இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.இங்குள்ள 'சாம்ராட் இயந்திரம்'என்றழைக்கப்படும் சூரியக் கடிகாரம் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவதற்கு பயன்பட்டுள்ளது. இதன் உயரம் 90அடி. இது உலகின் மிகப்பெரிய சூரியக்கடிகாரமாக கருதப்படுகிறது. இதன் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.
இங்குள்ள வானியல் கணக்கீட்டுக் கருவிகளை பளிங்குக் கற்களால் கட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.உள்ளுர் உழவர்கள் பருவநிலையை தெரிந்து கொள்ள இன்றளவும் இந்தச் சூரியக்கடிகாரம் உதவி வருகிறது. சிறப்புக்குரிய ஜந்தர்மந்தர் 1948ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. கி.பி.1875ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் மகன் இந்த நகருக்கு வருகைதந்ததையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் சிவப்பு வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தினார் ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ராம்சிங். அன்று முதல் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்கா
தவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.
எப்படிப் போகலாம்?
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஜெய்ப்பூரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகரில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவிலேயே விமான நிலையம் உள்ளது.