.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, August 12, 2013

மனதில் உறுதி வேண்டும்! சுதந்திர தினம் - சிறப்புக் கட்டுரை!









    ஆகஸ்டு 15, 2013, இந்தியாவின் 67 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, சுதந்திரதின சிறப்பு உரையாற்றுவது வழக்கம். பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங், இந்தியாவின் 67 வது தனது சுதந்திர தின சிறப்பு உரையை ஆற்ற இருக்கிறார். மற்ற தலைவர்களின் உரையைவிட, பிரதமரின் சுதந்திரதின சிறப்பு உரைக்கு மதிப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவோம்.


அடிமைத் தளத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கத் தவறுவதில்லை. செயற்கைக்கோள் அனுப்புவதில் நாம் மற்ற நாடுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்பி இருக்கிறோம். இதற்கு முழுமுதற் காரண கர்த்தாவாக விளங்கியவர் நமது முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம். தொடர்ந்து அவர் கொடுத்த ஊக்கத்தினால் இந்தத் துறையில் நாம் சிறந்து விளங்குகின்றோம். முன்பு இருந்ததைவிட இப்போது நம் இந்தியா, அணு ஆயுத உற்பத்தியிலும் முன்னேறியிருக்கிறது, உலக மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் நாம் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இளைஞர்களின் கல்வி ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கிராமப்புற வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட அதிக அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அவ்வப்போது இயற்கைப் பேரழிவு ஏற்பட்ட போதிலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப் பட்ட விஷயங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளின் கனவு ஓரளவுக்கு நனவாகியிருக்கிறது என்றும், வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெற இன்னும் நாம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதும் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வேண்டுகோளாகும்.



     இந்தியா சுதந்திரம் அடைந்து விட்ட பிறகு, அடுத்த பத்தாண்டுகளில் தொழில் துறையில் கண்ட வளர்ச்சி விகிதம், பின் வருகின்ற அடுத்தடுத்த பத்தாண்டுக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, அந்த வளர்ச்சி விகிதத்தின் அளவு வீழ்ச்சி நிலையில் தான் உள்ளது என்பது இந்திய அறிஞர்களின் கருத்து. அப்படி இருந்த போதும், சமூக முன்னேற்றத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியைப் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் பொருளாதாரத்தில் சற்றுப் பின் தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். சுதந்திர தினத்தின் போது மட்டுமே, நமது நாட்டின் வளர்ச்சியை மட்டும் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளுகின்ற நம் நாட்டுத் தலைவர்கள், வளர்ச்சி அடையாத பல துறைகளை இன்னும் அடையாளம் காணமுடியவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை இந்தியாவோடு ஒப்பிடும் போது பல துறைகளில் பின் தங்கி இருப்பதற்கு நாட்டை ஆளும் தலைவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணமாக அமைந்து விடுவதை நம் அனுபவத்தில் உணர்கிறோம்.



   “இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்” என்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் ஆற்றிய உரை உலகின் தலைசிறந்த பேச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறதே தவிர, அதைக் கடைப்பிடிப்பவர்கள் இன்று இருக்கிறார்களா?… என்ற கேள்விக்கு விடை காண முடியவில்லை.


   இன்று சுதந்திரதின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அதே சமயத்தில், நம் நாட்டில் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சுதந்திர நன்னாளிலாவது நாட்டில் நிலவும் பிரச்சினைகளையும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற வழியையும் பற்றி சற்று நினைவு கூர்வோம்.


    வல்லரசு நாடுகளோடு நம் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்ப்பதோடு முடிந்து விடுகிறது. வல்லரசாவதற்கான வழியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறோமே தவிர இன்று வரை இந்தியா வல்லரசாவதற்கு எடுக்கும் முயற்சிகள் பல தேக்க நிலையில் உள்ளது.


     சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்களைப் பற்றி நாலு வார்த்தைகளைச் சொல்லி, இனிப்பு வழங்கி விட்டால் அன்றய சுதந்திரதினம் அன்றோடு மறக்கப்பட்டு விடுகிறது என்பதே இன்றைய உண்மை நிலை. சுதந்திரத்துக்கு முன் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளின் கனவுகள் எல்லாம் கடந்த 66 வருடங்களில் முழுவதுமாக நிறைவேற்றப் பட்டுள்ளதா?. என்ற கேள்விக்கு எவரும் இன்னும் பதில் சொல்ல முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 வருடத்திற்கு பின்னும் இந்த வினாக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்னவென்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு.


   ஒவ்வொரு முறை சுதந்திர தினம் வரும் போது, கொடியேற்றும் விழாக்களைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவதில் அரசுக்கு இருக்கின்ற அக்கரை, நாட்டின் அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளில் கவனம் செலுத்தப்பட்டாலும், அதிக அளவில் முன்னேற்றம் இல்லை. சுதந்திரப் போராட்டத் தியாகிகளின், சுதந்திர இந்தியாவைப் பற்றிய எதிர்காலக் கனவுகள் நனவாக வேண்டுமெனில், இளைய தலைமுறையினரை நல்வழிப் பாதையில் நடத்திச் செல்லுகின்ற மனஉறுதி அரசுக்கு வரவேண்டும்.



    நாட்டை ஆக்கப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, அரசாங்கத்துக்கும், குடிமகனுக்கும் இருக்கின்ற கடமைகள் ஏராளம். இன்று இந்தியா எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளையும் அதனைத் தீர்க்கின்ற வழிமுறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அதைச் செயல்படுத்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்தியா வல்லரசு நாடாகும் கனவை நனவாக்க முடியும் என்பதே வல்லுனர்களின் கருத்து.



    அரசியல் தலைவர்கள், தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் செய்யும் செலவுகளைக் கணக்கிட்டால் கோடியைத் தாண்டி விடுகிறது, அந்தக் கோடிக்கணக்கான பணத்தில், ஒரு கிராமத்தைத் தத்து எடுத்து, அதனை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்.



     அன்றாடம் நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினால், கொலை கொள்ளை, தீவிரவாதம் போன்ற செய்திகள் இடத்தை நிரப்புகின்றன. தனிநபர் ஒழுக்கத்தில் அக்கறை இல்லாததால், இன்று தீவிர வாதத்தின் கையில் படித்த இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள், தகுதி, திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியும்.



    இந்தியனின் இரத்தத்தில் பிழிந்து எடுக்கப்பட்ட பணமெல்லாம், அந்நிய நாடுகளில் கருப்புப் பணமாக தஞ்சம் அடைந்து விட்டது. மதம் என்ற பெயரில் மடாதிபதிகளின் ஆஸ்ரமத்துக்குள், கணக்கில்லாமல் அழியாத் தங்கமென அடக்கலம் அடைந்து விடுகிறது. குற்றங்களைத் தடுக்க இந்தியாவில் சட்டங்கள் பல இருந்தும் அதை நிறைவேற்றுவதில் இன்னமும் தடுமாற்றம் காணப்படுகிறது.



    “ஊழலற்ற இந்தியா” உருவாக ஒத்துழைப்போம் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் தவறாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, அதைச் சரிவரப் பின்பற்றாமலேயே 67 ஆண்டுகள் கழிந்து விட்டது. சுதந்திரத்துக்குப் பின்னால் வந்த அனைத்துத் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகச் சூளுரைத்துத் தோற்றுப் போகிறார்களே தவிர, உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி காண முடியவில்லை.



     நெடுஞ்சாலை வழித்தடங்கள் சரியில்லை, வாகன நெரிசல்களுக்கு விடை இல்லை, நெடுஞ்சாலைகள் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் குறுஞ்சாலைகள் ஆகி விட்டதால், விரைவான வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. முறையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தில் வழியிருந்தாலும், ஊழல், லஞ்சம் போன்றவற்றால் சட்டத்தை முறையாகச் செயல் படுத்தமுடியவில்லை.



