.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 11, 2013

கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!

கிரெடிட் கார்டு என்றாலே அது ஒரு சூனியத் தகடு என்று நினைத்து பயந்து ஓடுகிறார்கள் நம்மவர்கள். அதை வைத்திருந்தாலே நாம் ஊதாரியாக மாறிவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். உள்ளபடி பார்த்தால், கிரெடிட் கார்டு என்பது நம்மை வஞ்சிக்கும் சூனியத்தகடும் அல்ல; நமக்கு நல்லதே செய்யும் அட்சய பாத்திரமும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அது நமக்கு நல்லதா, கெட்டதா என்று முடிவு செய்ய முடியும். கிரெடிட் கார்டை சரியாக, லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

கிரேஸ் பிரீயட்!

''கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு சுமார் 45 முதல் 51 நாட்கள் வட்டி கட்ட வேண்டாம் என்பது முக்கிய விஷயம். உதாரணமாக, ஒருவர் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் தயார் செய்வதற்கான கட் ஆஃப் தேதியான ஜூலை 5-ம் தேதி ஒரு பொருளை வாங்குகிறார். அதற்கு பணம் கட்ட வேண்டிய தேதி ஜூலை 25. அதாவது, ஜூலை 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 20 நாட்கள் வட்டி இல்லாத கடன் கிடைக்கிறது.

ஒருவர் ஜூலை 6-ம் தேதி ஒரு பொருளை வாங்கினால் அதற்கான பணத்தைக் கட்ட வேண்டிய  தேதி ஜூலை 25-ம் தேதி அல்ல,  ஆகஸ்ட் 25-ம் தேதி. அதாவது, அவருக்கு அதிகபட்சம் 50 நாட்கள் வட்டி இல்லாத கடன் கிடைக்கும். இதை கணக்கிட்டு பொருட்களை வாங்கினால், அதிக நாட்களுக்கு வட்டி இல்லாத கடன் கிடைக்கும். 

பில்லிங் சுழற்சி..!

ஒவ்வொரு கிரெடிட் கார்டு கம்பெனியும் ஒவ்வொரு பில்லிங் சுழற்சியை வைத்திருக்கிறது. இதனால் நமக்குக் கிடைக்கும் சலுகை காலத்தை (கிரேஸ் பீரியட்) சரியாகப் பயன்படுத்தினால்  வட்டியே இல்லாமல் ஊரார் வீட்டு பணத்தில் பல விஷயங்களை உங்களால் அனுபவிக்க முடியும். பொதுவாக ஒருவர் இரண்டு கிரெடிட் கார்டு கம்பெனிகளிடம் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவற்றின் பில்லிங் சுழற்சி மாதத்தில் 15, 30 தேதி என்று இருந்தால் நல்லது.


விழாக் கால ஆஃபர்!

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு 5 முதல் 10% கேஷ் பேக் ஆஃபர் என்கிற சலுகை அளிக்கப்படுகிறது. உங்களுக்கு பெரிய தொகை போனஸாக கிடைத்து, அதை கொண்டு வீட்டு உபயோகப் பொருளை வாங்கப் போகிறீர் கள் என்றால் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிக் கொள்ள லாம். போனஸ் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது குறுகிய கால லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் போட்டு வைத்துவிட்டு, கிரெடிட் கார்டு கடனை அடைக்கும்போது எடுத்தால், முதலீடு மூலமும் வட்டி கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் வாங்கிய பொருளுக்கான பணத்திற்கு வட்டியும் தர வேண்டியிருக்காது. 

ஆனால், பின்னால் வரப் போகிற பணத்தை நம்பி  கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள். எதிர்பார்க்கும் தொகை சரியான நேரத்தில் கிடைக்க வில்லை என்றால் அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். தவிர, இந்த ஆஃபரில் அத்தியாவசிய மான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவை யில்லாதப் பொருட்களை வாங்கக் கூடாது.

பல நேரங்களில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால்தான் ஆஃபர் சலுகை என்பார்கள். 10% கேஷ் பேக் என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒரு மாதத்தில் அதிகபட்சம் 500 ரூபாய்தான் சலுகை என்பார்கள்.  நீங்கள் 50,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி அதற்கு கேஷ் பேக்காக 500 ரூபாய் கிடைத்தால், தள்ளுபடி 10% அல்ல, வெறும் 1%தான். இதுபோன்ற விஷயத்தைக் கவனிப்பது அவசியம்.

