* பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
* மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.
* தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடும்.