.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 28, 2013

காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் மொரார்ஜி தேசாய்!




மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். 

இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. 

மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவருக்கு முன்பு பிரதமராக இருந்தவர் :  இந்திரா காந்தி
இவருக்கு பின்பு பிரதமராக இருந்தவர் : சரண் சிங்
அரசியல் கட்சி : ஜனதா கட்சி
இறப்பு : 10 ஏப்ரல் 1995



வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத் - சுற்றுலாத்தலங்கள்!


     வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்

சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும்.
 சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484ம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23ஆண்டுகள். மேலும் இந்தப்பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தை சாம்பனாருக்கு மாற்றியிருக்-கிறார். இப்படி அழகு பார்த்து அமைத்த சாம்பனார் பகுதி, 1535ம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றிருக்கிறது.

 இப்படியாக, பல வரலாற்றுப்-பக்கங்களை வசப்படுத்தி-யிருக்கும் சாம்பனார்- பாவாகத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிக்கமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க், 2004ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.
எப்படிப் போகலாம்?
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இது அமைந்திருப்பதால் நல்ல சாலை வசதியைக் கொண்டுள்ளது. ரயிலில் செல்பவர்கள் கோத்ரா ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து போகலாம். வடோதராவில் விமானநிலையம் அமைந்திருக்கிறது. பாவாகத் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி உள்ளது. அதில் பயணிப்பது புதுமை அனுபவம். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!


கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.

கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )



வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.

அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.

அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.

அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.

வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..
 
back to top