.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, August 21, 2013

கவிதைகள் சில...


முள்ளின் திறமையை பார்
காலால்
மிதித்தவனை
கையால் எடுக்க
வைக்கிறது!

லுவான காரணங்கள்
வலுவான வெற்றியை
தேடி தரும்...

வாழ்வில்
தோல்வி அதிகம்
வெற்றி குறைவு
என வருந்தாதே ....
செடியில் இலைகள்
அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும்
ஒரு சில மலருக்கே
மதிப்பு அதிகம்.

ன் புன்னகையில்
என் வாழ்கையை
தொலைத்தேன்.
உன் மௌனத்தில்
என் இதயத்தை
தொலைத்தேன்.
ஆனால் ,
உயிரே உன் நினைவுகளை
மட்டும் தொலைக்க
முடியவில்லை...

லகத்தில்
உறவுகள் இறுதி வரை
வருமா என்று
தெரியாது.
ஆனால்,
உண்மையான நட்பு
இதயத்தின்
ஓசை கேட்கும்
வரை வரும்...

மெளனமாக தான்
அழுகின்றேன்
ஆனாலும்,
எப்படியோ தெரிந்துவிடுகிறது !
என்
கண்களுக்கு...

வாழ்வதும் , வெல்வதும்
ஒருமுறை தான்!
அது
யாருக்காக என்பது மட்டும்
தெரிந்தால்
வாழ்க்கையின்
அர்த்தம்  புரிந்துவிடும்!


கொண்டு செல்ல
எதுவும் இல்லை
உலகில்...
கொடுத்து செல்ல
எல்லாம் உள்ளது
உடலில்.
காலம் காத்திருப்பதில்லை
ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்!

முல்லைப்பெரியாறு நாயகன் பென்னிகுக்!



தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில் தவறாமல் ஓருவர் படம் இடம் பெற்றிருக்கும். இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது. அங்குள்ள பாலார்பட்டி, குழியனூர் போன்ற கிராமங்களில் பொங்கல் பண்டிகையைவிட, இவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது. விவசாயிகள் இன்றைக்கும் தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு இப்படி பலவிதங்களில் நினைக்கும் அந்த பெரியவர் ஒரு ஆங்கிலேயர் என்றால் இன்னும் ஆச்சரியம் அதிகரிக்கும்.

ஆம் அவர்தான் பென்னிகுக்! தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரளா அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர். இங்கிலாந்தில் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்ந்தேதி பிறந்த ஜான் பென்னிகுக், பொறியாளர் படிப்பு முடித்த கையோடு பொதுப்பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, அன்றைக்கு நம்மை ஆண்டுகொண்டு இருந்த ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்து , அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டதுதான் முல்லை பெரியாறு அணையாகும்.
அடர்ந்த காட்டுக்குள் அட்டை பூச்சி உள்ளிட்ட பல விஷப்பூச்சிகளின் கடி, புலி உள்ளிட்ட பல கொடிய மிருகங்களின் தாக்குதல், எப்போதும் பெய்யும் அடைமழை, மின்சாரமின்மை, உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுமந்து கொண்டு உயிரை பணயம் வைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் 1887ம்ஆண்டு அணை கட்டும் முயற்சி துவங்கியது.

அணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பெய்த பேய்மழையால், பெருகிவந்த வெள்ளத்தால் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்கு மேல் பணம் ஒதுக்கமுடியாது, ஆகவே அணை கட்டும் முயற்சியை கைவிட்டு திரும்ப வருமாறு ஆங்கிலேயே அரசு பென்னி குக்கிற்கு உத்திரவிட்டது.தனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, அணைகட்டுவதற்கு பெருந்துணையாக இருந்து, புலிகளுக்கும், கொடிய விஷப்பூச்சிகளுக்கும் உயிரைகொடுத்த, பல தமிழர்களின் கனவு திட்டமான அணை கனவாகவே போக வேண்டியதுதானா? என்று கவலைப்பட்டவர், எப்பாடு பட்டாவது அணையை கட்டியாக வேண்டும், எடுத்த முயற்சியை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், அணை கட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று தனது சொத்துக்களை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு மீண்டும் அணை கட்டும் முயற்சியில் இறங்கினார்.

