.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 2, 2013

தீபாவளி சிந்தனைகள்!

தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் "தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக "தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.


மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களின் புத்தாண்டுப் பிறப்பை நாம் ஏற்றுக்கொண்டு, கொண்டாடத் தயங்காதபோது, ஆறு நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தில் கலந்துவிட்ட பண்டிகையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? காதலர் தினம் கொண்டாடுவதைவிட, தீபாவளி கொண்டாடுவது எந்தவிதத்தில் தேவையற்றதாகிவிட்டது?


பணக்காரர்களுக்குத் தங்கள் வசதி வாய்ப்புகளை வெளிச்சம்போட இதுபோன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, ஏழைகளுக்கும் மத்தியதர வகுப்பினருக்கும் நாளும் உழைத்து ஓடாய்த் தேயும் விவசாயி, கூலித் தொழிலாளி போன்ற பாட்டாளி வர்க்கத்தினருக்கும் தீபாவளி பண்டிகை தங்களது குடும்பத்தினருடன் குதூகலமாக இருக்க அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு. பலருக்கும் புத்தாடை வாங்கவோ, பெறவோ தீபாவளி காரணமாகின்றது என்பதுதான் உண்மை.


தீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது.


நாமெல்லாம் தீபாவளி என்பது நரகாசுரனைக் கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வதைத்ததைக் கொண்டாடும் பண்டிகை என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தீபாவளிக்கு இன்னொரு புராணப் பின்னணியும் உண்டு. தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்துக்கொண்டு ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. இராவணனை அழித்துவிட்டு நாடு திரும்பும் ராமபிரானை, வழிநெடுக விளக்குகளை ஏற்றி வைத்து வாணவேடிக்கை முழங்க அயோத்தி நகர மக்கள் வரவேற்பதைக் குறிக்கும் நாளாக தீபாவளி அறியப்படுகிறது.


பௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி!
அதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு.


நாம் புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகளையும், பலகாரங்களையும் சுவைத்து மகிழும் வேளையில், ஒரு அன்பு வேண்டுகோள். ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமல், மாற்று உடை இல்லாமல், தலையில் எண்ணெய் தடவக்கூட முடியாமல் எத்தனை எத்தனையோ பேர் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது; ஏக்கம் இருக்கிறது. தெருவோரமோ, ஓலைக்குடிசையோ... அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள்.


வறுமை என்பது விதி என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அப்படிச் செய்வது சிறுமை. வறுமை கண்ட இடத்து நம்மால் இயன்ற உதவிகளை நல்குவதுதான் நமக்குப் பெருமை.


தீபாவளிப் பண்டிகையை சீரும் சிறப்புமாகக் கொண்டாடுங்கள். அதேநேரத்தில், ஏதாவது ஓர் ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஓலைக் குடிசையிலும் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு, மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதை உங்களது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள். அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யுங்களேன்.


நலம் பெருகட்டும்! நாடு செழிக்கட்டும்! இல்லை என்பதே இல்லாத, இன்பமயமான உலகம் உருவாகட்டும்!

நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)




கந்தனும், முருகனும் நண்பர்கள்.

கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.

ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.

உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.

அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான் என்று சொல்லாதே...நாம் புதையலைக் கண்டோம்..என்று சொல்' என்றான்.

தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதும்...அந்த மூட்டைக்கு உரியவன் ...கந்தனும்,முருகனும் தனக்கு சொந்தமான மூட்டையை எடுத்து செல்வதைப் பார்த்து அவர்களை நோக்கி
'திருடன்..திருடன்' என ஓடி வந்தான்.

உடன் கந்தன் முருகனிடம் ' நாம் ஒழிந்தோம்' என்றான்.

அதற்கு முருகன் 'இல்லை நண்பா...நீ முன்னால் சொல்லியபடியே சொல்..நீயே மூட்டையை கண்டெடுத்தாய். நாம்..இல்லை...என்று ஓடிவிட்டான்.

நமக்கு ஆதாயம் வரும்போது நம்முடனும்...ஆபத்து வரும்போது நம்மை விட்டு விலகி இருப்பவனையும் நாம் நண்பனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அவர்கள் நம் விரோதியை விட கொடியவர்கள்.

Friday, November 1, 2013

விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?

 

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர்.

1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால், விண்டோஸ் 8.1க்கு அவசியம் மாறிக் கொள்ளுங்கள். இலவசமாகவே மைக்ரோசாப்ட் இதனைத் தருகிறது.

