.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 2, 2013

உயிர் காக்கும் ஆயுர்வேதம்!


நான்கு வகையான குடலமைப்பை மனிதர்கள் கொண்டவர்களாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தாயின் கருப்பையின் ஒரு அங்கமாக விளங்கும் முட்டையினுள்ளும், தந்தையின் விந்தணுக்களிலும் பொதிந்துள்ள வாத-பித்த-கப தோஷங்களின் ஆதிக்கத்தால், பிறக்கும் குழந்தையின் குடலமைப்பு தீர்மானிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் வாத தோஷத்தின் ஆதிக்கமிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் குடலில்வாதத்தின் அளவு அதிகமிருக்கும். பிறந்து வளர்ந்தாலும் நீடித்த மலச்சிக்கலாலும், பசியின் தன்மையானது சில நேரத்தில் சீராகவும், சில நேரத்தில் ஏற்றக் குறைவாகவும் காணும். வாயுவின் வறட்சியான தன்மையால், குடலிலுள்ள ஈரப்பசை அதிக அளவில் உறிஞ்சப்படுவதால், குடலின் அசைவுகள் சீராக இல்லாமலிருக்கும்.

இயற்கையான அசைவுகள் மந்தமாக இருப்பதால், மலக்குடல் இறுகி கடும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சிறிதும் எண்ணெய்ப்பசை வாததோஷத்தில் இல்லாத காரணத்தினால், குடல் வறட்சி அதிகமாக இருக்கும். நகரும் தன்மையுடைய வாதத்தினால், பசித்தீ எனும் ஜுவாலையானது சில சமயம் தீவிரமாகவும், சில சமயம் மந்தமாகவும் இருப்பதால், இவர்களுக்கு பசியானது தாறுமாறாக இருக்கும்.

வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பெரும் ஏப்பம், பொது இடங்களில் கட்டுப்படாத பெரும் சத்தத்துடன் கீழ்க்காற்று வெளியேறுதல், குடலில் கொட கொடவென்று வாயு உருண்டோடுதல், சரிந்து படுத்தால் வயிற்றில் லேசான வலி போன்றவை காணும்.

உருளைக் கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், பருப்பு சாம்பார், வேர்க்கடலை, கொண்டக்கடலை சுண்டல், மொச்சக்கொட்டை போன்ற உணவு வகைகளால் இந்த உபாதைகள் மேலும் மேலும் அதிகரித்துக் காணும். இது போன்ற குடலமைப்பைக் கொண்டவர்களுக்கு, விளக்கெண்ணெய் அருமருந்தாகும்.

சூடான கிளாஸ் பாலுடன், ஒன்றிரண்டு டீஸ்பூன் விளக் கெண்ணெய்யைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் வாரமிருமுறை மட்டுமே பருகினால், வயிற்றில் அதிக அளவில் ஓடி நடக்கும் வாயுவானது, மலத்துடன் கீழ்நோக்கி இறங்கி, ஆஸனவாய் வழியாக சுகமாகக் கழிந்து வெளியேறும்.

அப்பாடா! என்ன ஒரு நிம்மதி! என்ற ஒரு மனத் தெளிவையும் ஏற்படுத்தும். ஒன்றிரண்டு மலைவாழைப்பழத்தை உருக்கிய பசு நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு, அதன்மேல் கிளாஸ் சூடான பால் பருகினாலும், குடல் வாயு, மலத்துடன் எளிதாக வெளியேறிவிடும்.

வாயுவின் வெளியேற்றத்தால், இடுப்பு வலி, கால் குடைச்சல், நரம்பு வலி போன்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம். பித்த தோஷத்தின் ஆதிக்கத்தால் குடல் அமையும் தருவாயில், பிறந்தது முதல் மரணம் வரை குடல் பகுதி சூடாகவே இருக்கும். ஒரு சிறிய மலமிளக்கும் உணவுப் பொருள் சாப்பிட்டால் கூட, பேதியாகும்.

உதாரணமாக, பால், கோதுமையினால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, கோதுமை ரவை உப்புமா, உலர் திராட்சை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இவர்களுடைய பசியின் தன்மையானது மிகவும் தீவிரமாக இருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் விரைவில் செரித்து பசி எடுக்கும்.

