.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 30, 2013

வயதானாலும் அழகைக் கூட்டலாம்!

Anti-aging-beauty-tips

தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ என நினைக்கவேண்டைம். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்.20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.

சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும்  பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து  வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.

30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே  சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம்.  கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.
40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.

50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்.  இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது.

அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்,  மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம். மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.வால்நட்  மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை. தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி  ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.

தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான்.

அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.

அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர்.

;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான்.

கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

அபார்ஷன் பயத்திலிருந்து விடுபட...

Free from the fear of abortion ...

தாய்மை என்பது ஒரு வரம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மைக்காக தவம் இருக்கின்றனர். கடந்த காலகட்டங்களில், ஒரு பெண் 10  குழந்தைகளைக் கூட எந்த பிரச்னையுமின்றி எளிதாக ஈன்றெடுத்தாள். ஆனால் இன்றோ மரபணு பிரச்னை, மாறி வரும் உணவுப்பழக்கம், ஓய்வில்லாத  வேலை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் கருவுற்றதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பல்வேறு இன்னல்களை  சந்திக்க வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இதில், வேலைப்பளு,  டென்ஷன், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற காரணங்களால் 20 சதவீதம் பேருக்கு கரு கலைந்து  அபார்ஷன் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒருமுறை அபார்ஷன் ஆனால், மறுமுறை கர்ப்பம் தரிக்கும் போது, 2வது முறையும் அபார்ஷன்  ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே பெண்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு கருச்சிதைவு இல்லாமல் பாதுகாப்பாக சிசுவை பெற்றெடுப்பது குறித்து பெரம்பூரில் உள்ள அபிஜெய் கருத்தரிப்பு மையத்தின் மகாலட்சுமி  சரவணன் கூறியதாவது...

பெண்களின் கர்ப்ப காலத்தை 3 கட்டமாக பிரித்துக் கொள்ளலாம். முதல் வாரத்திலிருந்து 12 வாரம் வரை முதல் கட்டமாகவும், 13 முதல் 26வது  வாரம் 2ம் கட்டமாகவும், 27 - 40வது வாரம் வரை 3ம் கட்டமாகவும் உள்ளது. இதில், முதல் கட்டத்தில் கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டத்தில்தான் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு காரணம், மரபணு குறைபாடு, குடும்பம், அலுவலக பிரச்னையால் மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  இல்லாமையே.  இத்தகைய காரணங்களால் இயற்கையான முறையில் மட்டுமில்லாமல் செயற்கை முறையில் கருத்தரிப்பவர்களுக்கும் கருச்சிதைவு  ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்த முறை எந்த பிரச்னையுமின்றி குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமெனில், கருச்சிதைவு ஏற்பட்ட கருவை  மரபணு சோதனைக்கு உட்படுத்தி, அதன் மூலம் பெற்றோருக்கு ஏதாவது குறை உள்ளதா அல்லது கருவில் பிரச்னையா என்பது கண்டறிந்து,  அதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், 2வது முறையாக கருத்தரிக்கும் போது, அபார்ஷன் இல்லாமல்  தடுக்க முடியும்.

13 முதல் 26 வார கால கட்டத்தில் அபார்ஷன் வாய்ப்புகள் குறைவு. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதன் மூலம்  குழந்தையின் வளர்ச்சியை தெளிவாக அறிய முடியும். குழந்தைக்கு ஊனம், மனவளர்ச்சி குன்றுதல் போன்ற குறைபாடு இருக்கிறதா என்பதையும்  தெரிந்து கொள்ளலாம்.

3வது காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய் இறுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது பெண்கள் டூவீலர், சைக்கிள் ஓட்டுகின்றனர்.  அதிகளவில் மாடிப்படி ஏறுகின்றனர். இதனால், கர்ப்பப்பை வாய் போதிய அளவில் இறுக்கமாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில், உடலில்  சத்துக்கள் குன்றியவர்களுக்கு குறைபிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, குழந்தை போதிய அளவு சக்தி இல்லாமல் பிறந்தவுடன் இறப்பது போன்றவை  நடக்க வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க, 3வது கால கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி, கர்ப்பப்பை வாயில் தையல் போட்டுக் கொள்ளலாம். 10 மாதம்  முழுமையானதும், பிரசவ காலம் வரும் போது, தையலை பிரித்து குழந்தையை வெளியில் எடுக்கலாம். இதன் மூலம் குறைபிரசவமும், குழந்தை  இறந்து பிறப்பதும் தடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!

      கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா

கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா



கல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அதனுள்  தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும்!.

குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
 குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இதுபற்றி குறிப்பெழுதி-யிருக்கிறார்.


காட்டுப்பகுதிக்குள் கரும்-பாறைக்குள் புதைந்து கிடக்கும் இந்த கலைப்பொக்கிஷம் 1819ம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரி இந்தப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது இதைக் கண்டுபிடித்துள்ளார். சலசலத்துக் கொண்டிருக்கும் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76மீட்டர். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. பாறைகளில் மட்டுமல்ல, கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் நம்மை ஓ போட வைத்துக்-கொண்டிருக்கின்றன.

கலைநயம் மிக்க ராட்சத தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் ஓரிடம் அஜந்தா. இதை 1983ம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
எப்படிப்போகலாம்?
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜந்தாவுக்கு சாலை வசதி உள்ளது. ரயிலில் செல்பவர்கள், ஜல்கானில் இறங்கி விடலாம். இங்கிருந்து 50 கி.மீ தொலைவுதான் அஜந்தா. விமானப் பயணத்தைப் பொறுத்தவரை அவுரங்காபாத்தில் விமான-நிலையம் உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அவுரங்காபாத்திற்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் இருந்து அஜந்தா 107 கி.மீ தொலைவில் உள்ளது. அஜந்தா குகைகளை இந்திய நேரப்படி காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடலாம். கட்டணம் உண்டு.
 
back to top