.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 1, 2014

பழங்களின் நிறங்களும், குணங்களும்...

இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.

பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.சிவப்பு நிறப் பழங்கள்கண்ணைக் கவரும் பழங்கள்தான்

சிவப்பு நிறப் பழங்கள்.

இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.

 ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

மஞ்சள் நிறப் பழங்கள்

எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும். வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும். ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.

பச்சை நிறப் பழங்கள்

பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.

ஆரஞ்சு நிறப் பழங்கள்

மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

நீல நிறப் பழங்கள்

நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.

மண் நிற பழங்கள்

சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

உடல் எடையை குறைக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்...!

இன்றைய நவீன உலகில் உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு நமது உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை தான் காரணம்.

ஆனால் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப, உடல் எடையையும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களாலேயே குறைக்கலாம். என்ன அது எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம், முதலில் உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால், இந்த உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் நிச்சயம் குறைத்து, உடலைச் சிக்கென்று வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க முடியும்.

இதை சிலர் நம்பமாட்டீர்கள். நம்பாதவர்களுக்கு கிரீன் டீ, நடைப்பயிற்சி என்று ஏதாவது ஒரு செயலைக் குறிப்பிட்டு செய்தால் குறையும் என்று சொன்னால் மட்டும் தான் நம்புவீர்கள் என்றால், உடல் எடையை குறைத்துவிட்டு, அந்த எடை குறைப்பதற்கான செயலை நிறுத்திவிட்டால், மறுபடியும் உடல் எடை தான் அதிகரிக்கும்.

எனவே அந்த மாதிரியான செயல்களை நம்புவதை விட, எப்போதும் நாம் செய்யும் செயல்களில் ஒரு சிலவற்றை தொடர்ச்சியாக செய்தால், நிச்சயம் உடல் எடை குறைந்துவிடும். சொல்லப்போனால், அந்த செயல்களால் நாம் சிலவற்றை சாப்பிட முடியவில்லையே என வருந்தப்படாமல் இருக்குமாறு இருக்கும். இப்போது அந்த மாதிரியான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.

அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை மெதுவாக குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

உடலுக்கேற்ற எடை :
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்க நினைக்கும் போது, செய்ய வேண்டியது என்னவென்றால் பி.எம்.ஐ, உயரம், எடை போன்றவற்றை அளந்து பார்த்து, நமது உடலுக்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று உணவுமுறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, பின் அதற்கேற்றாற் போல் எடை குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

உணவுமுறை வித்தியாசங்கள்:

சிலர் உடல் எடையைக் குறைக்கின்றோம் என்று சாதாரணமாக உண்ணும் உணவிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகின்றனர். அதாவது கம்போர்ட் உணவுகளை திடீரென தவிர்ப்பது, சில நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கின்றனர்.

இவ்வாறு திடீரென எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. எதுவானாலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் விட வேண்டும். அதற்காக சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருந்தால், உடல் எடை குறையாது. அதிகரிக்கத்தான் செய்யும். எனவே சாப்பிட வேண்டும். ஆனால் அவற்றில் கவனமும், அளவும் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சியை காலையில் செய்தால் தான் உடல் எடை குறையும் என்பதில்லை. எந்த நேரம் சரியானதாக உள்ளதோ, அந்த நேரத்தில் தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தாலே, உடல் எடையானது குறையும். எனவே உடற்பயிற்சிக்கு எந்த ஒரு நேரமும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை 30-45 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது.

ஸ்நாக்ஸ்:
உணவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வேறு எந்த ஒரு ஜங்க் உணவுகள், பர்க்கர், வறுத்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடாமல், அப்போது பிடித்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

அதிலும் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து எந்த மாதிரியான ரெசிபி செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொண்டு, பசிக்கும் நேரம் அவ்வாறு செய்து சாப்பிடலாம். சொல்லப்போனால், அப்போது அவற்றை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமற்ற உணவு :
எப்போதுமே ஆரோக்கியமான, உடல் எடையை குறைக்கும் உணவுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இருக்க வேண்டாம். இரண்டு அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை வேண்டுமெனில் ஐஸ் க்ரீம், பர்க்கர் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் அவற்றிலும் ஒருசில சத்துக்கள் இருக்கலாம். எனவே ஒரு முறை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால், நல்லது தான்.

மனஅழுத்தம் :

மன அழுத்தம் கூட உடல் எடையை அதிகரித்துவிடும். எனவே அவற்றை போக்க தினமும் ஒரு 30 நிமிடம் இசை கேட்பது அல்லது புத்தகம் படிப்பது அல்லது யோகா போன்றவற்றை செய்தால், அந்த மனஅழுத்தத்தை குறைத்துவிடலாம், உடல் எடையையும் அதிகரிக்காமல் செய்யலாம்.

விளையாட்டு :
வாரத்திற்கு ஒரு முறை பிடித்த விளையாட்டுக்களான டென்னிஸ், கால் பந்து, கைப்பந்து, ஜாக்கிங் போன்றவற்றை நண்பர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ விளையாடலாம். இதனால் குழந்தைகள் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழித்தது போல் இருக்கும், உடல் எடையையும் குறையும் வாய்ப்பும் உள்ளது.

தண்ணீர்:

ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, நாம் செய்யும் அனைத்து செயல்களும் உடலில் தங்கி உடல் எடை குறையும். இல்லையெனில் அந்த அழுக்குகள் நாம் எடை குறைக்க சாப்பிடும் அனைத்து உணவுகளையும், அப்படியே வெளியேற்றிவிடும். ஆகவே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, தண்ணீர் மிகவும் அவசியமானது.
 
back to top