உணவில் காரம் புளி உப்புச் சுவை அதிகம் சேர்த்தால், முன் குறிப்பிட்ட பேதியாகுதல், பசி கூடுதல் போன்றவை மேலும் தீவிரமடையும். அதனால் பித்தக்குடல் அமைப்பைக் கொண்டவர்கள் உணவில் அதிகம் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட சர்க்கரை, கல்கண்டு, நெய் போன்ற இனிப்பும், பாகற்காய், மணத்தக்காளி விதை மற்றும் கீரை, அகத்திக்கீரை போன்ற கசப்புச்சுவையும், வாழைப்பூ, சுண்டைக்காய் போன்ற துவர்ப்புச் சுவையும் அதிகம் சேர்த்துக் குடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல் நலம்.

கபதோஷத்தின் ஆதிக்கத்தால் குடலின் நிலையானது நடுநிலையாக இருக்கும். பசியின் தன்மையானது மிகவும் மந்தமாக இருக்கும். அதாவது கொஞ்சம் சாப்பிட்டாலே, போதும் என்றும் தோணும். செரிமானமும் மந்தமாகவே இருக்கும்.

அதனால் பசியைத் தூண்டிவிடும் வகையில், பெருங்காயம், சுக்கு, மிளகு, தனியா, மிளகாய், பட்டை, சோம்பு, கரம் மசாலா, சீரகம், ஓமம், கடுகு போன்றவற்றை உணவில் சற்று தூக்கலாக சேர்த்துக் கொள்வது நலம். மூவகை தோஷங்களின் சமமான நிலையில் குடலமைப்பைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

காலையில் எழுந்ததும் சரியான முறையில் மலப் பிரவர்த்தி ஏற்படுவதும், குறிப்பிட்ட சமயத்தில் பசி எடுப்பதும் இதன் சிறப்பு. இதனால் இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

ஆறு வகையான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் துவர்ப்புச் சுவைகளை இவர்களுடைய குடல் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் சத்தான பகுதியை உடல் அணுக்கள் நிறைவாகப் பெரும் அளவில் வகை செய்வதால்தான் நீடித்த நிலைத்த இன்பத்துடன் இவர்களால் வாழ முடிகிறது.

இந்தக் கட்டுரையின் மூலமாக நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் மனிதக் குடல் வாதம், பித்தம், கபம், அவற்றின் சமமான சேர்க்கையினால் நடுத்தரம் என்றும், பசியானது வாதத்தினால் சீராக அல்லாமலும், பித்தத்தால் தீவிரமாகவும், கபத்தினால் மந்தமாகவும், தோஷங்களின் சீரான சேர்க்கையினால் நடுநிலையாகவும் இருப்பதையே.

சத்துப்பட்டியல்: தேங்காய் எண்ணெய்!


உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான நார்ப்பகுதியால் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும். அதன் உள்ளே கடின ஓடுடன் விதைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.

விதையைச் சுற்றிய உறைப்பகுதியே நாம் தேங்காய் என்று அழைக்கிறோம். உலர்தேங்காய் கொப்பரைக் காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி, எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியதாகும். 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது.

தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. நீண்டகாலம் கெட்டுப்போகாத ஆயுள் கொண்டது தேங்காய் எண்ணெய். லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்போது வெள்ளை நிறத்தை தருகிறது.

வேறுபல உண்ணக்கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் வழங்க வல்லவை. 232 டிகிரி வெப்பநிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள் 6 முதல் 12 கார்பன் அணுக்களை சங்கிலி இணைப்பாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அவற்றுக்கு சி1-முதல் சி12 வரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூரிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்பி ரிலிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை மட்டும் பூரிதமான கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பின் அளவை நீடிக்கச் செய்ய உதவுபவையாகும். 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது. 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச்சத்தை வழங்குகிறது. ரத்தஓட்டத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின்-இ மிகக்குறைந்த அளவில் உள்ளது.

கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!

 மார்பு, தொண்டை, தலை, உணவுக்குழாய், மூட்டுகள், இரைப்பை, ரசம் எனும் தாது, கொழுப்பு, மூக்கு, நாக்கு போன்ற உடல் பகுதிகளை கபம் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடல் உறுதி, எண்ணெய்ப்பசை, எலும்பு மூட்டுகளின் இணைப்பு, ஆண்மை, பொறுமை, அறிவு, தைரியம், வலிவு, சபலம் (புலப் பொருள்களை நுகர அதிக ஆசை) இவை போன்றவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் கபம் உடலுக்கு நலனைத் தருகிறது.

