.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா விமர்சனம்..!. Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம்..!. Show all posts

Sunday, January 19, 2014

“கே.பாக்யராஜ் ஊசி போடுவதில் கில்லாடி…” - மன்சூர் அலிகான்



ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் ’3 ஜி’ எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’.

இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா,  மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி .

இந்த 3 ஜீனியஸஸ் எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.

நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. ‘என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க…’ என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை, நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்குப் பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது..? அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்…” இவ்வாறு பேசினார்.

நடிகர்  மன்சூர் அலிகான் பேசும்போது “இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார். கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது. எங்க ஊர் பக்கத்திலிருந்தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்..!



ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது, அவருக்கு இரண்டாவது படம்.

படத்தை பற்றி எஸ்.வி.சேரிடம் கேட்டபோது,”இது, கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் கதை. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு கணவர் வரவேண்டும் என்று ஆசைப்படுகிற மாதிரி, கதாநாயகனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில், அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் வாலி, என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அதன் அடையாளமாக அவர் இறப்பதற்கு முன், இந்த படத்துக்காக 4 பாடல்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். சென்னை, ஏற்காடு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகிய 2 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சின்னி ஜெயந்த், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘‘நிலா அது வானத்து மேலே’’ என்ற பழைய பாடல், ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டுள்ளது. சீர்காழி சிவசிதம்பரம் பாடியிருக்கிறார். அந்த பாடலுக்கு கவர்ச்சி நடிகை சோனா, கீர்த்தி சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் சேகர் நடனம் ஆடியிருக்கிறார்.

கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தை டைரக்டு செய்த அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய 2 மகள்களின் படிப்பு செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு ‘கட்’ கூட கொடுக்காமல், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.’’ என்றார்

Saturday, January 18, 2014

ஒரே படத்தில் 3 நிஜ சம்பவம்..!



3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது  கற்பவை கற்றபின். இதுபற்றி இயக்குனர் பட்ராம் செந்தில் கூறியதாவது:

 ஈழ தமிழர்கள் பிரச்னைக்காக உயிர் தியாகம் செய்த இளைஞர், தகாத உறவால் அவமானத்தில் தற்கொலை செய்யும் ஜோடி, கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் பெண் என 3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

 தற்கொலை செய்யக்கூடாது என்று அட்வைஸ் சொல்லும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்பவர்கள் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

  சந்தீப்-தருணா, மது - அபினிதா ஆகிய 2 ஜோடிகளுடன் சிந்துகுமாரி மற்றும் சிங்கம்புலி, விசித்ரன், அம்மு, யுவான் சுவாங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், செந்தில் தயாரிப்பு. ஊட்டி, திருச்சி மற்றும் ஆந்திராவில் ஷூட்டிங் நடந்துள்ளது.

``கலவரம்`` - திரை விமர்சனம்..!



மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனிராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது.

தணிகாலபரணி, தன் ஆதரவு ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோரை அழைத்து, என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார்.

கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார். இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து அந்த அறிக்கையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.

இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவொருவரும் இவர்களுடன் சேர்கிறார். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார்.

இறுதியில் இவர்களை பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார். வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ரவுடிகளை பழிவாங்கும் நினைக்கும் அஜய்ராகவ், அஜய், யாசர், ராகவேந்தர் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை சுரேஷ், கட்டத்துரை எனும் கதாபாத்திரத்தில் மிரளவைக்கிறார்.

படத்தை சந்திரன் ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. 2 பாடல்கள்தான் என்றாலும் பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் பைசல். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களை திறம்பட வேலையை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

மொத்தத்தில் ‘கலவரம்’ கொலைக்களம்.

Friday, January 17, 2014

ரூ.90 கோடியை தாண்டியது வீரம் வசூல்..?



அஜீத் நடித்த வீரம் திரைப்படம் ரிலீஸான ஆறு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது முந்தைய படத்தின் சாதனையான ஆரம்பம் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறத்.