    சத்தியம், தர்மம், நேர்மை, சட்டம், ஒழுங்கு, உண்மை இவைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்வதைத்தான், தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் அசோகச் சக்கரம் விளக்குகிறது. அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசத்தலைவர்களிடம் இருந்த நேர்மை, கடமை, நாட்டுப் பற்று, நாணயம், நேரம் தவறாமை போன்றவற்றை, என்றைக்கு இந்திய இளைஞர்களிடம் காந்தியக் கொள்கையோடு காண்கிறோமோ!.. அன்று தான் உண்மையான சுதந்திர தினத்தை நாம் அனுபவித்துக் கொண்டாட முடியும்.
இன்று மஹாகவி பாரதி உயிருடன் இருந்திருந்தால், அவரின் பாட்டுத்திறத்தால், இன்றைய வையத்தைப் பற்றி இப்படித்தான் பாடியிருப்பார்!….



மனதில் உறுதி வேண்டும்,
அரசியல் தலைவர்களின் வாக்கினிலே நேர்மை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கயவர்களின் கைவசமாவதைத் தடுக்க வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும், அந்தக் காரியம்
கையூட்டு பெறாமல் நடைபெறும் நிலை வேண்டும்.

பெண் சிசுக்கொலைத் தடுத்து சுபஜனனம் வேண்டும்.
பெண் விகிதாச்சாரம் நாட்டில் பெருக வேண்டும்.

பெரிய கடவுள் (சூரியன்) காக்க வேண்டும்
பற்றாக்குறை இல்லா மின்சாரம் வேண்டும்.

மண் பயனுற வேண்டும்,
மணல் வெளிகள் அடுக்கு வீடாவதைத் தவிர்க்க வேண்டும்,

காணி நிலம் வேண்டும், அந்தக்
கனவு மெய்ப்பட வேண்டும், அதைக்
கயவர்களிடமிருந்து பேணிக்காக்க பராசக்தி அருள் வேண்டும்

பத்துப் பதினைந்து தென்னைமரம் பக்கத்திலே வேணும்
அலைபேசி கோபுரத்தை மாற்றிட வேணும், அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்.

தேசிய நதிகளுக்கோர் பாலம் அமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
தென்னகத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

மனதில் உறுதி வேண்டும்,
ஊழலற்ற இந்தியா உருவாக, எல்லோர்
மனதிலும் உறுதி வர வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும்.
தீவிர வாதத்தால், அவ்வப்போது
துவண்டு கிடக்கும் பாரதத்தைத் தூக்கி நிறுத்த,
மனதில் உறுதி வேண்டும்.

அண்ணல் காந்தியடிகளும், பண்டித நேருவும் கண்ட வருங்கால இந்தியா பற்றிய பலவிதக் கனவுகளை நனவாக்கும் மன உறுதியோடு வல்லமை மின் இதழின் சார்பாக நாமும் நம் “2013 சுதந்திரதின வாழ்த்துக்களை” மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்.

‘ஜெய் ஹிந்த்’

Thursday, August 8, 2013

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பதிப்பிற்கான தீர்வு!



 
 
 
                 பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 
 
 
 
 
 
           ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
 
இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 
 
இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 
 

Tuesday, June 4, 2013

சென்சார் டெஸ்ட் மூலம் சர்க்கரை நோய் மற்றும் ஹார்ட் பிரச்னைகளுக்கு சிகிச்சை!