தன் நிலையிலிருந்து கபம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால்-வெண்மை நிறத்தைத் தோலில் ஏற்படுத்துதல், குளிர்ச்சி, உடற்பருமன், சோம்பல், உடல் பளு, உடல் தளர்ச்சி, ஓட்டைகள் அடைப்பட்டுப் போதல், மூர்ச்சை, சுறுசுறுப்பின்மை, உறக்கம், சுவாச நோய், இருமல், வாயில் நீர் ஊறுதல், இதய வேதனை, பசி குறைதல், பூட்டுகளில் தளர்ச்சி இவற்றை ஏற்படுத்தி வளர்ச்சியடைந்த கபம் உடலுக்குத் துன்பம் தருகிறது.

தன் நிலையிலிருந்து கபம் குறைந்துவிட்டால் தலைச்சுற்றல், உடலைத் திருகுதல் போன்ற வலி, உறக்கமின்மை, உடல் வலி, தோலில் சிறிது எரிச்சல், குத்தல் வலி, கண் எரிச்சல், கொப்புளங்கள், நடுக்கம் உண்டாதல், புகைச்சல், மூட்டுக்களின் தளர்ச்சி, இதயத்துடிப்பு, கபம் இருக்க வேண்டிய இடங்களில் இல்லாதது போல் தோன்றல் முதலியவை குறைவான கபத்தால் தோன்றுபவை. கபம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:-

1.அவலம்பகம்:- மார்பில் தங்கியுள்ள கபம், தன் சக்தியினால் பிடரி எனும் கழுத்தின் பின்புறப் பகுதிக்கும் முதுகெலும்புப் பகுதிக்கும் உணவின் வீர்யத்தினால், இதயத்திற்கும் பரவி, மற்ற கபம் உள்ள இடங்களுக்கும், தன்னிடத்தில் தங்கியபடியே நீர்த்தன்மை அளிக்கும் செயலினால் அவற்றுக்குப் பற்றுக் கோடாக இருப்பதால் `அவலம் பகம்' எனப் பெயர் பெறுகிறது.

2. க்லேதகம்:- இரைப்பையில் உள்ள இந்த கபம், உணவுக்கூட்டிற்கு ஈரப்பசையை அளிப்பதால் இது இப்பெயரை அடைகிறது.

3. போதகம்:- நாக்கிலுள்ள இந்த கபம், சுவையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

4. தர்ப்பகம்:- இது தலையில் இருந்து கொண்டு கண் முதலான புலன்களுக்கு தன்நிறைவை அளிக்கிறது.

5. ச்லேஷகம்:- மூட்டுகளில் உள்ள இந்த கபம், எலும்பு மூட்டுகளை சேர்த்து வைத்து, எண்ணெய்ப் பசையையும் அளிக்கிறது. உணவில் அதிக இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, நீர்க்காய்கள், உணவிற்குப் பிறகு பழங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுதல், பழைய சோறு, பகலில் படுத்து உறங்குதல், தலையில் குளிர்ந்த நீரால் குளித்தல்,

ஏசி அறையில் படுத்துறங்குதல், பனி பெய்யும் அதிகாலையில் தலையை துணியால் மறைக்காமல் வீட்டை விட்டு வெளியே வருதல், ஈரமான தரையில் நின்று கொண்டு வேலை செய்தல், தண்ணீரின் தன்மையறியாது குடித்தல், சூடு ஆறிப்போன் உணவுப் பொருளை மறுபடியும் சூடு செய்து சாப்பிடுதல் போன்றவற்றால் உடலில் கபம் எனும் தோஷம் கூடி பல உபாதைகளை ஏற்படுத்துகிறது.