அஜீத், தமன்னா, விதார்த் நடித்த ‘வீரம்’ படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழில் மட்டும் இந்த படம் ரூ.7 கோடி வசூல் செய்தது. அதன்பின்னர் பொங்கல் விடுமுறை நாட்கள் என மொத்தம் நேற்று வரை உள்ள ஆறு நாட்களின் மொத்த வசூல் ரூ.40 கோடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ரூ.17.8 கோடி வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரம்பம் படத்தின் வசூலைக்காட்டிலும் ரூ.6கோடி அதிகம் என கூறப்படுகிறது.

வீரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.45 கோடி ஆகும்., இதன் தற்போதைய வசூல், இன்னும் எதிர்ப்பார்க்கப்படும் வசூல், சாட்டிலைட் உரிமை வசூல், மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு வசூல் என சேர்த்து மொத்தம் ரூ.,90 கோடி வசூலாகும் என கூறப்படுகிறது.

மேலும் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வீரம் படம் கூடுதலாக அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கோவை விநியோகிஸ்தர் கூறினார். ஆரம்பம், வீரம் என தொடர்ந்து இரு வெற்றிகளை கொடுத்துள்ளதால் அஜீத் மிகவும் குஷியாக இருக்கிறார்.

தனது கால் ஆபரேஷனை கூட தள்ளிவைத்துவிட்டு அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Wednesday, January 15, 2014

கமலஹாசனுடன் இணையும் கே.பாலசந்தர்...!



கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். ‘பொய்’ என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் வந்தார். அடுத்து கமலுடன் நடிக்க இருக்கிறார்.

கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிவடைந்துள்ளது. இப்படம் ரிலீசானதும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு துவங்குகிறது. இது குறித்து கமலஹாசன் கூறும் போது:

‘நான் நடிக்க உள்ள அடுத்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். இதில் கே.பாலசந்தரும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். ‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீசானதும் உத்தம வில்லன் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார்.

வீரம் வசூல் எவ்வளவு..?



அஜித்தின் வீரம் படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் திகதி வெளியானது.

நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வீரம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

 மேலும் இப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலித்துள்ளது.

மீண்டும் இணைகிறதா விஜய் - நேசன் கூட்டணி ?



இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்ககும் ஜில்லா திரைப்படம் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான ஆர்.டி. நேசனிடம் விஜய் “ உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஷோக், ஸ்ருதி சர்மா நடிப்பில் வெளியான முருகா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நேசன். ஜில்லா அவரது இரண்டாவது படமாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் இணையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tuesday, January 14, 2014

விஜய் சேதுபதியின் '' வசந்தகுமாரன் '' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் ஃபர்ஸ்ட் லுக்..!


கோலிவுட்டின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் வசந்தகுமாரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ 9 தயாரித்துவரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். ஆனந்த்குமார் இப்படத்தினை இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயனண் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி திரைப்படம் ஜனவரி 24லிலும், பண்னையாரும் பத்மினியும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதியும் வெளியாகவுள்ளன.

விஜய் சேதுபதி தற்பொழுது ஆர்யா மற்றும் ஷ்யாமுடன் புறம்போக்குபடத்திலும், இடம் பொருள் ஏவல், வன்மம், மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார்.

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்



கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.

காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.

இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.

மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!

Friday, January 10, 2014

‘ஜில்லா’ ! ஜெயிக்குமா? - திரை விமர்சனம்...




ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற…

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

Wednesday, January 8, 2014

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா?






அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம்.

ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட தோற்றமா? இது தான் ஐ திரைப்படத்தின் கதையா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஜில்லா பஞ்ச்...!



இளைய தளபதி விஜய் படங்களில் பஞ்ச் வசனங்களுக்கு என்றுமே குறைவிருக்காது. அவரது படங்களில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுபவை சண்டைக்காட்சிகள், நடனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளாகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழில் அதிக பஞ்ச் வசனங்கள் இளைய தளபதியின் படங்களில் இருக்கும். விஜய் ரசிகர்களும் இந்தப் பஞ்ச்
டயலாக்குகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

“ ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சவே நானே கேட்க மாட்டேன்” என்ற பஞ்ச் வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதைப் போலவே ஜில்லா படத்திலும் ஒரு பஞ்ச் வசனம் வெளியாகவுள்ளது.