இரண்டாவது முயற்சியின் போது இன்னும் பலர் இறந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர் ஆனாலும் எதற்கும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் போராடி அன்றைய நவீன தொழில் நுட்பத்தின்படி அணை கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில் தண்ணீர் கடல் போல தேக்கிவைக்கப்பட்டது. பென்னிகுக் துவங்கி தென்தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.

அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில் சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடத்திற்கு ஒரு ஓப்பந்தம் போடப்பட்டது. வீணாகப்போகும் மழைநீருக்கு ஒரு கப்பத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது. 999 வருடத்திற்கு இந்த அணையும், தண்ணீரும் தென்தமிழக மக்களுக்குதான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம் காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு என்பது பசுமை வெளியாகிவிட்டது. எப்போதும் முப்போகம்தான்.உயிர்களுக்கும், பயிர்களுக்கும் தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க பல லட்சம் மக்கள் ஆனந்தப்பட்டனர்.
அடுத்தவர் ஆனந்தப்பட்டால் பொறுக்காத இந்த பொல்லாத உலகத்தில் கேரளா மட்டும் விதவிலக்கா என்ன? மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை பெரியாறு அணை கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள் வந்தது. அதற்கு பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு பொய்க்காரணங்களை காட்டி அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து, இன்றைக்கு அணையே இருக்கக்கூடாது என்ற நிலையை எடுத்துள்ளது.

இந்த அணை மட்டும் இல்லை என்றால் வானம் பார்த்து விதைத்து வாழும் தென் தமிழக விவசாய மக்களின் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமுடியவில்லை.தமிழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும்.உயிராலும், தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும் மனிதநேயத்துடன் தன் சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங்கருணையிலும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பெருஞ்செல்வமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் முல்லைபெரியாறு அணையை இப்போது போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வித்திட்ட பென்னி குக்கின் பிறந்த நாளான வருகின்ற 15/01/12ம் தேதி தென்மாவட்ட மக்கள் என்று இல்லை மொத்த தமிழகமே கொண்டாடி மகிழ்ந்தாலும் சந்தோஷமே.

சாதனைப்பெண் - மேரி க்யூரி!


நமக்கு ஏற்படும் பல நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்துவதற்கு உதவும் ‘ரேடியம்’ என்ற மாபெரும் விஷயத்தை கண்டுபிடித்த  பெருமைக்குரிய பெண் மேரி க்யூரி.
 
Marie Curie

வாழ்வில் ஒரே ஒரு முறையாவது உலகின் சிறந்த விருதான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டுமென்று உலகம் முழுக்க பலர் வெறித்தனமாக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, தன் வாழ்வில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி இவர். ஆனால் இந்தப் பெண் விஞ்ஞானி இந்தச் சாதனையை அடைவதற்காக தன் உடல் நலன், குழந்தைகள், காதல் என்று எத்தனை விஷயங்களை இழக்க வேண்டி வந்தது என்பதெல்லாம் ஒரு உருக்கமான சோகக் கதை!

போலந்து நாட்டின் வார்ஸா நகரில் வசித்த ஒரு ஆசிரியர் குடும்பம் அது...

மேரியின் அப்பா சீர்திருத்தப் பள்ளி உட்பட பல பள்ளிகளை நடத்தி வந்தார். குழந்தைகள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். மேரியின் அம்மா பெண்கள் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர். இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மேரிதான் கடைக்குட்டி.