20 வகையான கப நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அவை:-

எப்பொழுதும் சாப்பிட்டது போன்ற உணர்ச்சி, மயக்கத்துடன் கூடிய சோம்பல், அதிக உறக்கம், உடல் பருத்து பளுவாதல், சக்தி இருந்தும் செயலில் ஆர்வமின்மை, வாயில் இனிப்புச் சுவை, வாயில் உமிழ்நீர் சுரத்தல், அடிக்கடி கபம் வெளிப்படுதல், மலம் அதிகமாதல், கபம் அதிகரித்தல்:-

இதயத்தில் பூசியது போன்ற அடைப்பு, தொண்டையில் குழகுழப்பு, நரம்புகள், இரத்தக்குழாய்கள் நிறைந்திருப்பது போன்ற உணர்வு, கழுத்தில் தோன்றும் ஒரு வகைக் கட்டி, உடல் அளவு கடந்து பருத்தல், உடல் குளிர்ச்சி, மார்பில் அரிப்பும் குத்தலோடு கூடிய வீக்கமும், உடல் வெளுத்தல், கண்கள், மலம், சிறுநீர் இவை வெளுத்தல்.

கபத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க:- நெஞ்சில், தலையில் நிறைந்துள்ள கபத்தை உருக்கி வாந்தி மூலம் வெளியேற்றுதல், வறட்சி யளிப்பதும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை உள்ளதும், சூடான வீர்யம் கொண்டதும், பழமையானதும், இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடியதுமான உணவு வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

ஓடுதல், தாவுதல், நீந்துதல், விழித்திருத்தல், உடற்பயிற்சி செய்தல், புணருதல், வறட்சியுண்டாக்கும் பொருட்களால் உடலில் தேய்த்தல் போன்றவை செய்ய நல்லது. வறட்சியான இடம், வறட்சித் தன்மை கொடுக்கக்கூடிய போர்வை இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தேன், பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பார்லி, கொள்ளு, பச்சரிசி போட்டுக் காய்ச்சிய கஞ்சித் தண்ணீர் பருகுதல், சூடான தண்ணீரால் வாய் கொப்பளித்தல், கோரைக்கிழங்கு, சுக்கு போட்டுக் காய்ச்சிய வெந்நீர் குடித்தல், வாந்தி செய்து கபத்தை வெளியேற்றுதல் போன்றவை சிறந்த சிகிச்சை முறைகளாகும்.

வியாக்ராதி, தசமூல கடுத்ரயாதி கஷாயம், பலாஜீரகாதி கஷாயம், நயோபாயம், இந்து காந்தம் கஷாயம், அக்னி குமார ரஸம், ஆசால்யாதி, கோரோசனாதி குடிகை, அகஸ்திய ரஸாயனம், தசமூலரஸாயனம் போன்ற லேகியங்கள், வாஸாரிஷ்டம், கனகாஸவம், தசமூலாரிஷ்டம்,

தலைக்கு அஸனவில்வாதி, அஸனமஞ்ஜிஷ்டாதி, ஏலாதி போன்ற வெளிப்புறப் பூச்சுகள், தாளீஸபத்ராதி, வைஷ்வாநரம் எனும் உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவைகளாலும் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டிய சில தரமான மருந்துகளாலும் கபத்தை நம்மால் குறைக்க முடியும்.

படத்தை பார்த்த பின்னர் இசை அமைத்த இளையராஜா!


 After seeing the film set Ilayaraja songs

படத்தை முழுமையாக பார்த்த பிறகு இளையராஜா இசை அமைத்திருக்கும் படம் ஒரு ஊர்ல. இதுபற்றி இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் கூறியதாவது: கடந்த 1980-90 களில் இளையராஜாவின் இசை, தமிழ் திரையுலகை புரட்டி போட்டது. அந்த கால கட்டத்தை மீண்டும் கொண்டு வரும் வகையில் இப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.


உதிரி பூக்கள், என் ராசாவின் மனசிலே, சேது போன்ற படங்கள் முதலில் இசை இல்லாமல் படமாக்கப்பட்டது. பிறகு முழு படத்தையும் இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டினார்கள். அதன்பிறகே அவர் இசை அமைத்தார். அந்த பாடல்கள் இன்றளவும் பேசப்படுகின்றன.


அதே போல் ஒரு ஊர்ல படமும் முதலில் முழுமையாக ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு அது இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.


அதன்பிறகு இப்படத்துக்கு இசை அமைத்தார். இதில் வெங்கடேஷ் ஹீரோ. இவர் பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமனாக நடித்தவர். நேகா பட்டீல் ஹீரோயின். இந்திரஜித், அன்னபூரணி உள்பட பலர் நடிக்கின்றனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு. பி.வேலுசாமி தயாரிப்பு.

 
back to top