2. நீங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறீர்களா? அது உங்களுக்கு சகல விதத்திலும் பயனுள்ளதாக, சிரமம் தராததாக உள்ளதா? அப்படியானால், புதியதாக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கும் வரை இதனையே பயன்படுத்தவும். மேலும், உங்கள் விண்டோஸ் 7 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் இருக்காது. விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், டச் ஸ்கிரீன் இல்லாமல் இயங்கினாலும், பல வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. எனவே, விண்டோஸ் 7 உடன் உங்கள் பயணம் சில காலத்திற்குத் தொடரட்டும்.
 
3. விண்டோஸ் 8 சோதனை சிஸ்டம் பயன்படுத்தி, அதன் செயல்பாடுகள், உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்குப் பிடிக்க வில்லையா? அதனால், புதிய கம்ப்யூட்டர் வாங்கும் முடிவைச் சிறிது காலம் தள்ளி வைத்திருக்கிறீர்களா? இந்த முடிவை ஒதுக்கித் தள்ளுங்கள். உடனே, விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும். புதிய கம்ப்யூட்டர் இனி விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான் கிடைக்கும். எனவே, அதற்குப் பழக்கிக் கொள்ளுங்கள்.
Click Here

பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்!



காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

1956 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். நிறுவனம் முதன் முதலாக, காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் ஸ்டோரேஜ் டிஸ்க்கினை, வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியது. IBM 305 RAMAC என அழைக்கப்பட்ட இந்த டிஸ்க், 24 அங்குல டிஸ்க்காக இருந்தது. 5 எம்பி டேட்டாவினை (அந்த காலத்தில் இது ரொம்ப அதிகம்) அதில் பதிந்து பாதுகாக்கலாம். இப்போது, 3.5 அங்குல அளவிலான டிஸ்க்குகளில் 1 டெரா பைட் அளவு கொள்ளும் ஹார்ட் டிஸ்க்குகள் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கின்றன. மின் சக்தி பயன்பாடும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது நவீன தொழில் நுட்பத்தினால் சாத்தியப்பட்டது என்றாலும், எத்தனை ஆண்டுகள், இதில் பதியப்படும் தகவல்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதில், நாம் இன்னும் முன்னேற்றம் காண இயலவில்லை. அதிக பட்சம் பத்து ஆண்டுகள் என்ற கால எல்லையிலே தான் இருக்கிறோம்.

அப்படியானால், நம் கலாச்சாரம், சமுதாயக் கூறுகள் ஆகியவற்றை வெகு காலம் பாதுகாத்து வைக்க என்ன செய்திடலாம்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையாக, இப்போதைய நானோ தொழில் நுட்பத்தில் டிஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Jeroen de Vries என்னும் வல்லுநர் தலைமையிலான குழுவினர், நெதர்லாந்தில் உள்ள ட்வெண்டி பல்கலைக் கழகத்தின் (University of Twente) சோதனைச் சாலையில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த டிஸ்க்கில் பதியப்படும் தகவல்கள், பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கும் மேலாகவும் பாதுகாத்து வைக்கும் என, அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தெரிவித்துள்ளன.

இவர்களின் நிபுணத்துவம், டிஸ்க் உருவாக்குவதனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அநேக ஆண்டுகள் தொடர்கையில், ஒரு பொருள் நிலைத்து இருக்க வேண்டுமாயின், காலத்தின் அழிப்பு தன்மையை எதிர்த்து நிற்க என்ன வேண்டும் என ஆய்வு செய்து வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் இதனை Arrhenius law என அழைப்பார்கள். அந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை, டிஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

மிக மெல்லிய உலோகமான டங்க்ஸ்டன் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இதனை உருக்க வேண்டும் என்றால் 3,422 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. எனவே, பாதுகாப்பானது என இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டேட்டா, இதில் உள்ள வரிகளில் பதியப்படுகிறது. அதன் மேலாக பாதுகாப்பிற்கான ஒரு அடுக்கு அமைக்கப்படுகிறது. இதனை அமைக்க சிலிகான் நைட்ரைட் (Silicon nitride (Si3N4)) பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் எந்த பாதிப்பிலும் சேதம் அடையாது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்க்கில் டேட்டா எழுதப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் arxiv.org/abs/1310.2961என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லலாம்.
 
back to top