4 - Health censor


இப்பொதெல்லாம்  தினம்தோறும் உருவாகும் புது வியாதிகள் மட்டுமின்றி பழைய வியாதிகளைக் குணப் படுத்த அல்ல்து கட்டுப் படுத்த புதிய வகை கருவிகளையும் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இரத்த அழுத்தத்தை அளவிடும் முறையில் கருவி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



தற்போது உபயோகத்தில் இருக்கும் கருவிக்கு மாற்று கருவியாக இதை கண்டறிந்துள்ளனர். கடிகாரம் போன்ற இக்கருவியில் உள்ள சென்சார் இரத்த குழாயின் நாடித்துடிப்பு அலையை அளவிட்டு கணிக்கும் விபரங்களை பழைய தோள்பட்டை கருவி மூலம் அனுப்புகிறது.



இதன் மூலம் இதயத்துக்கு அருகிலுள்ள அழுத்தத்தை ஏயார்டா மூலம் அறியலாம். ஏயார்டா என்பது இதயத்திலிருந்து மில்லிமீட்டர் அளவு அருகில் இருப்பது. தோள் பட்டையை விட இவ்விடத்தில் அழுத்தம் அதிகம்.ஏயார்ட்டாவின் அழுத்தத்தை அளவிட்டால் மாத்திரமே சிகிச்சை பூரணமாக இருக்கும் என்றும் மேலும் மூளை மற்றும் இதயத்திற்கு அருகில் உள்ள இரத்த அழுத்த அளவை அறிவது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு சிகிச்சைகளில் அவசியம் என்றும் விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர்..



இப்படியாக இன்றைய நிலையில் மருத்துவத் துறைகளிலும் எத்தனையோ வியத்தகு கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அவற்றுடன் புதிய வரவாக இந்த சென்சார் மருத்துவ முறையும் பெரிய அளவில் இடம்பெறக் கூடும். வருடக்கணக்காக ராணுவத்தினர் தண்ணீருக்கடியில் உபயோகப்படுத்தும் சோனார் கருவியின் செயல்பாடுகளை ஒத்த அல்ட்ரா சவுண்டு தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைமுறையில் கொண்டுவர, அமெரிக்காவின் பஃபலோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். சோனாரின் சிறியதாக்கப்பட்ட வடிவைமைப்புடன் உள்ள கருவியை மனித உடலினுள் பொருத்துவதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர்.



உயிரியல் மருத்துவத்தின் முன்னேற்றமான இந்தக் கண்டுபிடிப்பு, நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் விதத்தில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தக் கூடும் என்று டாம்மாசோ மெலோடியா என்ற மின்பொறியியல் துணைப் பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.



இத்தகைய தொழில்நுட்பம் பத்து வருடங்களுக்கு முன்னரே வளர்ச்சி அடையத் துவங்கியது. ஆனால், ஆப்போது, ரேடியோ மின் காந்த அதிர்வெண் அலைகள் மூலம் சென்சார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் அதிக வெப்பம் வெளிப்பட்டது. மேலும், இத்தகைய மின்காந்த அலைகள், மனித தோல், தசை, திசுக்கள் போன்றவற்றில் ஊடுருவிச் செல்ல அதிக சக்தி தேவைப்பட்டது.



அத்துடன் மனிதனின் உடலில் 65 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால், அல்ட்ரா சவுண்ட் கதிர்களின் பயன்பாடு எளிதாக இருந்தது. அதனால், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித உடலினுள் பொருத்தப்படும் பேஸ்மேக்கர், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கணிக்கப் பயன்படும் கருவி போன்றவற்றை இயக்குவது எளிதாக இருக்கும் என்று டாம்மாசோ தெரிவித்தார்.



இதனை ஒத்த முறையில், ரத்தத்தில் குளுகோஸ் அளவை அறிவிக்கும் சென்சார்களை பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் அளவை கண்காணித்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய இன்சுலின் கருவியிலிருந்து தேவைப்பட்ட இன்சுலினை ரத்தத்தில் கலக்கச் செய்தல் சாத்தியமாகக் கூடும். இந்தத் தொழில்நுட்பத்தில் சாத்தியமாக்கக்கூடிய பயன்பாடுகள் அதிகம் உள்ளன. நாம் இவற்றிலிருந்து என்ன பெறமுடியும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும் டாம்மாசோ கூறினார்.



