.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, August 21, 2013

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...

1. எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும்.
விளக்கம்: இது உண்மை அல்ல... எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதுதான் உண்மை.

2. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

3. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

4. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
 
5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

6. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

7. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
 
8. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

9. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

10. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

11. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது  கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

12. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

திருமண பொருத்தங்கள்!


திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக  இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது  பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.
அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.
தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.

5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் – குதிரை; பரணி, ரேவதி – யானை; கார்த்திகை, பூசம் – ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் – பாம்பு; திருவாதிரை, மூலம் – நாய்; புனர்பூசம், ஆயில்யம் – பூனை; மகம், பூரம் – எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி – எருமை; சித்திரை, விசாகம் – புலி; அனுஷம், கேட்டை – மான்; பூராடம், திருவோணம் – குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி – சிங்கம்.
இந்த மிருக அம்சங்களில், குதிரை – எருமை, யானை – சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு – எலி, பசு – குதிரை, எலி- பூனை, கீரி – பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம்,  மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு – சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு – கடகம், துலாம்; மிதுனத்துக்கு – கன்னி; கடகத்துக்கு – விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு – துலாம்; கன்னிக்கு – மிதுனம், மீனம்; துலாத்துக்கு – கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு – கடகம், கன்னி; தனுசுக்கு – மீனம்; மகரத்துக்கு -  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு – மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் – சிரோ ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

கவிதைகள் சில...


முள்ளின் திறமையை பார்
காலால்
மிதித்தவனை
கையால் எடுக்க
வைக்கிறது!

லுவான காரணங்கள்
வலுவான வெற்றியை
தேடி தரும்...

வாழ்வில்
தோல்வி அதிகம்
வெற்றி குறைவு
என வருந்தாதே ....
செடியில் இலைகள்
அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும்
ஒரு சில மலருக்கே
மதிப்பு அதிகம்.

ன் புன்னகையில்
என் வாழ்கையை
தொலைத்தேன்.
உன் மௌனத்தில்
என் இதயத்தை
தொலைத்தேன்.
ஆனால் ,
உயிரே உன் நினைவுகளை
மட்டும் தொலைக்க
முடியவில்லை...

லகத்தில்
உறவுகள் இறுதி வரை
வருமா என்று
தெரியாது.
ஆனால்,
உண்மையான நட்பு
இதயத்தின்
ஓசை கேட்கும்
வரை வரும்...

மெளனமாக தான்
அழுகின்றேன்
ஆனாலும்,
எப்படியோ தெரிந்துவிடுகிறது !
என்
கண்களுக்கு...

வாழ்வதும் , வெல்வதும்
ஒருமுறை தான்!
அது
யாருக்காக என்பது மட்டும்
தெரிந்தால்
வாழ்க்கையின்
அர்த்தம்  புரிந்துவிடும்!


கொண்டு செல்ல
எதுவும் இல்லை
உலகில்...
கொடுத்து செல்ல
எல்லாம் உள்ளது
உடலில்.
காலம் காத்திருப்பதில்லை
ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்!

முல்லைப்பெரியாறு நாயகன் பென்னிகுக்!



தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில் தவறாமல் ஓருவர் படம் இடம் பெற்றிருக்கும். இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது. அங்குள்ள பாலார்பட்டி, குழியனூர் போன்ற கிராமங்களில் பொங்கல் பண்டிகையைவிட, இவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது. விவசாயிகள் இன்றைக்கும் தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு இப்படி பலவிதங்களில் நினைக்கும் அந்த பெரியவர் ஒரு ஆங்கிலேயர் என்றால் இன்னும் ஆச்சரியம் அதிகரிக்கும்.

ஆம் அவர்தான் பென்னிகுக்! தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரளா அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர். இங்கிலாந்தில் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்ந்தேதி பிறந்த ஜான் பென்னிகுக், பொறியாளர் படிப்பு முடித்த கையோடு பொதுப்பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, அன்றைக்கு நம்மை ஆண்டுகொண்டு இருந்த ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்து , அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டதுதான் முல்லை பெரியாறு அணையாகும்.
அடர்ந்த காட்டுக்குள் அட்டை பூச்சி உள்ளிட்ட பல விஷப்பூச்சிகளின் கடி, புலி உள்ளிட்ட பல கொடிய மிருகங்களின் தாக்குதல், எப்போதும் பெய்யும் அடைமழை, மின்சாரமின்மை, உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுமந்து கொண்டு உயிரை பணயம் வைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் 1887ம்ஆண்டு அணை கட்டும் முயற்சி துவங்கியது.

அணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பெய்த பேய்மழையால், பெருகிவந்த வெள்ளத்தால் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்கு மேல் பணம் ஒதுக்கமுடியாது, ஆகவே அணை கட்டும் முயற்சியை கைவிட்டு திரும்ப வருமாறு ஆங்கிலேயே அரசு பென்னி குக்கிற்கு உத்திரவிட்டது.தனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, அணைகட்டுவதற்கு பெருந்துணையாக இருந்து, புலிகளுக்கும், கொடிய விஷப்பூச்சிகளுக்கும் உயிரைகொடுத்த, பல தமிழர்களின் கனவு திட்டமான அணை கனவாகவே போக வேண்டியதுதானா? என்று கவலைப்பட்டவர், எப்பாடு பட்டாவது அணையை கட்டியாக வேண்டும், எடுத்த முயற்சியை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், அணை கட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று தனது சொத்துக்களை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு மீண்டும் அணை கட்டும் முயற்சியில் இறங்கினார்.

இரண்டாவது முயற்சியின் போது இன்னும் பலர் இறந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர் ஆனாலும் எதற்கும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் போராடி அன்றைய நவீன தொழில் நுட்பத்தின்படி அணை கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில் தண்ணீர் கடல் போல தேக்கிவைக்கப்பட்டது. பென்னிகுக் துவங்கி தென்தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.

அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில் சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடத்திற்கு ஒரு ஓப்பந்தம் போடப்பட்டது. வீணாகப்போகும் மழைநீருக்கு ஒரு கப்பத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது. 999 வருடத்திற்கு இந்த அணையும், தண்ணீரும் தென்தமிழக மக்களுக்குதான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம் காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு என்பது பசுமை வெளியாகிவிட்டது. எப்போதும் முப்போகம்தான்.உயிர்களுக்கும், பயிர்களுக்கும் தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க பல லட்சம் மக்கள் ஆனந்தப்பட்டனர்.
அடுத்தவர் ஆனந்தப்பட்டால் பொறுக்காத இந்த பொல்லாத உலகத்தில் கேரளா மட்டும் விதவிலக்கா என்ன? மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை பெரியாறு அணை கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள் வந்தது. அதற்கு பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு பொய்க்காரணங்களை காட்டி அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து, இன்றைக்கு அணையே இருக்கக்கூடாது என்ற நிலையை எடுத்துள்ளது.

இந்த அணை மட்டும் இல்லை என்றால் வானம் பார்த்து விதைத்து வாழும் தென் தமிழக விவசாய மக்களின் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமுடியவில்லை.தமிழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும்.உயிராலும், தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும் மனிதநேயத்துடன் தன் சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங்கருணையிலும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பெருஞ்செல்வமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் முல்லைபெரியாறு அணையை இப்போது போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வித்திட்ட பென்னி குக்கின் பிறந்த நாளான வருகின்ற 15/01/12ம் தேதி தென்மாவட்ட மக்கள் என்று இல்லை மொத்த தமிழகமே கொண்டாடி மகிழ்ந்தாலும் சந்தோஷமே.
 
back to top