மேரிக்கு நான்கு வயதானபோது, அவளது சித்தப்பா அந்தக் குடும்பத்தோடு வந்து தங்க விரும்புவதாக ஒரு கடிதம் போட்டார். அந்தக் கடிதம் தான் மேரியின் இந்தச் சாதனைக்கே ஒரு ஆரம்பமாக அமைந்தது.

‘தாராளமாக வந்து தங்குங்கள்’ என்று அந்த சித்தப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியபோது மேரியின் குடும்பத்துக்கு அவரைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் தெரியாது. கடுமையான காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சித்தப்பா! இப்போது எய்ட்ஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய்களைக் கண்டு நாம் பயன்படுவது போலவே அந்தக் காலத்தில் காசநோய்க்கு பயப்பட்டார்கள். பயந்தது போலவே மேரியின் அம்மாவுக்கும் அவரிடமிருந்து காசநோய் தொற்றிக் கொண்டது. இந்த நோயின் காரணத்தால் போலந்தில் இருந்து அவ்வபோது தெற்கு பிரான்ஸில் இருந்த வெப்பப் பகுதிகளுக்கு சென்று நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டியநிலை மேரியின் அம்மாவுக்கு. சொந்த வீட்டிலேயே தனி அறையில் வாழவேண்டிய கட்டாயம் வேறு. ஒரே கூரையின்கீழ் இருந்தும் அம்மாவை பிரிந்து வாழ்ந்ததுதான் மேரி சந்தித்த முதல் சோகம்.

அதோடு தீரவில்லை... மேரிக்கு ஒன்பது வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்போதுதான் மேரியின் மனதில் ஒரு உறுதி ஏற்பட்டது.

மேரி மட்டுமல்ல... அவரது தாய்நாடான போலந்தும் ஒரு பெரிய சோதனையை அப்போது சந்தித்துக் கொண்டிருந்தது. தாய் நாட்டை கைப்பற்றிய ரஷ்யாவிற்கு எதிரான புரட்சியில் மேரியின் தாத்தா, அப்பா எனக் குடும்பமே பங்கேற்க, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது.

நல்ல வேளையாக வாத்தியார் வீட்டுப் பிள்ளைகள் என்பதாலேயே மேரியோடு பிறந்தவர்கள் அனைவருமே, அவரவர் வகுப்புகளில் முதல் ரேங்க் எடுத்தார்கள். ஆனால் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெண்களுக்கு எந்த வசதியும் அந்த ஊரில் இல்லை. அதிகபட்சம் பள்ளி இறுதி வகுப்பு முடித்துவிட்டு உள்ளூரில் ஒரு டீச்சராக வேலை செய்யலாம் என்கிற நிலைதான் பெண்களுக்கு! மேரிக்கு எப்படியும் மேற்கொண்டு படிக்க வேண்டும்... மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் ஏதாவது, புதிதாக கண்டு பிடித்து, மனித குலத்துக்கு உதவவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. தவிர, பள்ளி இறுதிப் படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றிருந்தார் மேரி. முடிவாக மேரியும் அவளது அக்கா ப்ரோனியாவும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். அதன்படி முதலில் மேரி ஒரு வீட்டில் வேலைக்குச் சேரவேண்டும். இந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு அவள் அக்கா, பாரீஸ் நகரில் தங்கி மருத்துவம் படிப்பார். அக்கா மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தவுடனே, தங்கை மேரியின் பட்டப்படிப்புக்கு அவர் பண உதவி செய்ய வேண்டும்!

இந்தத் திட்டத்தின்படி ஒரு வீட்டில் வேலை செய்து அந்தப் பணத்தை தன் அக்காவுக்கு அனுப்பி வந்தார் மேரி. கடமையோடு காதலும் வந்தது. அந்த வீட்டின் முதலாளியின் மகனும் மேரியும் ஒருவரையருவர் நேசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்தக் காதல், கல்யாணத்தில் முடியவில்லை. காரணம் மேரி ஒரு பணக்காரி இல்லையே!