Soon, wireless body sensors to treat diabetes, heart failure!



 

 For decades, the military has used sonar for underwater communication.Now, researchers at the University at Buffalo are developing a miniaturized version of the same technology to be applied inside the human body to treat diseases such as diabetes and heart failure in real time.The advancement relies on sensors that use ultrasounds – the same inaudible sound waves used by the navy for sonar and doctors for sonograms – to wirelessly share information between medical devices implanted in or worn by people.


Saturday, June 1, 2013

இந்தியாவின் வளர்ச்சிக்குரிய தங்கச்சாவி சூரிய மின்சாரம்!






ஆசியாவிலேயே மாபெரும் சூரிய மின் சக்திப் பண்ணை 5,000 ஏக்கர் கரட்டுநிலத்தில் “”சாரங்க பூங்கா” என்ற பெயரில் குஜராத்தில் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 500 மில்லியன் வாட் (மி.வா.) மின் உற்பத்தி, இதர மாவட்டங்களில் 105 மி.வா., ஒட்டுமொத்தமாக குஜராத்தில் 605 மி.வா. என்பது ஒட்டுமொத்த இந்திய சூரிய மின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு.

ஒவ்வொரு நாளும் குஜராத் மாநிலத்தில் 30 லட்சம் வாட் மாசற்ற மின்சக்தி, சூரியஒளி மூலம் பெறப்பட்டு 10 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் அளவில் “கார்பன்-டை-ஆக்சைடு’ புகை, ஓசோன் மண்டலத்தை அடையாமல் பாதுகாக்கப்பட்டு அதற்குரிய “கார்பன் கிரெடிட்’ பெற்றுவர முயன்று வருகிறது.

குஜராத்தின் தலைநகரமான காந்திநகர் முழுவதுமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சார வழங்கல் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது. காந்தி நகரில் மட்டும் வீட்டுக்கூரை மீது சூரிய ஒளிப்பலகை ஈர்ப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு 1.4 மில்லியன் வாட் மின்சக்தி பெறப்படுகிறது. 150 இடங்களில் சூரிய ஒளி ஈர்க்கும் மின்பலகைகள் 1 கிலோ வாட் முதல் 200 கிலோ வாட் வரை “வீட்டுக் கூரை திட்டம்’ அநேகமாக ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டட உச்சிகளிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் உள்ள கடற்கரைப் பிரதேசங்களின் சூழ்நிலை மட்டுமே காற்றாலை மின்திட்டத்திற்கு ஏற்றது என்பதைத் தமிழ்நாடு நிரூபித்தும்விட்டது. இந்தியாவிலேயே சூரிய மின்சக்தி உற்பத்தியில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளதைப்போல், தமிழ்நாடு காற்றாலை மின்திட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தாலும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சூரிய ஒளி இருந்தும் போதிய முன்னேற்றம் இல்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. சூரிய ஒளியை வீணாக்காமல் மின்சக்தியாக மாற்றும் திட்டங்களை துரிதகதியில் செயல்படுத்தினால் உலகத்திற்கே இந்தியா ஒளி வழங்கும் நாள் தூரத்தில் இல்லை.

குஜராத்துக்கு அடுத்தபடியாக சூரிய மின் உற்பத்தியில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. அதேசமயம் சுயதேவைப் பூர்த்தி நோக்கில் அவரவர் வீட்டுத்தேவையை அவரவர் நிறைவேற்றிக்கொள்ளும் வீட்டுக்கூரை மின் திட்டத்தில் பிகார், கர்நாடகம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா வழிகாட்டலாம்.

