.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 11, 2013

வீட்டுக் குறிப்புகள்!



வீட்டுக் குறிப்புகள்:


1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் சால்ட் கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் எட்டணாவுக்கு மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பேனை ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால்,தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroiderகைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100)துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101)ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102)மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103)தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104)மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105)அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106)புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107)ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108)சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109)கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110)பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111)இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112)பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113)காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114)நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115)தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116)கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117)தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118)ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி,வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119)தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120)கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121)குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.

122)உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123)குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124)முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125)சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126)மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127)உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128)தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129)கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130)சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131)வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132)துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133)பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134)கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135)இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136)உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137)காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138)பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலம்.

வளர்பிறையில் ஏன் விழாக்கள் கொண்டாடுகின்றனர் ஆராய்வோமா?




பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திருவிழா போன்ற பல விழாக்களை கொண்டாடினார்கள்.

அவ்விழாக்களை கொண்டாடுவதற்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை.
மக்கள் ஒன்று கூட தொலை தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது,
வாகன வசதிகள் பெருமளவில்லை.


மாட்டு வண்டிகள் தான் இருந்திருக்கிறது, அதில் எப்படி தொலைதூரம் வேக பயணம் செய்ய முடியும்?

ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும்.
அப்படியாயின் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதல்லவா.


ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து மின்சாரம் வந்தது? ஒளிபரப்பி எல்லாம் எங்கிருந்து வந்தது?

எல்லாம் தீப்பந்தம் தான் தீப்பந்தம் மூலம் எப்படி பெரிய விழாக்களை கொண்டாடமுடியும்?

அதன் ஒளி போதுமானதாக இருக்குமா, இரவு பகல் அதிக தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால் தீப்பந்தம் எப்படி பயன்படும்?
காற்றில் அணையாதா, அப்போது எப்படி அவ்வளவு பெரிய விழாக்களை கொண்டாடினார்கள்.

தகவலுக்கு வருவோம் நிலா தேய்பிறை முடிந்து வளர்பிறை ஆரம்பிக்கும் போது நிலா ஒளியின் பிரகாசம் மிகையாக இருக்கும்.

அந்த நாட்களில் விழாக்களை வைக்கும் போது ஒளியிற்கான தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது அல்லவா.

அதனால் பண்டைய மக்கள் வளர்பிறை நாட்களுக்காக காத்திருந்து விழாக்களை கொண்டாடுகின்றனர்.


அதை இன்றைய காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையாக ஆக்கி ஒரு பொருளை எடுத்து வேற ஒரு இடத்திற்கு வைக்கவும் வளர்பிறை நாட்களை தேடுகின்றனர்.

சகுணம் சரியில்லை என்று ஒரு மூட காரணத்தை முன்வைக்கின்றனர்.

இன்று தான் ஒளிக்கான தேவை எவ்வளவோ மிகையாகிறது. எதற்கு வளர்பிறை வேண்டும் எமது பண்டைய மக்கள் மிகவும் புத்திசாலிகள்,

அவர்கள் செய்ததை இன்றைய கால மக்கள் அதை மூடநம்பிக்கைக்காக பயன்படுத்துகின்றனர்.

பண்டைய வரலாறு அறிபவர்கள் இவ்வாறான மூடநம்பிக்கையில் இருந்து விலகிசெல்வார்கள்.

பௌர்ணமி நாளில் கோவில்களில் பெரிதாக விழாக்கள் கொண்டாடுகின்றனர் காரணம் என்ன,
பண்டைய மக்கள் பௌர்ணமி நாளில் ஒளியின் அளவு அதிகமாக இருப்பதால் கோவில் விழாக்களை கொண்டாடினார்கள்.


ஆனால் எம் மக்கள் அதெல்லாம் அறியாமல் பௌர்ணமி நாள் தெய்வீகமான நாள் அப்படி இப்படி பல புனைகதைகளை உருவாக்கி மூடநம்பிக்கையில் மூழ்கிவிட்டார்கள்.

பண்டைய தமிழன் செய்த ஒவ்வொரு செயலிலும் அறிவியல், பல நன்மைகள் காணப்படுகின்றன.

பண்டைய வரலாறு அறிவோம் மூட நம்பிக்கைகளை ஒதுக்குவோம்.

செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!




 செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது.



இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற பல தனிமங்கள் இந்த ஏரியில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் உள்ள ஏரிகளைப் போன்றே இந்த ஏரியிலும் பல்வேறு அம்சங்கள் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏரியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மைல்கல் கலரிலும் விஷயமிருக்கு, தெரிந்து கொள்வோம்..



சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல...



இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.



மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.



 இதோ தெரிஞ்சுக்கோங்க...


 * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை


* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை


* நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை


* பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

கோயிலில் ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி!



புதுமுகங்கள் மகி, சரவணன், திவ்யா, ஜான்விகா நடிக்கும் படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா கதை எழுதி தயாரிக்கிறார் ஜெயபால். தேவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது:


பக்தி படம் என்பது இப்போது அரிதாகிவிட்டது. மேற்கு முகப்பேர் கனக துர்கை அம்மன் கோயிலில் நடந்த 2 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜாதகப்படி ஒரு பக்தர் விபத்தில் இறக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்தி செய்வதாக வேண்டிக் கொண்டார்.


