.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 22, 2013

குளு..குளு..கொடைக்கானல்..! - சுற்றுலாத்தலங்கள்!


 குளு..குளு..கொடைக்கானல்..!
குளு..குளு..கொடைக்கானல்

கொடைக்கானல்-இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக்கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ்மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலங்களில் இங்கு தங்கியிருந்தனர்.
இனி..சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
வெள்ளி நீர்வீழ்ச்சி:

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.கொடைக்கானல் ஏரியின் அழகை ரசித்தவாறு பெரிய அன்னங்களைப் போல வடிவமைத்த வண்ணப் படகுகளில், பெடல்களை மிதித்து இயக்கியவாறு உல்லாசமாகச் செல்லலாம்

ப்ரயண்ட் பூங்கா:

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். 
வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது.
டால்பின் மூக்கு:

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது.
பசுமை பள்ளத்தாக்கு;

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.

தலையர் நீர்வீழ்ச்சி
:
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.

குணா குகைகள்:

கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை
என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்
.
ஊசியிலை காடு;

இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

பியர் சோழா அருவி

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம்

1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
இந்த ஆய்வுக்கூடம் காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்:

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஓர் இடம் உண்டு என்றால், அது தூண் பாறைதான். கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தூண் பாறை. இது மேகங்கள் தொட்டுச் செல்லும் அளவில் உயர்ந்துள்ளது. இரு பிரிவுகளாகப் பிரிந்து வான் உயரக் கம்பீரமாக நிற்கும் இப்பாறைகள் அதன் அமைப்பினால் "தூண் பாறைகள்' என அழைக்கப்படுகின்றன.
இப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறையின் அமைப்பைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விடுவர். மாலைப் பொழுதில் அடிக்கும் வெயில் இப்பாறையின் மீதுவிழும்போது பொன் நிறமாகக் காட்சியளிப்பது ஓர் அரிய காட்சியாகும்.
பாம்பர் அருவி:

இந்த அருவி கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:

1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
அமைதியான சூழல், அருகே அழகிய ஓடை, சில்லென்ற காற்று வீசுவதால் இந்த இயற்கைக் காட்சியை கண்டு ரசிக்கவும் இயற்கையின் கொடையை அனுபவிக்கவும்
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் எதுவென்றால் அடுத்த முறையும் இங்கு வரவேண்டும் என்பது. மேலும் இப் பகுதிகளில் உள்ள மலைத் தோட்டங்கள் இயற்கைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இப் பகுதியில் காலை முதல் மாலை வரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை எப்போதும் அதிகம் இருக்கும்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை, இந்த கோடை விடுமுறையில் நீங்களும் கண்டு மகிழுங்கள்
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.
செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை
கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில் உள்ளது
அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில்.உள்ளது

மானும்..ஓநாயும் (நீதிக்கதை)!


 
 
 
ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.
 


அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.
 


ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த 


சின்ன மான் திரும்ப வரவில்லை..


'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்


சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..


அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..


உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்


பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.


ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.


அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.


சின்ன மான் உயிர் தப்பியது.


கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.


ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது.

ஓவியப் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு!!




மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பீரோ ஆஃப் எனர்ஜி எபிசியின்சி (BEE) நிறுவனம், 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்காக இந்திய அளவில் ஓவியப்போட்டியை நடத்துகிறது. இப்போட்டி இருபிரிவாக நடத்தப்பட இருக்கிறது. இருபிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

ஏ - பிரிவுக்கான (4, 5, 6-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Save money - Practice energy conservation, 2. Save electricity, illuminate every home, 3. Save one unit a day, keep power cut away.

பி - பிரிவுக்கான (7,8,9-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Energy conservation - A vision of the future,  2. Energy conservation is the foundation of energy security, 3. Energy efficiency is a journey not destination.

இப்போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இந்த ஓவியப்போட்டி நடைபெறும். இப்போட்டியை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது முதல்வரோ நடத்துவார். இந்தப் போட்டிகள் அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்பாகவே அப்பள்ளிகளில் நடத்தி முடிக்கப்படும். பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலத் தலைநகரில் இந்த இரண்டாம் கட்டப் போட்டி நடைபெறும். இப்போட்டி நவம்பர் 12-ஆம் தேதி இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும்.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அனைவரும் அகில இந்திய அளவில் நடைபெறும் ஓவியப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் வரும் டிசம்பர் மாதம்  12-ஆம் தேதி, தில்லியில் இறுதிப்போட்டி நடைபெறும்.

தேசிய மின்சக்தி சேமிப்பு தினமான டிசம்பர் 14-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குவார்.

பள்ளி அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் பங்கேற்புப் சான்றிதழ் கிடைக்கும். இரண்டு பிரிவுகளிலும், மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடிப்பவருக்கு ரூ.8 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

ஏ பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

பி பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 3 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும்.