சூரிய மின்சக்தித் திட்டத்தில் தமிழ்நாடு தாமதமாக நுழைந்துள்ளதால் மிகவும் பின்தங்கியுள்ளது. அதேசமயம் இன்று ஆட்சியில் உள்ள மாநில அரசு மிகவும் சிறப்பான ஒரு திட்டத்தை குஜராத்தை முன்னோடியாகக் கொண்டு செயலாற்றத் தொடங்கிவிட்டது.

முதலாவதாக, புதுவீடு, கட்டடம் எழுப்புவோர் சூரியமின் பலகையை நிறுவ வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனை சட்டமாக இயற்றப்படாமல் வேண்டுகோளாகவோ, கடமையாகவோ கட்டட உரிமையாளர்கள் ஏற்க வேண்டும். எனினும் இந்த வேண்டுகோள் நிபந்தனை தமிழ்நாட்டில் சூரிய சக்தி ஆற்றலின் தேவையை உணரச்செய்து சூரிய மின்சக்தி சாதனங்களுக்குப் போதுமான தேவையை உணரச் செய்யும். சூரிய சக்தி மின் உற்பத்தியை நான்கு வகையாக மாநில அரசு ஒழுங்குபடுத்தியுள்ளது.

முதல் வகையில் தற்சார்புள்ள சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள். இவர்கள் பெரிய முதலீட்டுத் திட்டத்தின்கீழ் இயங்குவார்கள். இவர்கள் தாம் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளியில் விற்கலாம். “கிரிட்’டுக்கும் வழங்கலாம்.

இரண்டாவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் – மாநில அரசின் நிபந்தனையை ஏற்றுத் தங்களின் சொந்த உபயோகத்திற்காக உற்பத்தி செய்யலாம்.

மூன்றாவதாகக் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகள் அவரவர் தங்கள் மாடிக்கு மேல் சூரிய ஒளி மின் பலகைகளை நிறுவிக்கொண்டு சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் மாணவர்களுக்கு சூரிய மின் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவைக் கற்பிக்கலாம்.

நான்காவதாக ஒவ்வொரு வீட்டிலும் மின்தேவையை நிறைவேற்ற மின்பலகைக் கூரைகளை நிர்மாணித்துக் கொள்ளலாம்.

கடந்த அக்டோபரில் மாநில அரசின் சூரிய மின் உற்பத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டு இன்றைய நிலையில் மாநிலத்தின் சூரிய மின் உற்பத்தி 7 மெகாவாட் மட்டுமே. எனினும் மின்வாரியத்தின் ஓர் அங்கமான “டாஞ்சட்கோ’ 226 மெகாவாட் சூரிய மின்உற்பத்திக்குரிய திட்டங்களை ஏலம் எடுத்துள்ளது.

2014-இல் இந்த இலக்கை அடைவது என்பது தமிழ்நாட்டின் திட்டம். தனிப்பட்ட முறையில் “இந்தியா கிரீன் பவர்’ நிறுவனம் மூலம் 300 மெகாவாட் சூரிய மின் உற்பத்திக்குரிய சூரியப் பூங்கா நிறுவப்பட்டுள்ளது. முதலில் கூறியபடி தமிழ்நாட்டின் சூரிய மின்உற்பத்திக் கொள்கையின் நான்கு அங்கங்களும் இணைந்து, இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சூரிய மின் உற்பத்தி 1,000 மெகாவாட் இலக்கை அடையும். நாளையை யோசிப்பது நன்றே, இன்றைய நிலை என்ன?