அவர் விபத்தில் சிக்கியபோது கை எலும்பு மட்டும் முறிந்து உயிர் பிழைத்தார். மற்றொரு சம்பவத்தில் பெண்ணின் காதலனை பேய் ஒன்று அழிக்க முயல்கிறது. அதிலிருந்து காதலன் தப்புகிறானா என்பது கிளைமாக்ஸ். இப்படத்துக்காக திவ்யா, ஜான்விகா தீச்சட்டி ஏந்தி ஆடிய பாம்பு நடனம் அம்மன் கோயிலில் படமாக்கப்பட்டது. வழக்கமாக கோயிலில் ஷூட்டிங் நடத்த உடனடியாக அனுமதி கிடைப்பது அரிது.


எங்களுக்கு அனுமதி கிடைத்தது இன்ப அதிர்ச¢சியாக அமைந்தது. இதன் ஆடியோ விழாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அம்மன் பிரசாதம் வழங்குவதற்காக ஆயிரம் தேங்காய் வாங்கப்பட்டதுடன். குங்குமம், பழம், வெற்றிலை பாக்குடன் பிரசாதம் தரப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி!


புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது


குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது


நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது


நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது


இயற்கையை ரசிப்பது


மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது


ஓர் ஆரோக்யமான குழந்தை


ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது


சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது


உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது


இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே

நான்காவது முறையாக தள்ளிப் போகிறது கோச்சடையான் ரிலீஸ்!




இந்த மாதம் வெளியாகவிருந்த கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள், மீண்டும் தள்ளிப் போகிறது. இதனால், படத்தின் வெளியீடும் தள்ளிப் போகிறது.


ஏற்கனவே ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட கோச்சடையான் படத்தின் பாடல்கள், கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியாகலாம் என செய்தி வந்தது.


இப்போது, மீண்டும் ஆடியோ ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது, ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாத நிலையில், அதுவும் சாத்தியமில்லை என ஆனது. இப்போது, ஆடியோவே ஜனவரி மாதம் தான் வெளியாகும் என்பதால், படத்தின் ரிலீஸும் தள்ளிப் போகிறது. இது ரசிகர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.


படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ், அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், மோஷன் கேப்சர் (motion capture) தொழில்நுட்பம் அதிக நேரம் எடுப்பதால் தான் இந்தத் தாமதம் எனத் தெரிகிறது. இப்போதைக்கு, ஜனவரி முதல் வாரத்தில் படத்தின் ஆடியோவும், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று திரைப்படமும் ரிலீஸ் ஆகுமென்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூக்குத்தி அணிவது ஏன்..?!




மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.


இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.


நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும்.


இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.


பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

வாழ்க்கை எனும் அரிய பிரசாதம் ...


உன் சகோதரனின் கண்களில் இருக்கும் தூசியை பெரிது படுத்தும் நீ, உன் கண்களில் இருக்கும் பெரிய மரக்கட்டையை கவனிக்க ஏன் தவறுகிறாய்? என்று நம்மை  பார்த்து ஏசு கிறிஸ்து கேட்கிறார்.


பிறரை மதிப்பிடு செய்யும் போது மற்றவரை  நேசிப்பதற்கும் அவர்களால் நேசிக்கபடுவதர்க்குமான தகுதியை நாம் இழக்கிறோம் என்கிறார் அன்னை திரேசா.


பிறரை மதிப்பிடு செய்து குறை கண்டு கொண்டே இருக்கும் குணத்தால் நாம் இழப்பது, அரிதான மனிதா நேயத்தையும் அழகான உறவுகளையும் தான்.


குறை காண்பதால் நம்மை அறியாமலேயே நாம் சுய பச்சாதாபத்தின் பிடியில் அகப்பட்டு விடுகின்றோம்.
ஐயோ எனக்குதான் எவ்வளவு கஸ்ரம்! எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை!`, எல்லோரும் எவ்வளவு சுகமாக இருக்கிறார்கள்.நான் மட்டும் ஏன் இப்படி துன்பப்டுகிறேன் என்றெல்லாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து நம்மை பற்றி நாமே பெரிதாக குறை பட்டு கொள்வதே இதன் அடையாளம்.


இளைஞர்களே! தட்டில் இருக்கும் உணவு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று குறை படாதீர்கள்`உணவே இல்லாதவர்கள் உலகில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் .


கலையில் இருந்து மாலை வரை இடுப்பொடிய இவ்வளவு வேலையா என்று குறை படாதீர்கள் ,தினக்கூலி வேலையாவது  கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் இங்கு கணக்கில் அடங்கதவர்கள் என்பதை உணருங்கள்.


