மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகள பைனலில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற ரஷிய வீராங்கனை தத்யானா கோட்டோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவருடைய சாதனை அழிக்கப்பட்டு, அந்தப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முதலிடத்தைப் பிடித்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச தடகள சம்மேளனத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கப் பதக்கமும், அமெரிக்காவின் கிரேஸ் உப்ஷா வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் யூனிஸ் பர்பர் வெண்கலப் பதக்கமும் வென்றதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அஞ்சு பாபி ஜார்ஜ் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அஞ்சு பாபி ஜார்ஜ், “2005 உலக தடகள பைனல் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக இந்திய தடகளம் சம்மேளனம் தெரிவித்தது.
அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். எனது 9 ஆண்டுகால காத்திருப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. எனது காலத்தில் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ரஷிய வீராங்கனைகள் சிலர் மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என நினைத்தேன்” என்றார்.