தனது முதல் காதல் இப்படி பொடிப்பொடியானதும் மேரி மனதளவில் உடைந்துவிட்டாள். இனி படிப்புதான் தனக்கு எல்லாமே என்று முடிவெடுத்தாள். சொன்ன வாக்குப்படியே அக்கா, தன் படிப்பு முடித்தவுடனே மேரி படிக்க உதவினாள். மேரியும் பாரிஸ் நகருக்குச் சென்று ஆறு வருடங்கள் கொண்ட பட்டப்படிப்பை படிக்க ஆரம்பித்தாள். அங்கும் கூட, கல்லூரியில் படித்த இரண்டாயிரம் பேரில் வெறும் இருபத்து மூன்று பேர்தான் பெண்கள்! அக்காவுக்குத் திருமணமான பின்பு ஒரு ஃப்ளாட்டில் தனியேதான் வசித்துக் கொண்டிருந்தார் மேரி.

அந்த நாட்களில்தான் துடிப்பான இளைஞனான பியரி க்யூரியைச் சந்தித்தாள் மேரி. ஏற்கெனவே பீலோ எலக்ட்ரிசிட்டியைக் கண்டுபிடித்தப் பெருமை அந்த இளைஞனுக்கு இருந்தது. இருவருமே அவரவர் காதலில் தோல்வியுற்று இருந்த நேரம் அது. ஒரே மாதிரி நிலை... தவிர இருவருக்குமே விஞ்ஞானத்தில் பெரும் விருப்பம். ‘நாம் கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டான் அந்த இளைஞன்.

கல்யாணம் என்றதுமே மேரிக்கு இயல்பான குடும்ப வாழ்க்கையால் தன் லட்சியம் பாதிக்கப்படுமே என்ற தயக்கம் வந்தது. ‘‘அதனால் என்ன? அடுத்தடுத்த ப்ளாட்களில் தனித்தனியாக வசிப்போம். மற்றபடி கணவன் மனைவியாக இருப்போம்’’ என்று சொன்னார் பியரி.

இவர்கள் கல்யாணம் செய்துகொள்வதில் வேறொரு சிக்கலும் இருந்தது. பியரி போலந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. மேரி அவரைத் திருமணம் செய்துகொண்டால் மீண்டும் போலந்துக்குத் திரும்பி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி மக்களுக்கு சேவை செய்வது என்பது முடியாத காரியமாகிவிடும். ஆனால் பியரியோ இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘அதனாலென்ன... நான் போலந்துக்கு வருகிறேன். அங்கு உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து சில மாதங்களில் இருவருக்குமே ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து வாழ முடியாது என்று புரிந்து விட்டது. எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

காதலால் இணைந்த அந்த ஜோடி அடுத்த பதினான்கு வருடங்களும் கதிரியக்கப் பொருள்களைப் பற்றியே ஆராய்ச்சி செய்தார்கள். அதற்கு முந்தைய ஒரு வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியத்தைச் சுற்றியே அவர்களது பல ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. எப்போதுமே எந்தவொரு சாதனையிலுமே ஒரு ஆணை ஒத்துக்கொள்ளும் அளவுக்கு சிலர் பெண்களை ஒத்துக் கொள்வதில்லை. மேரியின் ஆராய்ச்சி விஷயத்திலும் இது நடந்தது. எல்லாமே கணவர் பியரியின் ஐடியாக்கள்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வாய் அடைபடும்படி, தான் அவ்வப்போது எழுதி வைத்திருந்த பல விஞ்ஞானக் குறிப்புகள் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டார் மேரி க்யூரி.

அணுக்கள் உள்ளன என்பதையே கி.பி.1900 வரை எல்லா விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அணுக்களுக்குள்ளே நடைபெறும் கதிரியக்கம் குறித்து மேரி சொன்னபோது சக விஞ்ஞானிகள் அதை வெறும் கேலியாகவே பார்த்தார்கள். ஏற்கவும் மறுத்தனர். ஆனால் கடைசியில் மேரி க்யூரியின் முடிவுதான் சரியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.  தோரியம் என்ற கதிரியக்க இயல்பு கொண்ட பொருளைக் கண்டுபிடித்தார் மேரி.


கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வேறொரு பெரிய ரகசியத்தையும் கண்டுபிடித்தார்கள். என்ன அது? கதிரியக்கம் என்பது ரசாயனப் பொருள்கள் ஒன்றோடொன்று இணைவதினால் ஏற்படுவது அல்ல என்பதையும், குறிப்பிட்ட பொருளின் (அதாவது அணுவின்) இயல்பைக் கொடுப்பது கதிரியக்கம்தான் என்பதையும் கண்டுபிடித்தனர். ஆக ரேடியம் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தது மேரிதான்.

இத்தனைக்கும் தம்பதியர் இருவரும் சோதனைகள் செய்த பரிசோதனைச் சாலை மிகவும் சிறியது. ‘அட... ஏதோ உருளைக் கிழங்கு கிடங்கு மாதிரி இருக்கிறது. இதிலா பரிசோதனை செய்கிறார்கள்!’ என்று கேலி செய்தார்கள் மற்றவர்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை இந்த தம்பதியர்.

மனைவி மேரி செய்த இந்தப் பரிசோதனையின் ஒரு பகுதியாக ரேடியத்தை தன் தோலின் மீதே ஊற்றிக் கொண்டார் கணவர் பியரி. இதனால் அவர் கையில் கட்டி ஏற்பட்டது. அப்படி செய்த ஆராய்ச்சியின் மூலமாக ‘தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத கட்டிகளுக்கு’ சிகிச்சை செய்ய ரேடியத்தை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார் மேரி. ‘கியூரி தெரபி’ என்றே இதற்குப் பெயரிட்டார்கள் இந்தத் தம்பதியர்.

அணுவின் மர்மங்களை மேலும் அறிய கணவரும் மனைவியும் முயற்சித்தார்கள். இதன் விளைவாக ‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ என்ற புதிய கோட்பாடு உருவானது. அறிவியலின் மிகப்பெரிய திருப்புமுனை இது.

அந்த வருடம் தான் மேரி தம்பதிக்கு ஒரு அதிர்ஷ்ட வருடம்! இந்தக் கண்டு பிடிப்புக்காக உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு கணவன்_மனைவி என இருவருக்குமே கிடைத்தது!... விருது கிடைத்த பின்பு தங்கள் மோசமான உடல்நிலை பற்றி சுத்தமாக மறந்து விட்டு, இன்னும் அதிக ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் இந்தத் தம்பதியர்.

ஆனால், யுரேனியம் போன்ற பொருள்களில் இருந்து ரேடியத்தைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. டன் கணக்கான பாறைகளிலிருந்து பத்தில் ஒரு பங்கு ரேடியத்தைத் தயாரிக்கவே மேரிக்கு பல ஆண்டுகள் பிடித்தன.

உலகமே ரேடியத்தின் அற்புத சக்தியைப் பாராட்டியது. இந்தப் பாராட்டிலும், தன் லட்சியத்தை நிறைவேற்றும் மகிழ்ச்சியிலும் மேரி, தன்னுடைய உடலின் ஆரோக்கியக் குறைவை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருந்துவிட்டார்.

கதிரியக்க சாம்பிள்களைத் தொடர்ந்து கையாண்டதால் அந்த தம்பதியர் விரல்களின் நுனி கறுத்து இறுகிப் போனது. உடல் இளைத்தது. மகள் ஐரனே பிறந்த பிறகு உருவான அடுத்த குழந்தையும் குறைப்பிரசவத்தில் இறந்து போனது. இந்தக் குடும்பக் கவலைகள், அவர்கள் நோபல் பரிசு பெற்ற சந்தோஷத்தையே மழுங்கடித்தது. கதிரியக்கத்தால் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளால் நோபல் பரிசைக்கூட நேரில் சென்று வாங்க முடியவில்லை இவர்களால்!