சென்னைக்கு வெளியே எல்லா மாவட்டங்களிலும் காற்றாலை மின்சாரம் தடையுற்றால் மணிக்கு ஒருமுறை சுத்தமாக மின்சாரம் இருக்காது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வரை இருள் சூழ்ந்த வாழ்வுதான். இரவில் மின் விசிறி ஓடாதபோது கொசுத் தொல்லை. நாம் கொசுக்கடி தாங்காமல் காலைச் சொறிவோம். அரசு விவரம் புரியாமல் தலையைச் சொறியும். “இன்வர்ட்டர் சார்ஜ்’ ஆகாமல் வேலை செய்யாது. மின்சார அமைச்சர் காரணம் சொல்வார். இன்னும் 1 மாதம், 2 மாதம், 3 மாதம், 4 மாதம் என்று இழுத்து இழுத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எல்லாம் அச்சடித்த காகிதங்களாக, அடுக்கு அடுக்காக, அலமாரிகளில் உள்ளன. ஏட்டில் எழுதப்பட்டவற்றை எப்படி நிறைவேற்ற முடியும்? ஒவ்வொரு கட்டத்திலும் எழக்கூடிய பிரச்னைகள் எவை? மாநில அரசை நம்பி சூரிய மின் திட்ட ஏலம் எடுத்தவர்களுக்கு சூரிய மின் உற்பத்தி சாதனங்களை மானிய விலையில் பெற்றுத்தர முடிந்ததா? மைய அரசு ஒதுக்கிய மானியங்களை வழங்க முடிந்ததா? ஒரு பிரபல நிறுவனம், வாங்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி சாதனங்களுக்குரிய மானியம் பெற முடியாமல் தத்தளிப்பதாகக் கூறப்படுகிறது. கிரிட்டுக்கு அனுப்பப்படும் சூரிய மின் சக்திக்கு லாபகரமான விலை உடனுக்குடன் கிடைக்க எதுவும் உறுதிமொழி உள்ளதா? எனினும் மாநில அரசு சூரிய மின்சக்தி ஆற்றலை உயர்த்த அறிவிப்புகளைச் செய்து வருகிறது. விவசாயத்தில் சூரிய ஆற்றலைக்கொண்டு மின்மோட்டார் குழாய்களை இயங்க வைப்பதில் முழு அளவு மானியம் வழங்குவதாகத் திட்டம் உள்ளது. புதிய திட்டம் இருக்கட்டும். நீர்ச்சிக்கன நடவடிக்கைக்காக நுண்ணீர்ப் பாசனம் வழங்கக்கூடிய சொட்டுநீர்க்குழாய், “ஸ்பிரிங்க்ளர்’, “ரைன்-கன்’ இணைப்புகளுக்கும் அவ்வாறே திட்டம் அறிவித்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்டன. எத்தனை விவசாயிகள் பயன்பெற்றனர்? எவ்வளவு இணைப்புகள் வழங்கப்பட்டன? எவ்வளவு பாசன நீர் மிச்சமானது? திட்டமிடுவதோ, அறிவிப்புகளை வழங்குவதோ பெரிதல்ல. அவை செயல்படும் முறையில் வேகம் வேண்டும்.

வேளாண்மை அலுவலர்கள் அரும்பாடுபட்டு அரசுப் பதவியைப் பெற்றுள்ளனர். மானிய விலையில் சான்றிதழ் விதைகள் வழங்கப்படுவதைப் பார்க்கும்போது புதிய பல விவசாயத் திட்டங்களால் நன்மை விவசாயிகளுக்கா, விவசாய அலுவலர்களுக்கா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

விவசாயிகளைத் தேடி விவசாய அலுவலர்கள் வந்து தேவைகளை நிறைவேற்றிய காலமெல்லாம் காமராஜர் ஆட்சிக்குப் பின் தொடரவே இல்லை. சரி, இவற்றையெல்லாம் மறந்துவிடலாம். மறப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? அதேசமயம் சூரிய மின் சக்திப் பயன்பாட்டில் சில ஆக்கப்பூர்வமானவற்றை வரவேற்போம்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி) சில ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் குமாரவேலால் தொடங்கப்பட்ட “சூரியஜால’ திட்டத்தின் சாதனைகளை நினைத்து மகிழ்வோம். சென்னை – மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள முத்துக்காட்டில் சூரிய சக்தி கொண்டு உவர் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுப் போதிய நிதி உதவியில்லாமல் நின்றுபோனது. இப்போது சோலார் சாதனங்களின் விலை வீழ்ச்சியால், நின்றுபோன சூரியஜால திட்டம் பேராசிரியர் ஜகதீஷ்குமாரால் மீண்டும் தொடங்கப்பட்டு சோலார் நன்னீர்த்திட்டம் வெற்றியுடன் செயலாற்றுவதாகச் செய்தி.

