.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 16, 2013

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

"இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது!

தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

 "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே..., அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.

மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.

 "அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.

 "அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.

அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.

இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.

மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம் எப்படி வருகிறது?


கிராமத்து வயல்காட்டில் அடர் செடிகள் இரவில் வண்ண ஒளியால் தகதகக்கும். இதில் ஒளிப்பாய்ச்சலுக்கு காரணம் விளக்குப்பூச்சி எனப்படும் மின்மினிப் பூச்சிகளே. இந்த வெளிச்சம் எப்படி உருவாகிறது.

பொதுவாக ஒரு பொருள் ஒளி விடும் போது அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90 சதவீத வெப்பமும், 10 சதவீத ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த சிறியப்பூச்சி வெந்து கருகிவிடாதா? அப்படி எல்லம் நடப்பது இல்லை.

மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி (cold light), உயர் ஒளி (bioluminescence) என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்தப் பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும். சிறிதுகூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100 சதவீத ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே, மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளி செல்கள் உள்ளன.

இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியின் உடலுக்குள் வரும் காற்றுக்  குழாயிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ் என்ற நொதியினால் இணைந்து, ஆக்சிலூசிபெரிலின் என்ற பொருளாக மாறுகிறது. அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!

மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு.

உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும்,

 இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.

வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும்,

 பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.

 கருஞ்சிவப்பு வண்ணம், நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றை அறிவிக்கிறது.

விதவிதமான பூக்கள், அதைப் பெறுபவர் களுக்கு உரிய ஒரு தனியான செய்தியையும் வெளிப்படுத்துகின்றன.

 ரோஜா மலர்கள், `நான் உன்னை விரும்புகிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும்,

கார்னேஷன் பூக்கள், `நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும்,

 டபோடில் பூக்கள், `நீ தைரியசாலி என்பதோடு, நல்லவன்’ என்பதையும்,

சாமந்தி, `நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும்,

கிளாடியோலி, `உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும்,

 ஐரிசஸ், `என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும்,

 ஆர்க் கிட் மலர்கள், `நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும்,

 ஸ்னேப் டிராகன்ஸ், `நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும்,

சூரியகாந்திப் பூக்கள், `என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும்,

டூலிப் மலர்கள், `நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.
 
back to top