.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 8, 2013

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்!




அடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன. இவற்றில் மேலாக வந்த சில போன்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. வாசகர்களின் சில குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளில், வேறு சில போன்களும் இடம் பிடிக்கலாம். இங்கு பொதுவான எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் இவை தரப்படுகின்றன.



1. சாம்சங் காலக்ஸி பேம் (Samsung Galaxy Fame):


  3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.



2. எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 - 2 டூயல் (LG Optimus L4 II Dual): 


இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3,8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.



3. நோக்கியா லூமியா 520 (Nokia Lumia 520): 


இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன். மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.



4. பானாசோனிக் டி11 (Panasonic T11): 


நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.


5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பன் ஏ76 (Micromax Canvas Fun A76): 


1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.


Click Here

கர்ப்ப கால டயட்டும் உடற்பயிற்சியும்!

Diet and exercise in pregnancy


ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி என்பார்கள். காரணம் குழந்தையை கருவில் சுமக்கும் போது பெண்கள் உடல் ரீதியாகவும்  மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம்.


கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என்று ஆரம்பித்தார் உணவு ஆலாசகர் அம்பிகா சேகர். "முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம்,  சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது". எனவே மாதுளம் பழசாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து  குடித்து அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.



நான்கு முதல் ஆறு மாதம் வரையிலான காலத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகும். தவிர கர்ப்பகாலத்தில் இருக்கும்  குழந்தைகள் ஓட்டுண்ணிகள். அவை தனக்கு தேவையான ஆகாரத்தை அம்மாவின் உடலில் இருந்தே உறிந்துக் கொள்ளும் என்பதால் தேவைக்கு  அதிகமான போஷாக்கு உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும்.. குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம், இரும்பு மற்றும் இதர புரத சத்துகள் மிகவும்  அவசியம்.



பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், போன்றவற்றில் அதிக கால்சியம் சத்துகள் அடங்கியுள்ளது. தினமும் குறைந்த பட்சம் மூன்று  டம்ளர் பால் குடிப்பது அவசியம். கீரை வகை, பேரீட்சை, கேழ்வரகு, ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.   நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடலாம். தவிர எல்லா வகையான காய் மற்றும் பழங்களையும்  சாப்பிடவேண்டும். புரதசத்துக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட், வேர்க்கடலை, மீன், முட்டை, சாப்பிடலாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும்  உகந்தது.



ஆனால் கர்ப்ப காலத்தில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சராசரி எடையில் இருந்து பத்து முதல் பன்னிரெண்டு கிலோ  அதிகரிக்க வேண்டுமே தவிர அதற்கு மேல் எடை கூடக்கூடாது. கடைசி மூன்று மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடைகிறது. இந்த சமயத்தில்  தாயின் உடலில் அதிக நீர்ச்சத்து சேரும். அதனால் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்படும். எனவே உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.



படுக்கும் போது காலை உயர்த்தி வைத்து படுக்கலாம். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிடவேண்டும். ரசம் சாதம், பால் சாதம்  சாப்பிடலாம். பிறகு படுக்கும் முன் ஒரு தம்ளர் பால் அல்லது பழம் சாப்பிட்டு விட்டு படுக்கலாம். பொதுவாக கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது  இயல்பு என்பதால் தினமும் ஒரு பழம் மற்றும் நார்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும் என்றார் அம்பிகா சேகர். இப்படி உணவுகளில் கவனம்  செலுத்தினால் மட்டும் போதாது. கூடவே உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்றும் ஆரம்பித்தார் உடற்பயிற்சி நிபுணர் ராக்கி.



கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும்  அவசியம். அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது  சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உட்காரும்  போது சேரில் அமராமல் தரையில் உட்கார வேண்டும்.



காலை நீட்டி தரையில் அமர்வதால் இடுப்புக்கு பயிற்சி மற்றும் கால்வீக்கம் ஏற்படாது. கீழே அமர்ந்து எழும்போது தொடை மற்றும் கணுக்காலில்  உள்ள தசைகள் வலுவடையும். இரண்டு கால் பாதங்களும் ஒன்றாக சேரும்படி தரையில் ஐந்து நிமிடங்கள் அமர வேண்டும். இது தொடை மற்றும்  இடுப்பு தசைகளை வலுவடையச்செய்யும். இறுதியாக ஒன்று எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே  மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ராக்கி.    



பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முடியாது ஏன்?


பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். 
 
 


 
 
அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும். மேலும், இவற்றில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் குறைவு. இந்நிலையில், பெட்ரோல் இயந்திரத்தில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. 


 
 
அடுத்து டீசல் இயந்திரத்தில், பெட்ரோல் இயந்திரத்தில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.


வேலூர் மாவட்டத்தின் வரலாறு!

 வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. 


இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்  ஓடுகின்றன .



வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார் மாவட்டமாக விளங்கிறது.பின்பு வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது.


வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். 




பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 



1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 


1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரா  இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.


வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

 
back to top