.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, February 1, 2014

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா..!



ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் ‘ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு  எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்ட கேஜ்ரிவால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுகவைச் சேர்ந்த மு.க.அழகிரி, கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கேஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சுரேஷ் கல்மாடி, நிதின் கட்காரி, ஜி.கே.வாசன், சுஷில் குமார் ஷிண்டே, பிரஃபுல் படேல், எடியூரப்பா, ஆனந்த் குமார், வீரப்ப மொய்லி, குமாரசாமி, ப.சிதம்பரம், அழகிரி, கனிமொழி, சல்மான் குர்ஷித், அன்னு தாண்டன், ஆ.ராசா, தருண் கோகாய், கபில் சிபல், மாயாவதி, முலாயம் சிங், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் பன்சால், ஃபரூக் அப்துல்லா மற்றும் நவீன் ஜிண்டால்.-ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்

இந்தப் பட்டியலை வெளியிட்டு பேசிய கெஜ்ரிவால், “நான் நாட்டில் உள்ள நேர்மையற்றவர்கள் (அரசியல்வாதிகள்) பட்டியலை தயாரித்துள்ளேன். இந்தப் பட்டியலில் நேர்மையான அரசியல்வாதிகள் எவரேனும் இருந்தால், தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள்.இந்தப் பட்டியலில் உள்ளவர்களை தோற்கடிக்கச் செய்வதா அல்லது நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதா என்பதை நாட்டு மக்களிடமே கேட்கிறேன்.

நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள்.எங்களுடைய நோக்கம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல; பாஜக, காங்கிரஸ் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் செய்வதும் அல்ல. ஊழல்வாதிகளை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பக் கூடாது என்பதே எங்களது நோக்கம்” என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

குறிப்பாக, தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ரூ.500 கோடி செலவு செய்யும் இவர்கள் (மோடி, ராகுல்) நேர்மையான அரசைத் தரக்கூடியவர்களா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்மிடம் இருந்து பணத்தை மீட்டுக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி..!



மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

 குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

கணவருக்கு பிடித்த நடிகை போல மாறிய மனைவிக்கு நேர்ந்த கதி..!



சவுதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, அதையடுத்து முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை கணவர் விவகாரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டது அந்நாட்டு ஊடகங்களின் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் போட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து வந்த கணவனின் போக்கை மாற்ற அவரது மனைவி ஒரு முடிவெடுத்தார்.அதன் படி முதலில், நடிகை கிம் கர்டஷியான் பாணியில் சிகையலங்காரம் செய்துக் கொண்டார்.

நடிகையின் மீது தனது கணவனுக்கு உள்ள ஈர்ப்பு தன் மீது இல்லாமல் போனதை அறிந்து வேதனைப்பட்ட அந்த பெண், சவுதியின் பிரபல ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ நிபுணரிடம் சென்று தனது முக அமைப்பையும் கிம் கர்டஷியானைப் போலவே மாற்றிக் கொண்டார்.

‘நடிகையை மறந்துவிட்டு இனி நம் மீது மட்டும் கணவர் பூரணமாக அன்பு செலுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பிய அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் செய்கையும் (புதிய) முக அமைப்பும் தனக்கு பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவரை விவாகரத்து செய்துவிட்ட கணவன் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட’ அவரது வாழ்க்கை ஊடகங்களின் விவாதப் பொருளாகவும் மாறிவிட்டதை எண்ணி பல சவுதி பெண்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்..!



திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல?

இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள்.

இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.
ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை விற்கின்றனர். ஆனால், அந்த பணத்தை சினிமாவில் போடாமல் ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் விட்டுவிடுகின்றனர்.
இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

இதற்கிடையில் ஆர்ம்பத்திலேயே சொன்னது மாதிரி திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம்.

மொத்தத்தில் ‘இங்க என்ன சொல்லுது’ சொல்ற மாதிரி இல்ல.
 
back to top