.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 17, 2013

மோட்டோரொல்லா நிறுவனம் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்!


மோட்டோரொல்லா நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 179 அமெரிக்க டாலர் விலை கொண்ட குவாட் கோர் ப்ராசசர் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரொல்லா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் மோட்டோ 'ஜி' என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் 8 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 179 அமெரிக்க டாலர்களாகவும், 16 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 199 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. கூகிள் உரிமை கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டோரொல்லா அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், இந்திய சந்தையில் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.5-அங்குல HD கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 டிஸ்ப்ளே

1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்

Adreno 305 ஜி.பீ. யூ

ரேம் 1GB

8GB and16GB சேமிப்பு வகைகள், விரிவாக்க கூடிய சேமிப்பு இல்லை,

5 மெகாபிக்சல் பின்புற கேமரா,


1.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,

இரட்டை சிம் variant

2070mAh பேட்டரி

Wi-Fi,

ப்ளூடூத்,

3G,

ஜிபிஎஸ்,

எ-ஜிபிஎஸ்,

GLONASS

Saturday, November 16, 2013

சூர்யா (நடிகர்) - வாழ்க்கை வரலாறு (Biography)



எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, நான்கு முறை ‘விஜய் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரே படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனைப் படைத்துள்ளார். இவரது அற்புதமான நடிப்புத் திறனால் ரசிகர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று நிற்கும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூலை 23, 1975

பிறப்பிடம்: சென்னை, தமிழ் நாடு, இந்தியா

பணி: நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு


சூர்யா அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடிகர் சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1975 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு சகோதரனும், பிருந்தா என்ற சகோதரியும் உள்ளனர். அவரது சகோதரரான கார்த்தியும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்


தன்னுடைய பள்ளிக் கல்வியை சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். பின்னர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இன்றைய திரையுலகப் பிரபலங்களான விஜய், விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா போன்றோர் அவரது கல்லூரி நண்பர்களாக இருந்தனர்.

ஆரம்ப கால வாழ்க்கை


நடிகரென்ற பெருமையோ, மமதையோ சிரிதளுவும் இல்லாத சிவகுமார் அவர்கள், தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்தார் என்பதற்கு சூர்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், ஆடை தயாரிப்புத் தொழிற்துறை மீது மிகுந்த ஆர்வமுடையவராகக் காணப்பட்டதால், ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற அங்கீகாரத்தை வெளிக்காட்டாமல், ஒரு தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்தார். ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவரை, இயக்குனர் வசந்த், அவரின் அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யவே, அவ்வேலையில் இருந்து விலகிக் கொண்டார்.

திரையுலக வாழ்க்கை


தமிழ்த் திரையுலகில் அறிமுகமானது மணிரத்னம் அவர்களின் தயாரிப்பிலும், இயக்குனர் வசந்த்தின் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலமாகத்தான். 1997ல் வெளியான இப்படத்தில், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார், அவர். அதன் பின்னர், ‘காதலே நிம்மதி’ (1998), ‘சந்திப்போமா’ (1999), ‘பெரியண்ணா’ (1999), ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ (1999), ‘உயிரிலே கலந்தது’ (2௦௦0) போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அவ்வெற்றியைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘நந்தா’ படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்து, அவரை முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. பின்னர், ‘உன்னை நினைத்து’ (2002), ‘ஸ்ரீ’ (2002), ‘மௌனம் பேசியதே’ (2002), ‘காக்க காக்க’ (2003), ‘பிதாமகன்’ (2003), ‘பேரழகன்’ (2004), ‘ஆய்த எழுத்து’ (2004), ‘மாயாவி’ (2005), ‘கஜினி’ (2005), ‘ஆறு’ (2005), ‘ஜூன் R’ (2006), ‘சில்லுனு ஒரு காதல்’ (2006), ‘வேல்’ (2007), ‘வாரணம் ஆயிரம்’ (2008), ‘அயன்’ (2009), ‘ஆதவன்’ (2009), ‘சிங்கம்’ (2010), ‘ரத்த சரித்திரம்’ (2010), ‘ஏழாம் அறிவு’ (2011), ‘மாற்றான்’ (2012) போன்ற படங்களில் நடித்து, வளர்ந்து வரும் ஹீரோக்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்தார்.

