.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

ஏ.டி.எம் - பாதுகாப்பாக பணத்தை கையாள சில டிப்ஸ்கள்!

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத் தரும் ஏ.டி.எம், இந்த அவசர யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருப்பது இயற்கைதானே? நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தை கையாள உதவும் வகையில் சில டிப்ஸ்கள்

தனியே... தன்னந்தனியே..!

அகால நேரங்களிலோ, மிகவும் தனிமையாக நீங்கள் இருக்கும் நிலை ஏற்படும்போதோ ஏ.டி.எம்-மைத் தவிருங்கள். கொஞ்ச நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை... வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம்-களை தேர்ந்தெடுங்கள். ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் வசதி கொண்ட பூத்களை இரவு நேரங்களில் தவிருங்கள். ஏ.டி.எம்-மைப் பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

கணக்கு எங்கே...  கார்டு அங்கே!

முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவதே சிறந்தது. சில சமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பணம் வராமல், தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

கார்டை விட்டு கண்ணைத் திருப்பாதீர்கள்!


பெரிய கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாகத் தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இது சம்பந்தபட்ட ஊழியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரும் சேர்ந்து செய்திருக்கும் தில்லாலங்கடி ஏற்பாடு. இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு, ஒரு போலி கார்டைத் தயாரித்துப் பணத்தை லவட்டிவிடுவதுண்டு. எனவே, ஊழியர்கள் கார்டைத் தேய்க்கும்போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்கட்டும்.

கார்டு... கைப்பை... கவனம்!

 சில ஏ.டி.எம் மெஷின்களில் கார்டை நுழைத்ததுமே சரிபார்க்கப்பட்ட பிறகு கார்டை வெளியே எடுத்துவிடலாம். சில மெஷின்களில் நீங்கள் பணம் எடுத்து முடியும் வரை கார்டு மெஷினுக்குள்ளேயே இருக்கும். அப்படிப்பட்ட மெஷின்களிடம் எச்சரிக்கை தேவை. பணத்தை எடுத்துக் கொண்டு கார்டை எடுக்கப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதேபோல கைப்பை மற்றும் இதர பொருட்களை ஏ.டி.எம் அறையிலிருந்து வரும்போது கவனமாகத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்.

'பின் நம்பர்' மறையுங்கள்!

ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கும்போது, ரகசிய எண்களை (பின் நம்பர்) அழுத்துவீர்கள் அல்லவா? அப்போது இயன்ற வரை ஒரு கையால் அழுத்துப் பலகையை மறைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அழுத்துங்கள். சில இடங்களில் உங்கள் ரகசிய எண்ணைக் கேமிரா மூலம் படம் எடுத்து மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியாமல், உங்கள் உடம்பையே ஒரு கேடயமாக உபயோகித்தும் ரகசிய எண் அழுத்துவதை மறைக்கலாம்.

கூரியரிலும் நடக்குது காரியம்!

 உங்கள் ரகசிய எண் கொண்ட விவரங்களைக் கூரியர் மூலம் வங்கியில் இருந்து அனுப்புவார்கள். சில எத்தர்கள், கூரியர் நிறுவன ஊழியர்களை சரிக்கட்டி விவரங்களைத் தெரிந்துகொண்டு, கவரை மீண்டும் ஒட்டி டெலிவரி செய்துவிடுவதுண்டு. கிடைத்த விவரங்களைக் கொண்டு போலி கார்டு தயாரித்து, எப்போது கணிசமான தொகை சேருகிறதோ அப்போது பணத்தை எடுத்து விடுவார்கள். கூரியர் வழியாக ஏ.டி.எம் கார்டு கிடைத்த உடனேயே ரகசிய எண்ணை மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

பின் நம்பர் பாதுகாப்பு... ரொம்ப முக்கியம்!

