.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, September 27, 2013

7 வருடத்துக்கு பின் மோதும் அஜீத் - விஜய் படங்கள்!





ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். 



திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் நடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவர் நடிக்கும் படங்களில் எந்த படம் முதலில் ரீலீஸ் ஆகுமோ, அந்த படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில்தான் ‘ஜில்லா‘ படத்துக்கும் கால்ஷீட்டை ஒதுக்கி தருகிறார் மோகன்லால். இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதனால் ‘ஜில்லா’ அடுத்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபிறகு அவர் நடித்து வரும் ‘வீரம்‘ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய்அஜீத் படம் பொங்க லுக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2007ம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார் படங்கள் நேருக்கு நேர் மோதின.

கொனார்க் சூரியக்கோவில் - சுற்றுலாத்தலங்கள்!



      கொனார்க் சூரியக்கோவில்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
கொனார்க் சூரியக்கோவில்
 
"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.
 
"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர்,  முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
 
 
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.
 இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.

 பாலியல் விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.
 
 நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.
 
 இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
 
விழாக்கள்:

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம்.  சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.
 
எப்படிப் போகலாம்?

புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)




 
ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.


தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.


எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...


அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...


அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.


உடன் பீர்பால்...தன்  இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து  இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
 

நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்.
 
 

ஐபோன் விலை இந்தியாவில் குறைக்கப்பட வேண்டும்!



ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர். 


ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், மிகவும் குறைவான விலையில், போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் போன்களை குறைந்த விலையிட்டு விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். குறைந்த விலையிட்டு விற்பனை செய்வதற்காகவே, போன்களின் வடிவமப்பையும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கென மாற்றி வருகின்றனர்.



உயர்ரக போன்களின் கதி? 



இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் போன்ற உயர் ரக போன்களைத் தயாரித்து, உயர்ந்த விலையிட்டு விற்பனை செய்திடும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? இதன் போனின் சராசரி குறைந்த விலை ரூ.40,000 ஆக உள்ளது. இது உயர்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின், ஒரு மாத கால ஊதியமாக உள்ளது. இதனாலேயே, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 5 சி ஆகியவை உயர் மத்திய வகுப்பினர் மட்டும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளன. 



சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள், இந்த வகையில் அதே வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து விற்பனை செய்தாலும், அவை அனைவரும் வாங்கும் நிலையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த மத்திய தர வகுப்பினர் வாங்கும் நிலையில் எந்த போனும் கொண்டிருக்கவில்லை. முன்பு வெளியான பழைய போன்களைத்தான் விலை குறைத்து விற்பனை செய்கிறது.



ஐபோன் 5 சி - இந்தியாவிற்கு இல்லை?



ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய இரண்டு போன்களில், ஐபோன் 5 சி, பட்ஜெட் விலை போன் எனத் தெரிவிக்கப்பட்டது. ஐபோன் 5 எஸ் போனுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால், ஐபோன் 5 சி இந்தியாவிற்கான பட்ஜெட் விலை போனாக இருக்க வாய்ப்பில்லை. 



ஏனென்றால், வெளிநாடுகளில், மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்தில் இல்லாத ஐபோன் 5 சி போன் ஒன்றின் விலை 549 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி மாற்றத்தின் படி பார்த்தால், இதன் இந்திய விலை ரூ. 35 ஆயிரமாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 5 சியின் பிளாஸ்டிக் கவர் சற்றாக இதன் தரத்தினைக் குறைக்கிறது. எனவே, மக்கள் இதே வசதிகளைத் தரும், பிற நிறுவனங்களின் குறைந்த விலை போன்களை நாடிச் செல்லும் வாய்ப்புண்டு.


எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 சி, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக வேண்டும் எனில், அதன் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000க்குள் இருக்க வேண்டும். பழைய மாடல் ஐபோன்4, 8 ஜிபி திறன் கொண்டதாக இருந்தால், ரூ.22,000 எனத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய போனின் விலை இந்த அளவைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதே நல்லது.

 
back to top