உஷார் டிப்ஸ்கள்..!

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய பொருளுக்கு செலுத்த வேண்டிய முந்தைய மாதத்தின் தொகை ஏதாவது பாக்கி இருந்தால், அதே கார்டு மூலம் புதிதாக பொருள் வாங்கும்போது சலுகை எதுவும் கிடையாது. எனவே, ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு அடுத்த பொருளை வாங்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப் போல் சுமார் 4 மடங்கும், பெர்சனல் லோனை போல் சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது, கிட்டத்தட்ட 35 முதல் 40% என்கிற அளவில் இருக்கும். இலவச சேவை, கட்டணம் இல்லை என்று வாய் வழியாக சொல்வதை மட்டும் நம்பி விடாதீர்கள்.

கிரெடிட் கார்டு கடன்களை ரொக்க பணமாக கட்டினால் சில முன்னணி வங்கிகள் 100 ரூபாய் என்பது போல் அபராதம் விதிக்கின்றன. அவை காசோலை அல்லது டி.டி. மூலமே கட்ட வாடிக்கையாளர்களை வலியுறுத்துகின்றன.

கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி போக வேறு பல கட்டணங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டவில்லை என்றால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது பாக்கித் தொகையைப் பொறுத்து சுமார் 250 ரூபாயில் தொடங்கி 700 ரூபாய் வரை செல்கிறது.

கிரெடிட் வரம்புக்கு மேல் அதிகமாக பொருட்கள் வாங்கினால், குறைந்தபட்சம் 300 முதல் 500 ரூபாய் அபராதம் இருக்கிறது. பணமில்லாமல் காசோலை திரும்பினால் 200 முதல் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெட்ரோல் போட்டால், டிக்கெட் புக் செய்தால் மொத்த தொகையில் சுமார் 2.5% வரை கட்டணம் எடுத்துக் கொள்வார்கள். வெளியூர் காசோலை என்றால் அதற்கு தனியே 100 ரூபாய் கட்டணம் இருக்கிறது.

கிரெடிட் கார்டு கடனை மொத்தமாக கட்ட முடியவில்லை என்றால் அதனை இ.எம்.ஐ. ஆக மாற்றி கட்டும் வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டு கடனுக்கு ஆண்டு வட்டி 35 முதல் 40 சதவிகிதம் என்கிற நிலையில் இந்த இ.எம்.ஐ. கடனுக்கு ஆண்டு வட்டி 14 முதல் 25%தான்.

  
கிரெடிட் கார்டு கடன்!

கிரெடிட் கார்டு மூலம் அவசரத் தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இது கிட்டத்தட்ட பெர்சனல் லோன் மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் ஆவணங்கள் எதுவும் தர வேண்டியதில்லை. ஆனால், கடனுக்கான வட்டி, பெர்சனல் லோனைவிட அதிகமாக இருக்கும். இதற்கு பிராசஸிங் கட்டணம் இருக்கிறது. கடனை மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். முன்கூட்டியே அடைக்க வேண்டுமெனில் அபராதம் அதிகமாக இருக்கும்.

அவசர செலவுக்குப் பணம்..!

கிரெடிட் கார்டு மூலம் அவசர செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், இதற்கு குறைந்தபட்ச பரிமாற்றக் கட்டணம் 250 முதல் 500 ரூபாயாக இருக்கிறது. உதாரணத்துக்கு, 1,000 ரூபாய் எடுப்பதாக வைத்துக் கொண்டால், அதற்கு 250 ரூபாய் பரிமாற்றக் கட்டணம் என்பது 25%. எடுக்கப்படும் பணத்துக்கு அன்றே  வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் திரும்பக் கட்டும் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிற தேதி வரைக்கும் வட்டி போடப்படும்.



கூடுதல் வசதிகள்!

கிரெடிட் கார்டு மூலம் இன்ஷூரன்ஸ் பிரீமியம், தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இந்த கூடுதல் வசதிக்கு பரிமாற்றக் கட்டணம் இருக்கிறதா என்பதைக் கவனித்த பிறகு களமிறங்குவது நல்லது.

விருது புள்ளிகள்!