அவர் நடித்தப் படங்களில் ‘நந்தா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கெளதம் மேனனின் ‘காக்க காக்க’ திரைப்படம், அவரை மாஸ் ஹீரோவாக தமிழ் நெஞ்சங்களின் மனத்தில் பதிப்பிக்கச் செய்தது. எந்தவொரு திரை அனுபவமும், நடிகருக்குண்டான திறமைகளும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர், குறுகிய காலகட்டங்களிலேயே அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டு, ஓர் தலைச்சிறந்த நடிகராக உருவெடுத்தார். மேலும் அவர், கௌதம மேனனின் அடுத்தப் படைப்பான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்திற்காக, தவிர உடற்பயிற்சி மூலமாகத் தனது எடையைக் குறைத்து, ‘சிக்ஸ் பேக்ஸ்’ என்ற உடலமைப்பைத் தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அவர், ‘மன்மதன் அம்பு’ (2010), ‘கோ’ (2011), ‘அவன் இவன்’ (2011) போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக சூர்யா

ஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைக்கட்சியில் தொடங்கப்பட்ட கேம் ஷோவான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, பிப்ரவரி 27 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் தொடங்கிய அதில், ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை, அவர் அதைத் தொகுத்து வழங்கினார்.

திரைப்படமல்லாத அங்கீகாரங்கள்

அவர், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்ஃபீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, நெஸ்கஃபே, ஜண்டு பாம், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட், மலபார் கோல்ட் போன்றவற்றின் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார்.

இல்லற வாழ்க்கை

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்த போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர். கடைசியில் அவர்கள் பச்சைக்கொடிக் காட்ட, அவர்கள் இருவரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

பொது சேவை

அவர், ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நலனுக்காகவும், பாதியிலே பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தன்னலமற்ற தொண்டாற்றி வருகிறார். மேலும், புலிகளைக் காக்கப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வருகிறார். லாப நோக்கமற்ற அவரது தொண்டு நிறுவனத்தால், இதுவரை நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விச் செல்வம் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.

விருதுகள்

•2003  - சிறந்த நடிகருக்கான ‘ஐடிஎஃப்ஏ (ITFA) விருதை’, ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காகப் பெற்றார்.
•2003 – சிறந்த துணை நடிகருக்கான  ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பிதாமகன்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
•2004 – சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பேரழகன்’ திரைப்படத்திற்காக வென்றார்.
•2008 – ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’, மற்றும் ‘ஆண்டின் ஸ்டைலிஷ் யூத் ஐகான்’ என்று சொல்லி, ‘சவுத் ஸ்கோப் விருது’ வழங்கப்பட்டது.
•2009 – ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, ‘விஜய் விருதுகளை’, ‘அயன்’ மற்றும் ‘ஆதவன்’ திரைப்படங்களுக்காகப் பெற்றார்.
•2010 – ‘சிங்கம்’ படத்திற்காக ‘பிக் FM’ மற்றும் ‘விஜய் விருது’ அவரை ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, விருதுகளை வழங்கியது.
•2012 – சிறந்த நடிகருக்கான ‘சினிமா விருதை’, ‘மாற்றான்’ திரைப்படத்திற்காக வென்றார்.

மேலும் சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை’, 2001 ஆம் ஆண்டில் ‘நந்தா’ திரைப்படத்திற்காகவும், 2005 ஆம் ஆண்டில் ‘கஜினி’ திரைப்படத்திற்காகவும், 2008 ஆம் ஆண்டில் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்திற்காகவும் வென்றார்.

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

"இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது!

தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

 "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே..., அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.

மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.

 "அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.

 "அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.

அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.

இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.
 
back to top