.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 23, 2013

'ஜில்லா' படப்பிடிப்பு முடிவடைகிறது!

 

ஹைதராபாத்தில் 'ஜில்லா' காட்சிகள் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், மஹத், சம்பத் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்து, விநியோக உரிமை முடித்து திரையரங்கு ஒப்பந்தங்களும் தொடங்கிவிட்டன.

இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வந்தது. இன்றோடு படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் முடிவடைகிறது. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே காட்சிப்படுத்த இருக்கிறது.

படத்தின் வில்லன்களோடு ஸ்கேர்லட் வில்சன் ஆடும் பாட்டிற்கு ராஜு சுந்தரம் நடனம் வடிவமைக்கிறார். படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் பங்குபெறும், முதல் பாடலையும் சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இவ்விரண்டு பாடலும் முடிந்துவிட்டால், படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது.

ஒரு புறம் படப்பிடிப்பு நடந்துவந்தாலும், படத்தின் இதர பணிகள் மறுபுறம் படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே, பொங்கல் 2014ல் வீரத்தோடு சீறிப் பாய தயாராகி விட்டது 'ஜில்லா'.

மரம் முழுவதும் மருத்துவம்!


இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்டஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

 * வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

 * வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

 * நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

 * வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

 * புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

 * வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

 * வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

 * வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

 * சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

 * சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

 * வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

 * வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

 * வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

 * விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

 * அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

 * சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

 * ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

 * வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

 * மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
 * காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

 * பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

 * வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

 * புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

எனவே, இந்த கற்பக மூலிகையின் பயனை அனுபவிக்க தவறாதீர்கள்.

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு!

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.


ப்ரீத்தி ஷா சொல்கிறார் ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

கோச்சடையான் ஆச்சரிய ஜாதகம்!


ரஜினி. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திரையரங்கிற்கு இழுக்கும் மந்திரம். கோச்சடையான் படமும் முழுமையான ரஜினிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கே.எஸ். ரவிகுமார். படத்தில் கோச்சடையான்தான் அப்பா ரஜினி. இடைக்காலத் தமிழகத்தில் தென்தமிழ்நாட்டின் பாண்டியப் பேரரசை ஆட்சி செய்த புகழ்பெற்ற தமிழ் மன்னரின் படைத்தளபதியாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் தளபதியாக இருக்கும் அப்பா ரஜினியை மையப்படுத்திக் கதை நகர்கிறது என்றால், இரண்டாவது பாதியில் ’ராணா’வாகிய மகன் ரஜினி, தனது சாகஸங்களால் படத்தைத் தனது தோளில் சுமக்கிறாராம். தளபதியாக இருக்கும் அப்பா ரஜினி, போர்க்கலை மட்டும் தெரிந்தவர் அல்ல. பரதக் கலையிலும் வல்லவர். ஷோபனாவுக்கும் - அப்பா ரஜினிக்கும் படத்தில் ஒரு பரதப்போட்டி இருக்கிறதாம். மகன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவும் சாகஸங்கள் செய்யும் ஆக்‌ஷன் கதாபாத்திரமாக, நாட்டின் அரசியல் வாரிசாக நடித்திருக்கிறாராம்.

ரஜினியும் ரஜினியும்

ராணா ரஜினியின் அறிமுகக் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்குச் செமத்தியான வேட்டையாக இருக்கும் என்கிறார்கள். அப்பாவிடம் ஆலோசனை கேட்காமல், அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ராணா செய்யும் சில அதிரடிகள் காரணமாக, எதிர்பாராமல் ராணா,எதிரிகளின் கைகளில் சிக்கிக்கொள்கிறார். அந்த நேரத்தில் கோச்சடையான் ரஜினி வந்து மகன் ரஜினியைக் காப்பாற்றும் காட்சிக்குப் பாராட்டுகள் குவியப்போவது உறுதி என்கிறார்கள். சீன மார்ஷியல் ஆர்ட் சண்டைப் படங்களில், நாயகனும் அவனது நண்பனும் இணைந்து, எதிரியைத் தந்திரமாகத் தாக்கும் ஃபார்முலா உலகப் புகழ் பெற்றது. இதைப் போலவே அப்பா - மகன் என இரு ரஜினிகளும் இணைந்து எதிரியைத் தாக்கும் காட்சி, ஜப்பான் மற்றும் சீன, ஐரோப்பிய ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தாக இருக்குமாம்.

படத்தில் நாசர், ஜாக்கி ஷ்ராஃப், சரத்குமார், ஆதி, ருக்மிணி , ஷோபனா ஆகியோரின் கதாபாத்திரங்களும் பேசப்படுமாம். 126 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் படத்தின் திரைக்கதையில், ‘இண்டர்வல் முடிச்சு’ கிடையாது. முக்கியமாக இது 3டி அனிமேஷன் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தாத மேம்பட்ட அனிமேஷன் படம் என்பதால், லைவ் ஆக்‌ஷன் படம்போல உணரலாம் என்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய விஷயமாக இருக்கப்போவது ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள் அணிந்துவரும் ஆடைகளும்தான். தேசிய விருதுபெற்ற நீத்தா லுல்லாதான் கோச்சடையான் படத்தின் காஸ்ட்யூமர். இவர் தமிழ்நாட்டில் வந்து ஆய்வு செய்து, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான உடைகளை வரைந்து, நூற்றுக்கணக்கான டிசைன்களைக் கொடுக்க, அதிலிருந்து சௌந்தர்யா தேர்வு செய்திருக்கிறார்.

தெலுங்கில் விக்ரமசிம்ஹா

கோச்சடையான் படத்தில் வரும் தமிழ் மன்னரைப் போலவே ஆந்திராவில் வாழ்ந்த 'விக்ரமசிம்ஹா' என்ற மன்னரின் பெயரைக் கோச்சடையான் தெலுங்கு பதிப்புக்கு வைத்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பதிப்புகளுக்கு மட்டுமே ரஜினி குரல்கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் டப் செய்யப்படாமல் நேரடி தமிழ்ப் படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்காகவும், கடைசிக் கட்ட 3டி வேலைகளைக் கவனிப்பதற்காகவும் தற்போது சீனாவில் தங்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ஆர். அஸ்வின்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒன்று போர்க்களத்தைப் பற்றிய தீம் இசை கலந்த பாடல். “எதிரிகள் இல்லை” என்று தொடங்கும் இந்தப் பாடலை வைரமுத்து எழுத, ரஜினி பாடினார். தற்போது இதே பாடலை இந்திப் பதிப்புக்காக இஸ்ரத் கமீல் எழுத, அதை ரஜினியுடன் இணைந்து ரஹ்மான் பாடியிருக்கிறார். இசை மிக பிரமாண்டமான ‘லார்ஜ் ஸ்கேல் கம்போஸிங்’ முறையில் உருவாகியிருக்கிறது.
 
back to top