சோலார் ஃபோட்டோ ஓல்ட்டிக் பேனல், கிரிட்டுடனோ டீசல் ஜெனரேட்டருடனோ இணைக்கப்படுவதால் சூரிய ஒளி இல்லாத நேரத்திலும், இரவிலும் தொடர்ந்து நன்னீர் எந்திரம் வேலை செய்யும். மலிவான “சோலார் செல்’ தயாரிப்பு, “சோலார் ஹீட்டர்’, “சோலார் ஃபிரிட்ஜ்’ போன்றவையும் ஐ.ஐ.டி. சூரிய ஜால திட்டத்தில் உள்ளது. இப்படிப்பட்ட தொழில்நுட்ப அறிவை மாநில அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துமானால் மக்கள் மகிழ்வர்.

இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி – மின்சாரம் இல்லையென்றால் தொழில் இல்லை, விவசாயம் இல்லை. இதுநாள்வரை வழக்கமான மின்சக்தியைப் பெரும்பாலும் அனல் மின்சாரமாகப் பெற்றோம். அனல் மின்சாரம் நிலக்கரியை நம்பியுள்ளது. நிலக்கரி ஊழல் இந்தியத் தாய் மீது பூசிய கரியாகிவிட்டது. நிலக்கரி இருந்தும் வழங்கலில் தடங்கல் நீங்கவில்லை. கரி மின்சாரம் மாசுடையது. அணு மின்சாரம் ஆபத்தானது. இயற்கை எரிவாயுவும் பூமியைக் குடைந்து எடுக்கப்படுவதால் பூகம்ப ஆபத்து ஏற்படலாம். மரபுசாரா எரிசக்தியில் சூழல் கேடு இல்லாத மாசற்ற பொன்னாகக் கிடைப்பது சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் என்பதில் ஐயம் இல்லை.

“பயோ-மாஸ்’ மின்சாரமும் (விறகு, உரிமட்டை) மாசற்றது. மாசற்ற மின்சாரத்தில் மலிவானது சூரிய மின்சாரமே, ஆரம்பச் செலவுதான் அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின்சாரம் செயல்படுமானால் (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில், சூரியஒளி குறைந்த நேரத்திலும், இருட்டு நேரத்திலும் கிரிட் அல்லது டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறும் மாற்று ஏற்பாட்டுடன் இணைந்த சோலார் சிஸ்டம் ) வீட்டில் “ஒளி பிறக்கும்’. ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் மேற்கூறிய வழியில் சூரிய மின்சாரம் செயல்படுமானால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகும்.

ஒவ்வொரு விவசாயப் பண்ணையிலும் “சோலார் மோட்டார்’ குழாய் இணைப்பு இருந்தால் பசுமை வளம் பெறும். இந்தியாவின் வளர்ச்சிக்குரிய தங்கச்சாவி சூரிய மின்சாரம். குஜராத் நல்ல வழிகாட்டி. சூரிய மின்சார உற்பத்தியில் இந்திய மாநிலங்கள் குஜராத்தை முன்மாதிரியாக வைத்துக் காகிதத் திட்டம் தீட்டுவதுடன், தீட்டப்பட்ட காகிதத் திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற முயலவும் வேண்டும். “”ஞாயிறு போற்றுதும்”, “”ஞாயிறு போற்றுதும்”. வாழ்க பாரதம்.



நன்றி! ஆர்.எஸ். நாராயணன்!


 
back to top