ரொக்கப் பணத்தைப் போல, காசோலைப் புத்தகத்தைப் போல ஏ.டி.எம் கார்டும் முக்கியமானது. மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள். பின் நம்பரை வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள். குறைந்தது இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது பின் நம்பரை மாற்றுங்கள். தொலைபேசியிலும் இ-மெயிலிலும் உங்கள் ஏ.டி.எம் எண்ணை யாருக்கும் ஒருபோதும் அளிக்காதீர்கள். ஏ.டி.எம் கார்டிலோ... உங்கள் பர்ஸிலோ பின் எண்ணை எழுதி வைக்கக் கூடாது.

பிறர் கண்பட எண்ணாதீர்கள்!

ஏ.டி.எம் மெஷின் தரும் பணத்தை வெளியில் நிற்பவர்கள் பார்க்கும்படி சரிபார்த்து எண்ணாதீர்கள். நிதானமாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போய் எண்ணுங்கள். எண்ணி முடித்ததும் பாதுகாப்பாகப் பணத்தைப் பத்திரப்படுத்துங்கள்.

செயல்பாட்டை முடக்குங்கள்!

ஏ.டி.எம் கார்டு தொலைந்துபோனால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்புகொண்டு ஏ.டி.எம் கார்டின் செயல்பாட்டை முடக்குங்கள். பிறகு, முறைப்படி வேறு கார்டு பெற நடவடிக்கை எடுங்கள்.

தயார் நிலை அவசியம்!

ஏ.டி.எம் மெஷினை அடைவதற்கு முன்னரே கைப்பை அல்லது பர்ஸில் இருந்து கார்டை எடுத்துத் தயார் நிலையில் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடுங்கள். முடிந்த மட்டும் ஒரே மெஷினைப் பயன்படுத்தும்போது பயன்பாடு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கினோம் என்று யோசிக்கும் வகையில் துண்டில் அழுக்கு மற்றும் கறையானது படிந்திருக்கும். இத்தகைய துண்டானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் உடலை துடைக்கப் பயன்படுத்தும் துண்டாகட்டும் அல்லது சமையலறையை சுத்தம் செய்ய பயன்படும் துண்டு ஆகட்டும், எதுவானாலும், இவற்றில் படியும் கறைகள் மற்றும் அழுக்குகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று.

அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும்.
ஆகவே துண்டு பாழாகாமல் இருக்கவும், துண்டில் உள்ள கறைகளை எளிதில் போக்கவும் ஒருசில எளிய வழிகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி துண்டை சுத்தம் செய்து பாருங்கள்.

சுடுநீர்

சில நேரங்களில் புதிய துண்டு நீரை உறிஞ்சாமல் இருக்கும். அத்தகைய துண்டை சுடுநீரில் 25 நிமிடம் ஊற வைத்து அலசினால், துண்டு தளர்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், அழுக்கு அதிகம் உள்ள துண்டாக இருந்தால், சுடுநீரில் நன்கு ஊற வைத்து, கைகளாலேயே தேய்த்து துவைத்தால், அழுக்கு போவதோடு, துண்டும் பாழாகாமல் இருக்கும்.

  
டிடர்ஜெண்ட்

வேண்டுமெனில், சுடு தண்ணீரில் சோப்புத்தூள் போட்டு கலந்து, அக்கலவையில் துண்டை நன்கு 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சோப்பு போட்டு நன்கு துவைத்தால், அழுக்கு நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கொண்டும் துண்டில் உள்ள கறைகளைப் போக்கலாம். அதிலும் நிறம் மாறி உள்ள வெள்ளை நிறத் துண்டை, பேக்கிங் சோடா பயன்படுத்தி துவைத்தால், வெள்ளை நிறத் துண்டை பளிச்சென்று மாற்றலாம்.

வினிகர்

வினிகர் கூட கறைகளைப் போக்க உதவும் ஒரு சூப்பரான பொருள். அதற்கு நீரில் வினிகரை ஊற்றி, அதில் கறையுள்ள துண்டை ஊற வைத்து துவைக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. அதிலும் சோப்பு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, கறை படிந்த துண்டை ஊற வைத்து துவைத்தால், கறை நீங்குவதோடு, துண்டும் நல்ல மணத்தோடு இருக்கும்.