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் பேக், கைக் கடிகாரம், பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவிலான போட்டிகளுக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கும், அவருடன் வரும் பெற்றோர்களுக்கும் போக்குவரத்துச் செலவு வழங்கப்படும்.

விவரங்களுக்கு:www.emt-india.net/ncec2013/NCEC2013.htm
 

தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை சரியில்லையே!


ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் – அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.


ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் – அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன.


ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் – அவனது கதாபாத்திரங்கள் அறம் உரைப்பவையாக, மானுட வாழ்வியலை உணர்த்துபவையாக இருந்தால், அவை உயிருள்ள பாத்திரங்களாகவே உணரப்பட்டு உதாரணபுருஷர்களாக்கப்படுகின்றன. அவ்வகையில்தான் என்றைக்கோ எழுதப்பட்ட பல்வேறு வகையான இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்முடன் உணர்வுபூர்வமாக உறவாடிக் கொண்டிருக்கின்றன.


sep 22 - cinema


நாவல் இலக்கிய உலகில் கதை மாந்தர்களாக வார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் “அரவிந்தன்’, பொன்னியின் செல்வன் “வந்தியத்தேவன்’, புத்துயிர்ப்பு “நெஹ்லூதவ்’ போன்ற பல உன்னத கதாபாத்திரங்களை நாம் பட்டியலிட முடியும். போற்றிப் பின்பற்ற மட்டுமல்ல, எவரும் பின்பற்றக் கூடாத எச்சரிக்கைகளாகவும் சில கதாபாத்திரங்கள் வார்க்கப்படுவது உண்டு.


அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திர வார்ப்புகளில் மிகப்பெரியதொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரைப்படங்களின் கதாநாயகர்களாக படைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் குதர்க்கவாதம் செய்கிறார்கள். கூச்சம் எதுவுமற்று குழுவாகச் சேர்ந்து மது குடிக்கிறார்கள். பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்றவைத்து, புகைப்பது என்பது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டிய இயல்பான நடைமுறையென்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள். பெற்றோருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எவ்வகையிலும் கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் படிப்பதாகக் காட்டப்பட்டால், அங்கு படிப்பது ஒன்றைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். குறிப்பாக, பெண்களை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள். தங்களது ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் கேலி செய்கிறார்கள்.



எதைச் செய்தேனும் “எடுபட்டு’ விடவேண்டும், “பெருவெற்றி’ பெற வேண்டும் என்கிற வணிக வலுக்கட்டாயமே தமிழ்த் திரையின் படைப்பாளிகளை இப்படியான கதாபாத்திரங்களை படைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இளவயது ஆண்களையும், பெண்களையும், மாணவ மாணவிகளையும் ஈர்த்து, திரையரங்கில் அவர்களைக் கைதட்டவைத்துப் பெருங்குரலில் சிரிக்கவும் வைத்துவிட்டால் நமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற படைப்பாளிகளின் மனோ நிலையே இன்றைய “திரை’யின் கதாபாத்திர வார்ப்புகள் பெருவீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.


நமது சமூகத்தில் பிள்ளைகள் பதின்மவயதை அடையும்வரை அவர்களால் பெற்றோர்களுக்கு எத்தகைய சமூக இடர்பாடுகளும் நேர்வதில்லை. அதற்குப்பிறகு அதாவது பதிமூன்று வயது தொடங்கி ஏறக்குறைய இருபத்தைந்து வயதுவரை பெற்றோர்களுக்கு ஒவ்வாதவர்களாக மாறுகின்றனர். இன்று மிக எளிதாக வசப்பட்டு விட்ட அலைபேசி, இணையம், முகநூல் போன்ற தகவல் தொடர்பு ஊடக வசதிகள் இன்றைய பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளோடு பேச விருப்பமற்றவர்களாக மாற்றிவிட்டன. அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்று கவலையுற்று கருத்து தெரிவிக்கிற, அல்லது கண்டிப்பு காட்டுகிற குடும்ப உறவுகளை, தங்கள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்களாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.


இன்றைய நமது பிள்ளைகள், பெற்றோர்களின் கருத்துகளுக்கும், கண்டிப்புகளுக்கும், அதற்கு முற்றிலும் எதிரான திரைக் கதாநாயகர்களின் தூண்டுதல்களுக்கும் இடையில் அகப்பட்டு அல்லற்படுகின்றனர்.



எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும்,
 எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?


தங்களது பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும், படிப்புக்கேற்ற வேலைகளைப் பெற்று அவர்களின் வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தில் பிள்ளைகளைப் பெற்ற அனைவரும் காண்கின்ற பெருங்கனவாகும். ஆனால், அவர்களது கனவுகளுக்கு முற்றிலும் முரணான குணக்கூறுகளைக் கொண்டவர்களைத்தான் அவர்களது பிள்ளைகள் திரையரங்குகளில் கதாநாயகன்களின் வடிவில் பார்த்து ரசித்துப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசக்கின்ற ஒரு நிஜமாகும்.


