.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 9, 2013

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மீண்டும் இடம் பெறுகின்றது!

 


ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட மல்யுத்தப் போட்டிகளை மீண்டும் அனுமதிப்பதாக ஒலிம்பிக் கமிட்டி நேற்று அறிவித்தது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் கடந்த வெள்ளியன்று துவங்கிய கமிட்டி கூட்டத்தில் வரும் 2020 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினை டோக்கியோ பெற்றது.

நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மல்யுத்ததிற்கு ஆதரவாக 49 வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24 வோட்டுகளும், ஸ்குவாஷ் விளையாட்டிற்கு ஆதரவாக 22 வோட்டுகளும் கிடைத்தன.

இதன் மூலம், ஏழு மாதங்களுக்கு முன்னால் பலருக்கும் ஆச்சரியத்தை எற்படுத்தும்விதத்தில் முக்கிய போட்டிகளிலிருந்து விலக்கப்பட்ட மல்யுத்தம் நேற்று மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றது. இந்த முடிவானது, ஒலிம்பிக் போட்டியில் தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள மல்யுத்த அமைப்பான ஃபிலா மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரத்தின் வெற்றியைக் குறிக்கின்றது.

தங்களுடைய அமைப்பினை மேம்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளின் விளைவே இந்த அறிவிப்பிற்குக் காரணமாகும் என்று ஃபிலா அமைப்பின் தலைவரான நேனட் லலோவிக் தெரிவித்தார். இதன் முயற்சிகள் தொடரும் என்றும், தாங்கள் ஒலிம்பிக் இயக்கத்திற்கு சிறந்த முறையில் துணை நிற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் விலக்கப்பட்ட இந்த ஏழு மாதங்களில் தாங்கள் சரியான முறையில் பாடம் கற்றுக்கொண்டதாக நேனட் தன்னுடைய இறுதி விளக்கத்தில் கூறினார். மூன்று விளையாட்டு அமைப்புகளும் தங்களின் இறுதிவிளக்கங்களை அளித்தபின்னர் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொது மக்கள் பூஜை செய்வார்கள். இந்த சிலைகள் ஒரு வாரத்துக்கு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் ராமகோபாலன் பங்கேற்கிறார்.

sep 9 lord-ganesha-

 


மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது.திருச்சியின் அடையாளமாக திகழும் மலைக்கோட்டையில் தாயுமானசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். மேலே அமைந்துள்ள கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் கீழே அமைந்துள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ராமபிரான், விபீஷணன், ஜடாயு, அனுமன் ஆகியோர் வழிபட்ட தலமாகும். இக்கோவிலில் வேண்டிக்கொண்டால் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இக்கோவிலில் இன்று முதல் வருகிற 22–ந் தேதி வரை 14 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய அரசு வெளியீடு!



அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

sep 9senior citizen-- 2
 


மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:::

*முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் முதியோர் சந்திக்க உள்ள சவால்கள், அச்சுறுத்தல்கள் என்ன என்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை முதியோர் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர், துணையின்றி தனிமையாக உள்ளனர் என்பதை கணக்கிட வேண்டும்.

*அந்தந்த மாவட்ட போலீஸ் தலைமையகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி முதியோருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

*வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, போதுமானதாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். முதியோர் வசிக்கும் பகுதியில் போலீஸ் ரோந்து அதிகரிப்பது அவசியம்.

*முதியோர் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போன்ற தகவல் தொகுப்பு பராமரிக்கப்பட்டு அவ்வப்போது மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

*குறிப்பாக செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர் வசிப்பிடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்கள் யார், யார், வெளியே இருந்து எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தகைய வேலையாட்களின் குற்ற பின்னணி போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

*அந்த வேலையாட்களை யாராவது ஒருவர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்திருக்க வேண்டும். தவறு ஏற்படுமானால், அந்த நபர் அல்லது அவரை பரிந்துரை செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.

*இந்த ஏற்பாடுகளை போலீஸ் துறையின் மூத்த அதிகாரிகள், அவ்வப்போது கண்காணித்து, தேவைப்படின் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாக முதியோருடன் கலந்துரையாட வேண்டும்.

*மேலும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

*விற்பனை பிரதிநிதிகள்,வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பவர்கள் போன்றவர்கள், எளிதில் முதியோரை அணுகா வண்ணமும், முதியோரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலான செயல்கள் தடை செய்ய வேண்டும்.

*போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும், முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு அவசியமாகிறது!



புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

sep 9 sim_cards

 



இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்ததால் இந்த விஷயம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
back to top