விடுமுறை நாளில் கூட ஓய்வெடுக்க முடியவில்லையே என்ற குறைபாடு உங்களுக்கு.தினசரி நாளுக்கு 16 மணி நேரத்துக்கும் அதிகமா உழைத்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றும் தாய்மார்களை நினைத்து பாருங்கள்.
எனவே மற்றவருடன் நம்மை ஒப்பிட்டு பார்த்து இயற்கையாலோ இறைவனாலோ நீங்கள் வஞ்சிக்க பட்டதாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்


நீங்கள் ஒவ்வருவரும் தனித்திறமை வாய்ந்தவர்கள்.எவருடனும் ஒப்பிட தகாதவர்கள்.
மதிப்பீடுகளையும் ஒப்பிடுதலையும் குறை காண்பதையும் நிறுத்துங்கள்.


அப்போது எங்கும் எதிலும் நன்மை காண்பீர்கள் அதனால் உங்கள் வாழ்வு மலரும் தோழமை பெருகும் வாழ்க்கை இனிக்கும்...

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!




  கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


அந்த எண் 1800-425-247-247.


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.


475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்.


உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........



குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...


* பிசிஜி - பிறப்பின் போது

* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது

* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்

* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்

* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்

* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்

* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்

* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்

* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்

* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்

* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்

* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்

* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்

* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்

* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்

* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்

* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்

* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்

* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்

* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)

* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்

* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

கவலை என்பது எதுவரை? உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.!


அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அறச் செட்டு முழு நட்டம்.

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அற்ப அறிவு அல்லற் கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கும் அடிசறுக்கும்.

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே...

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

இஞ்சி இலாபம் மஞ்சளில்.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில் கெட்டவனுமில்லை.

இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

இருவர் நட்பு ஒருவர் பொறை.

இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது

இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இறங்கு பொழுதில் மருந்து குடி

இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஈர நாவிற்கு எலும்பில்லை.

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

உலோபிக்கு இரட்டை செலவு.

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.

உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

உள்ளது போகாது இல்லது வாராது.

உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.

ஊண் அற்றபோது உடலற்றது.

ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்.

ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

வாரியாரின் வார்த்தை விருந்து!


கல்வியின் பயன்


கற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயனும் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்



உண்பதன் நோக்கம்



உண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால்தான் நற்குணங்கள் உருவாகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்பையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. தூய உணவை உண்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


வளர்க்க வேண்டியவை



நாம் நாளும் நாளும் உடம்பை வளர்க்கிறோம். தொழிலை வளர்க்கிறோம். வீடு நில புலன்களைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் நமது குணங்களை வளர்க்கிறோமா? என்றால் இல்லை. முதலில் அதை வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்



பேரின்பம்




உலகில் சிறந்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடுவதனால் இனிமை, சுகம் உண்டாகிறது. பாலும் தேனும் கூடுவதனால் சுவை அதிகப்படுகிறது. உணவுப் பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கூடிச் சுவையாகின்றன. அதுபோல் கணவனும் மனைவியும் கூடி இன்புறுகின்றனர். அந்த இன்பம் அணுத்துணையாயது. இனி பரம்பொருளாகிய பதியுடன் ஆன்மா கூடுவதனால் வரும் இன்பமே பேரின்பம். அந்த இன்பத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.


தியானம் செய்


மனத்தை ஒருமுகப்படுத்த முடியாத நிலையிலும் நாம் அவ்வப்போது ஈசனைத் தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்த முயற்சிகளுக்குக் கூட ஓரளவு பயன் இருக்கத்தான் செய்யும். காலப் போக்கில் நம் மனம் அடங்கிவிடும். தியானநிலை மனத்திற்கு அமைதியைத் தரும்.


சத்தியம்



சத்தியத்திலும் உயர்ந்த தர்மமில்லை. அசத்தியத்திலும் தாழ்ந்த அதர்மமில்லை. பூகம்பத்தால் உலகம் அசையினும் சத்தியம் அசையாது. அதை மேற்கொண்டவன், எக்காலத்திலும் தாமரைத் தடாகத்தில் இருப்பது போல் இன்பமுற்றிருப்பான். ஆதலால் எக்காலத்திலும் யாவரிடத்தும் சத்தியத்தையே பேச வேண்டும். அவ்வாறின்றி உண்மையை ஒழிப்பதனால் பற்பல கேடுகள் உண்டாகும். உண்மையை ஒழிப்பவனுடைய தனம், தானம், தர்மம், கல்வி முதலியவை தேய்பிறைச் சந்திரனைப் போல் தேயும்.



கடன் பட்டவர்கள்



துன்பத்திற்கெல்லாம் பெருந்துன்பம் கடன் பட்டவனுடைய துன்பமே. அதனாலன்றோ "கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் கம்பர். நமக்கு அருமையான உடல், நல்ல மனம், புத்தி முதலிய கரணங்களையும், நன்கு இருப்பதற்கும் உலவுவதற்கும் இந்த உலகத்தையும், இதன் கண்ணே வாழ்ந்து அனுபவிப்பதற்குப் போகத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் நாம் கடன் பட்டவர்களே. மனம், மொழி, மெய்களால் அந்த ஆண்டவனை வழிபடுவது தான் நம் கடனைத் தீர்க்கும் வழியாகும். அந்தத் தனிப்பெரும் தலைவனை வாயார வாழ்த்தி வணங்க வேண்டும். நெஞ்சார நினைக்க வேண்டும். தலையாரக் கும்பிட வேண்டும்.
 
back to top