உப்பு

பெரும்பாலான மக்கள் வெள்ளை நிற துண்டைத் தான் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக வெள்ளை நிற துண்டில் உள்ள கறைகளைப் போக்குவது என்பது கடினம். ஆனால் அந்த வெள்ளைத் துண்டை உப்பு பயன்படுத்தி துவைத்தால், துண்டில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி துண்டு சுத்தமாக இருக்கும்.

ஃபேப்ரிக் சாஃப்ட்னர்

மேற்கூறியவாறெல்லாம் துண்டை துவைத்தப் பின்னர், துண்டில் நல்ல நறுமணம் இருக்க வேண்டுமெனில், துண்டை துவைத்த பின்பு, நீரில் சிறிது ஃபேப்ரிக் சாஃப்னரை கலந்து, அந்த நீரில் துண்டை நனைத்து பிழிந்தால், துண்டு நன்கு மணத்துடன் இருக்கும்.


முட்டை வெந்துவிட்டதா ? அறிந்து கொள்ள எக் டைமர் !!


சமையலறையில் பல புதிய விஷயங்கள் புகுந்துவிட்டன. ஆனால் அது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற விஷயங்களைப் பற்றி பார்த்ததில் எக் டைமர் தான் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே அது பற்றி ஒரு கண்ணோட்டம்…

பொதுவாக உணவு பொருளை நாம் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள, அதனை கையால் நசுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் வெந்துவிட்டதை அறிந்து கொண்டு இறக்கிவிடுவோம்.

அதே போல குக்கரில் வேக வைக்கும் போது உணவு பொருளுக்கு ஏற்ப விசில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுப்பை அணைத்து விடுவோம். ஆனால் இதில் எல்லாம் கண்டு பிடிக்க முடியாத ஒரு வகை உணவு பொருள்தான் முட்டை. ஆம். அழுத்திப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. குக்கரிலும் வேக வைக்க முடியாது. எப்படித்தான் முட்டை வேகும் நேரத்தை சரியாக கண்டுபிடிப்பது?

இதென்ன பெரிய விஷயமா? 10 நிமிடம் அல்லது முட்டை ஓடு உடைந்தால் முட்டை வெந்து விட்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், முட்டை சரியாக வெந்துவிட்டதா என்பதை கண்டறிய ஒரு சாதனம் உள்ளது. அதுதான் எக் டைமர்.

முட்டை வேக வைப்பதை கண்டுபிடிக்க ஒரு சாதனமா என்று வியக்காதீர்கள். அதிலும் எத்தனையோ வகை உள்ளது என்பது தான் விஷயமே. டிஜிட்டல் டைமர், ஹவர்கிளாஸ் வகை என பல வகைகளில் உள்ளது. டிஜிட்டல் டைமர் என்பது முட்டை வேகும் நேரத்தை டிஜிட்டல் கடிகாரம் போல கணிக்கிறது. ஹவர்கிளாஸ் வகையில், அதில் உள்ள மணல் போன்ற துகள், கீழுள்ள குவளையில் விழுவதைக் கொண்டு முட்டை வேகும் நேரத்தை கணித்துக் கொடுக்கிறது. முட்டையைப் போன்றே வடிவமுள்ள ஒரு சாதனமும் வந்துவிட்டது. அதனை வேக வைக்கும் முட்டையுடன் போட்டுவிட வேண்டுமாம். அது நிறம் மாறியதும் முட்டை வெந்துவிட்டதாக அர்த்தமாம்.

படித்ததில் பிடித்தது!

                                                  படித்ததில் பிடித்தது

ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார். விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.

ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை, பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.

விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை. விருந்தளித்தவர் சொன்னார் ''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே. ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான். எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.

நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது. அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை, சமூக அந்தஸ்து, செல்வச் செழிப்பு எல்லாம். நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள், நண்பர்களே!''
 
back to top