ஜில்லா படத்தில் “ ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல இந்த ஜில்லாவுலயே இருக்க மாட்டான்” என்ற பஞ்ச் வசனம் இப்படத்தில்
இடம்பெறுகிறது. இப்படத்தின் டீசரில் வெளியாகியிருக்கும் இந்தப் பஞ்ச் டயலாக் ஏற்கெனவே ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்து எழுத ஆரம்பித்துவிட்டனர் என்பது கூடுதல் செய்தி.

விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில், நேசன் இயக்கத்தில்,
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி
10ல் வெளியாகிறது.

Tuesday, January 7, 2014

உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?


என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.

இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.

இரண்டில் "எது ஜெயிக்கும்?"
"நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
"எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?
"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"

நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....

சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?

யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது மற்ற சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா?
காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.

"சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி.

"உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"

என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.

ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம்  எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜை  பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது.

"தைரியமாக  சொல் நீ மனிதன்தானா?
இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்"

என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம்.

 திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க,
சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க,
திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
 டாடியும் மம்மியும் திட்றாங்க'

தீராத தம்மு வேணும்
திட்டாத அப்பு[அப்பா] வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்...


என்று அது அழுது  புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?

சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.

ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.

நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.

நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார்.

தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
"பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
"அதற்கு என்ன செலவாகும்?"
"பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
"நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
"மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.


" நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய்.

சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.

தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?

திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.

சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?

இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை

•இனி  தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை,

•பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை,

•இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை,


•ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை
என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?

'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?

Monday, January 6, 2014

``அப்பா`` ஆன “விக்ரம்``...!



ஷங்கர் இயக்கத்தில் “விக்ரம் “நடித்துள்ள படம் “ஐ”. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்டு வருகிறார்.

தாண்டவம், ராஜபாட்டை உள்பட சில படங்கள் தோல்வி காரணமாக இப்போது ரொம்பவே உஷாராகி வருகிறார் விக்ரம். அவர் சில நாட்களாக நடித்த “கரிகாலன்” படமும் கிடப்பில் போடப்பட்டதால், இனி அதுபோன்ற பிரச்னைகள் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மற்ற மொழிகளிலும் வெளியான தரமான கதைகளாக இருந்தாலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த “த்ரிஷ்யம்” படத்தை பார்த்து அசந்து விட்டார். மோகன்லாலின் நடிப்பும், படத்தின் கதையும் அவருக்குள் ஏறபடுத்திய தாக்கம் காரணமாக அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் கமல் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தும் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது விக்ரமே முன்வந்திருப்பதால், அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் விக்ரம் நடிப்பதற்கு சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அஜித்துடன் மோதும் சத்யராஜ்..!



நக்கல் மன்னன் சத்யராஜ் நடித்துள்ள கலவரம் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சத்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் கலவரம் திரைப்படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வம் இயக்கியுள்ளார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இக்கதை இருக்குமென்றும் கூறப்படுகிறது. யுனிவர்சல் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் முறையே ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள்
வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஏற்கெனவே இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சத்யராஜின் கலவரம் திரைப்படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14ல் வெளியாகுமா அல்லது ஜனவரி 10 லேயே வெளியாகுமா என்பது சரியாகத் தெரியவில்லை.

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்



சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள்.

அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை.

இன்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.

உதயநிதியின் “நண்பேன்டா“...



உதயநிதி ஸ்டாலின் நண்பேன்டா படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சந்தானத்துடன் 'நண்பேன்டா' என்ற தனது சொந்தப் படத்தில் இணைகின்றார்.

இயக்குனர் ராஜேஷின் இணை இயக்குனரான ஜெகதீஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

ராஜேஷ் இயக்கி நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் சந்தானம் பேசி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'நண்பேன்டா' என்ற வசனமே இந்தப் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.



தற்போது இணையதளத்தில் இந்த லோகோவை வெளியிட்டுள்ள உதயநிதி, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி, சந்தானம் மற்றும் நடிகை காஜல் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பொறுப்பினையும், பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவையும் ஏற்றுள்ளனர்.

 
back to top