அந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு டாய்லெட் இணைக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினார்கள் இந்தத் தம்பதியர். பிரான்சில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி அப்போது உண்டு.

இந்தத் தம்பதிக்கு பொதுமக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்ததன் காரணமாக, பிரான்ஸ் அரசு இவர்களின் கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக நிதி உதவியும்கூட செய்தது.
 
கணவர் பியரியின் உடல்நிலையோ வேகமாக சீரழிந்துக் கொண்டிருந்தது. மேரியாலும் முழுமையாக ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியவில்லை. இரண்டாவதாகப் பிறந்த ஈவா என்ற மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் வேறு சேர்ந்து கொண்டது. ஒரு மழைக்கால மதியத்தில் தனியே வெளியே நடந்துக் கொண்டிருந்த பியரியின் பார்வை திடீரென மோசமடைய, எதிரில் வந்த குதிரை வண்டியின் முன் விழுந்தார். குதிரையும், வண்டியும் அவர் மேல் ஏற, உடனடியாக இறந்துவிட்டார்.

மேரியால் இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. இறந்தது அன்பான கணவன் மட்டுமல்ல, ஆராய்ச்சியிலும் கூடவே வந்த துணையும் ஆயிற்றே! பியரி பணிபுரிந்த இடத்தில் மேரியைப் பேராசிரியராக பணிபுரிய அனுமதித்தது பிரான்ஸ் பல்கலைக் கழகம். பிரான்ஸ் நாட்டில் இப்படியரு உயர் பதவியை வகித்த முதல் பெண்மணியே மேரிதான்!

சிறிது நாட்களிலேயே குடும்பத்தை நிர்வகித்து வந்த மாமனாரும் (பியரியின் அப்பா) இறந்தவுடன் வீட்டில் குழந்தைகள் மேலும் இடிந்துபோனார்கள். இதற்கு நடுவே மேரியின் வாழ்க்கையை மாற்றிய இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு ஆதரவு தேவைப்பட்ட மேரியின் மனதுக்கு இதம் தந்தது பால் என்பவரது பேச்சு. இவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்றாலும் மனைவிக்கும் அவருக்கும் கடும் கருத்துவேறுபாடுகள். இந்த நிலையில்தான் பாலும் மேரியும் காதல் வசப்பட்டார்கள். ‘‘நீங்கள் உங்கள் மனைவியிடமிருந்து, முழுதாக பிரிந்துவிடுவதுதான் நமது இணைப்பிற்கான முதல் படியாக இருக்கும்’’ என்று ஒரு கடிதத்தை அனுப்பினார் மேரி.

ஆனால், மேரியின் போதாத காலம், இந்தக் கடிதம் பாலின் மனைவி ஜினியிடமே கிடைத்துவிட்டது. ஜினியின் அண்ணன் ஒரு நாளிதழின் ஆசிரியர். மேரியின் புகழைக் கெடுக்கும் வகையில், அந்தக் கடிதத்தின் சில பகுதிகளைத் தன் தினசரி பேப்பரில் பிரசுரம் செய்தார் அவர். ஏற்கெனவே, மேரி தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல... ஆனாலும் இவ்வளவு புகழ் பெறுகிறாளே என்று மேரியைக் குத்திக் கிளற சமயம் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு இது பெரிய வாய்ப்பாகப் போய்விட்டது. இந்த விஷயத்தையே சாக்காக வைத்து அவரை அவமானப்படுத்தி, எப்படியாவது அவரை பிரான்சிலிருந்து வெளியேற்றத் துடித்தார்கள். மேரியின் பரிசோதனைச் சாலையைச் சுற்றி வந்து கலாட்டா செய்தார்கள்.

