

கடவுள் இருக்கிறாரா? - குட்டிக்கதைகள்!




கடவுள் இருக்கிறாரா?


``கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?'' சீடன் கேட்டான்.


 குரு ஒரு கதை சொன்னார்:


``கடவுள் இருக்கிறார் என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான், `கடவுளே! என்னோடு பேசுங்களேன்!'


அப்போது குயில் ஒன்று பாடியது.


அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்: `கடவுளே, என்னோடு பேசுங்களேன்!' உடனே உரத்த இடியோசை, எழுந்தது.


அதையும் பொருட்படுத்தாத அவன், `பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா?' என்று இறைவனிடம் கேட்டான்.


சுடர்விட்டுப் பிரகாசித்தபடி, வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது. அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்:


`ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா?'


கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்.


 அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு, நடந்தபடி சொன்னான். `கடவுள் இல்லை! இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்.


பார்க்க முடிந்திருக்கும். அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே!'' கதையைக் கேட்ட சீடன் சொன்னான்.


 ``புரிந்தது குருவே! கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை!''

Sunday, December 29, 2013

சிறந்த பொய்!!!!




ஒரு குட்டி கதை:
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

சாப்ளினைப் பற்றி.....




சாப்ளினைப் பற்றி.....
சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார்.
சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!

$1 மில்லியன் ஒப்பந்தம் (ஒரு மில்லியன் டாலர் ஊதியம் பெற்ற முதல் நடிகர்)

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.

சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

 மார்ச்சு 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர்

. பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

 
back to top