மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதிவரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லெமன்ஸ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இருவரும் கண்டறிந்துள்ளனர்.
நாம் நடந்துசெல்லும்போது திடீரென்று திசைமாற்றி கால்களை திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள் தான் கால்களுக்கான பாதுகாப்பு அரணாக அமைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்துவந்த போதிலும் இப்போது தான் அதுபற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று பிரிட்டனிலுள்ள முழங்கால் சிகிச்சை நிபுணரான ஜோயல் மெல்டன் கூறுகிறார்.
மருத்துவ பரிசோதனைக்கான உடல் உறுப்பு தானமாகக் கிடைத்த 41 பேரின் முழங்கால்களை நுண்ணோக்கி கருவி மூலம் ஆராய்ந்துபார்த்த விஞ்ஞானிகள், எல்லா முழங்கால் எலும்புகளில் இந்த தசைநார்கள் காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர். அதுவும் அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதாகவும் இவர்கள் கண்டறிந்தார்கள்.
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாக புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பனிச்சறுக்கல் மற்றும் ஓட்டப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்கள் தங்களின் கால்கள் செல்லும் திசையை திடீரென்று மாற்றும்போதோ நிறுத்தும்போதோ இவ்வாறான முழங்கால் உபாதைகள் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படுகின்ற போதிலும் 10 முதல் 20 வீதமானோருக்கு முழுமையான குணம் கிடைப்பதில்லை.
கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களும் அனேகமான முழங்கால் உபாதைகளுக்கு பகுதியளவில் காரணமாகின்றன என்று மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லமன்ஸ் நம்புகின்றனர்.
முழங்கால் காயங்களால் பாதிக்கப்படுவோரை குணப்படுத்த இந்த புதிய கண்டுபிடிப்பை எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்று அறிய இன்னும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.