.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, May 5, 2013

குட்டிக்கதைகள். 3 - பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!


பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...! 







      ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.



     மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.



     சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.



     தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.



     பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.



     பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.



     பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.



     பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.



பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...! 


குட்டிக்கதைகள். 2 - கெளதமபுத்தர்



கெளதமபுத்தர்

 





             ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது 

எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர்

முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன்  

மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும்  

எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர்.  

அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் 

ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் 

ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு 

வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து 

விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் 

என்ன செய்ய முடியும்..?"                                                          

என்று கூறிவிட்டு சென்று  விட்டார்.



           
துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற  

உணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் 

காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது  

காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் 

ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் 

ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் 

வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை 

செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து 

கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி 

ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது 

புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது 

போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

குட்டிக்கதைகள். 1 - சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்!




சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்




ஒருவர்:       வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.




மற்றவர்:      சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?




ஒருவர்:       நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.




மற்றவர்:      இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.




ஒருவர்:       இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!




மற்றவர்:     அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.




ஒருவர்:      சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

மற்றவர்எப்படிச் சொல்றீங்க?




ஒருவர்:      ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.




மற்றவர்:      நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.




ஒருவர்:      பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!




மற்றவர்:     குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!
 
back to top