‘‘என் அறிவியல் பணிகளையும் அந்தரங்க வாழ்க்கையையும் இணைத்துப் பேசுவது சரியல்ல. என் வாழ்க்கைத் தொடர்பான வதந்திகளின் நிழலை எனது ஆராய்ச்சிகளின் மீது படிய விடுவது அனாவசியம்’’ என்று சொன்னார் மேரி. ஆனால் மேரிக்கு எதிரான கலவரங்கள் மேலும் மேலும் அதிகமாகத்தான் ஆயின.

இந்தக் காலகட்டத்தில், ரேடியம் மற்றும் பொலானியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக மேரிக்கு மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேரிக்கு எதிர்ப்புகள் மிக அதிகமாக இருக்கவே ‘விருது பெறும் நிகழ்ச்சிக்குக் கூட நீங்கள் நேரடியாக வரவேண்டியது கட்டாயமல்ல’ என்றார்கள் நோபல் குழுவினர். ஆனால் மனத்துணிவுடன் நேரில் சென்றே பரிசைப் பெற்றுக்கொண்டார் மேரி.

தொடர்ந்து செய்து வந்த ஆராய்ச்சிகளால் தன் இரண்டு பெண்களுக்கும் இளம் வயதில் போதிய கவனிப்பை மேரியால் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் வளர வளர தாயும் மகள்களும் மிகவும் பாசத்துடன் ஒன்றுபட்டார்கள். இசையில் ஆர்வம் கொண்ட ஈவா, வீட்டிலேயே இருந்து கொண்டு நிர்வகிக்க, மேரியும் அவரது மூத்த மகள் ஐரனேவுமாக குண்டு காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கத் தொடங்கினார்கள்.

இதற்காக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள முந்நூறு மருத்துவ மனைகளுக்குச் சென்று வந்தார்கள். உடலுக்குள் குண்டு தங்கிய இடத்தை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து ராணுவ டாக்டர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

ஐரனேவுக்கு இருபத்தெட்டு வயதானபோது அவருக்குத் திருமணம் நடந்தது. கணவர் ஜீவியெட்டும் ஒரு விஞ்ஞானியே என்பதுதான் சிறப்பம்சம்! இந்தக் கணவன் மனைவி இணைந்து செயற்கைக் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார்கள். இதற்காக இந்தத் தம்பதிக்கும் நோபல் பரிசு வழக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரான்ஸ் நாட்டின், அணுசக்தி திட்டத்தின் சிற்பியாகவே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் ஜீவியெட். ஆக கணவன், மனைவி, மகள், மருமகன் என நால்வருமே நோபல் பரிசு பெற்று பெரும் சாதனையைப் படைத்தார்கள்!

‘ரேடியம் இன்ஸ்டிடியூட்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார் மேரி. ஆனால், கதிரியக்கம் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளின் காரணமாக, மேரிக்கு கண்களில் கேடராக்ட், காதில் எப்போதும் ஒலி, தோலில் மாற்றம் போன்ற பல பாதிப்புகள் இருந்து கொண்டேயிருந்தன. ஆனால் மேரி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தன்னால் மனிதகுல முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஓய்வில்லாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி க்யூரி, கடைசியில் புற்று நோயால் இறந்தார். அவரது சாம்பல் பாந்தியாம் என்ற கவுரவமிக்க இடத்தில் இன்னும்கூட வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 

தகவல் தொகுப்பு!


"The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.

abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.

ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

a,b,c,d  என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை.

காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.

சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

இந்துக்களின் பகவத்கீதை அதாவது பகவானின் கீதம் அல்லது "இறைவனின் பாடல்கள்" என பொருள்படும்.

இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அசலாம் அழைக்கும் என்பதற்கு "சமாதானம் உங்களோடிருக்கட்டும்" என்று பொருள்.

கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் என்பதற்கு "அப்படியே ஆகட்டும்" என பொருள்.

ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous
 
back to top