கிரெடிட் கார்டை அதிகமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக வங்கிகள், கார்டை பயன்படுத்துபவர்களுக்கு விருது புள்ளிகளை (ஸிமீஷ்ணீக்ஷீபீ றிஷீவீஸீt) அளிக்கின்றன. இந்தப் புள்ளிகள் 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், பொருட்களை வாங்கும்போது விலை குறைப்பு அல்லது பயண டிக்கெட் களை புக் செய்யும்போது குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். கிரெடிட் கார்டு மூலமே பொருட்களை வாங்கி, தொகையை சரியான தேதியில் கட்டி வந்தால், ரிவார்ட் புள்ளிகள் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.''

தேவை அறிந்து, அளவாக, சரியாக பயன்படுத்தினால் எதனாலும் நமக்கு தீங்கு வராது என்பது மட்டும் நிச்சயம்!

லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு...

கார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.

பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.

கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள் மற்றும் ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று கூறப்படும் அதிக வட்டி வீதங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

1.காரை தேர்வு செய்தவுடன் ஷோரூம் சூப்பர்வைசர் கையை நீட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதி சடசடவென திட்டத்தை பற்றி கூறும் விபரங்களை கேட்டு தலையாட்டிவிடாதீர்கள். கார் வாங்கும் ஆசையில் கண்ணை மூடிக்கொண்டு கடன் பள்ளத்தாக்கில் போய் விழுந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வினாடியும் யோசித்து நிதானமாக செயல்படுங்கள்.

2. காருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன் திட்டங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்வதோடு, அதன் விபரங்களை வீட்டிற்கு சென்று நன்கு அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கிறது; கார் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் எத்தனை சதவீதம் உள்ளிட்ட விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், எது சிறந்தது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்.

3.காருக்கு கடன் வாங்க தீர்மானித்துவிட்டால், குறைந்தது 30 சதவீதத்திற்கு மேலாவது முன்பணத்தை செலுத்த வேண்டும். இதனால், மாதத்தவணை தொகை மற்றும் தவணை காலம் வெகுவாக குறைவதோடு வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேரம் பேச முடியும்.

4.கார் கடன் வழங்கும் வங்கிகளின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். தவிர, மறைமுக கட்டணங்கள் ஏதாவது திணிக்கப்படுகிறதா என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கவேண்டிய நேரம் இது.

5.கார் கடனுக்கு காப்பீடு திட்டங்கள் இருக்கிறது. காருக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் கூட காப்பீடு மூலம் தவணை மற்றும் இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

6.இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலக விபரங்கள் மற்றும் போன் நம்பர்களை விற்பனை பிரதிநிதியிடம் அவசியம் கேட்டு டைரியில் குறி்த்து வையுங்கள். கடன் முடிந்த பிறகு ஆர்சி புக் அல்லது ஆர்சிபுக்கில் உள்ள ஹைப்போதிகேஷனை நீக்குவதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை(என்ஓசி) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும்போது இவை உதவியாக இருக்கும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை கவனத்தில்கொண்டால், கார் கடன் நம் கழுத்தை இறுக்காது என்று உறுதியாக கூறலாம்..

உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.

ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.

இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில செடிகளைப் பார்ப்போமா...

 

மூங்கில்

மூங்கிலை வீட்டினுள் வளர்த்தால், அந்த மூங்கிலின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அது நம்பிக்கை மட்டுமின்றி, பலர் உணர்ந்ததும் கூட. ஆகவே வீட்டினுள் மூங்கில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

துளசி

துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.

ஹனிசக்கிள் (Honeysuckle)

இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.


மல்லிகை

மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். மேலும் இந்த செடியானது மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

லாவெண்டர்

லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அந்த அளவில் இதன் நறுமணமானது இருக்கும். அதுவும் இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீட்டும் நல்ல வாசனையோடு இருக்கும்.

ரோஜா

அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். அதிலும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.


மந்தாரை/ஆர்க்கிட் (Orchid)

வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது வீட்டில் நல்ல பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.

சேஜ்

சேஜ் செடி, அதன் பாதுகாப்பு குணங்களால் அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் இதனை வளர்த்தால், இது இறப்பின்மை, ஆயுள், ஞானம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

மயில் தேசியப்பறவையானது எப்படி?

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.



 அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.


 ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.
 
back to top