குடும்பம் எனும் அமைப்பும் விதம் விதமான பணிப் பயிற்சி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து பெரும் பொருள்செலவில் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிவரும் இளைய சமுதாயச் சக்திகளை, அவர்களுக்கு வெளியே இருக்கிற ஓர் ஊடகம் ஒரே நாளில் மாற்றிவிடுகிறது. மது அருந்தக் கூடாது என்பதை எழுத்துகளின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகவியலாளர்கள், மது அருந்தும் காட்சிகளை விதம்விதமான கோணங்களில் வண்ணமயமாக ஒளி ஒலி காட்சிகளாகக் காட்டுகிறவர்களிடம் பரிதாபமாகத் தோற்று விடுகின்றனர்.



மது, புகை, வெட்டுக்குத்து வன்முறை, போக்கிரிக் கலாசாரம், பொத்தாம் பொதுவான பொறுப்பற்ற பகடித்தனங்கள் போன்ற அனைத்துக் கூறுகளுக்குமான மறைமுகமான விளம்பரப் பொதுமேடையாகவும் அவற்றையெல்லாம் உரத்த குரலில் அங்கீகரிக்கும் நிறுவனமாகவும் இன்றைய நமது தமிழ்த்திரை மாற்றப்பட்டுவிட்டது. இந்தக் கூறுகளோடு காதல் கவர்ச்சி போதையையும் போதுமான அளவுக்குக் கலந்து தந்து அது தன் வணிகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்துவிட்டு அவற்றில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயத்தோடு விளங்குகிறவர்களாக நமது பெரும்பான்மை மக்கள் இல்லை.



ஓர் இளைஞன் நல்ல தகுதிகள் ஏதுமற்றவனாக இருந்தாலும்கூட அவன் தான் சந்திக்கும் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும் தகுதியை மட்டும் உடையவனாக இருக்கிறான் என்பதே கடந்த சில ஆண்டுகளாக நமது தமிழ்த்திரையுலகம் தமது கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கும் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.


உலகின் எந்த நாட்டுத் திரையுலகமும் காதலைப் பிடித்துக்கொண்டு இதுபோன்ற ஆட்டங்களை ஆடுவதில்லை. சில கோயில்களில் பம்பையும் உடுக்கையும் சேர்ந்து பரவசம் மிகுந்த இசையை வேகவேகமாக எழுப்பி சன்னதம் வந்து ஆடும் சாமியாடிகளை உருவாக்குவது போல, நமது தமிழ்த் திரைப்படங்கள் காதல் உடுக்கையை வேக வேகமாக அடித்து அடித்து காதல் சாமியாடிகளை உருவாக்கி அவர்களை வெறி நடனமாடி வீதி உலா வரச் செய்கின்றன. வேதனை மிகுந்த இத்தகைய போக்குகளின் விளைவுகளைத்தான் நம் சமூகம் அனுபவித்து வருகிறது. பெற்றோரும் அனுபவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்தால் நமது தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுக் கூடங்கள், பாடல் பதிவுக் கூடங்கள் என ஒவ்வொன்றும் காதல் உணர்வு ஊற்றெடுக்கப் பயன்படுத்தப்படும் உடுக்கைகளாகவே தெரிகின்றன.


சிந்திக்கிற – படிக்கிற, மக்கள் குறைவாகவும், பார்க்கிற – கேட்கிற மக்கள் பெருவாரியாகவும் இருக்கிற நமது சமூகத்தில், அதிலும் படிக்கிற மக்களே கூட பார்க்கிற – கேட்கிற கலாசாரத்திற்குத் தங்களைப் பழகிக்கொண்டுவிட்ட இன்றைய சூழலில் ஊடகங்களிலேயே பெரும் ஊடகமாக } குறிப்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தாய் ஊடகமாக } நிலைபெற்றுவிட்ட திரைப்படத்தின் சமூகப்பொறுப்பு எத்தகையது என்பது உள்ளார்ந்த அக்கறையோடும், தொலைநோக்கு பார்வைகளோடும் உணரப்படவில்லை. ஒரு அபத்தத்தை எழுதுவதும், பேசி நடிப்பதும், வடிவமைப்பதும் ஒரே ஒரு முறைதான் நடக்கிறது. ஆனால், அந்த அபத்தம் எத்தனை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் வெளியாகி மக்கள் மனதில் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பதை ஊடக உலகம் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.


செய்ய வேண்டியவற்றைச் செய்வதைக் காட்டிலும், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடிகோலும். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம் எதை எதைச் செய்து கொண்டிருக்கிறது, எதை எதைச் செய்யாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். படைப்பாளிகளுக்கு இருக்கும் படைப்புரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் உரிமையாக மாறலாகாது!

 
back to top