.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 23, 2013

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும்
 மனைவியுடன்
 சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
 வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
 என்று புரியும் என்று அடிக்கடி சவால்
 விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
 இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
 குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
 சொல்லிக்கொடுத்து
 சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
 செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
 இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
 கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
 வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
 நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
 வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
 மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
 ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
 கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
 உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
 வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
 என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
 கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
 கணவனுக்கும் என பைக்குள்
 பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
 இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
 குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
 படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
 கெடுத்து வச்சிருக்கே
 என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
 உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
 பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
 ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
 தொடங்கி நம் மூதாதையர்கள்
 சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
 பிள்ளைகளுக்கு வளமான
 வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
 ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
 அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
 இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
 குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
 இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
 ஒரு குடும்பம்
 மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
 கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
 செலுத்தாமல்
 அன்பால் சாதிக்கும்
 மனநிலையை கொண்டிருந்தால்தான்
 எல்லா வளமும்
 பெற்று பல்லாண்டு வாழ
 முடியும்...

திருமண பழமொழிகள்!

 
 திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.

- அமெரிக்கா

மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

- அரேபியா

 மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா

 கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.-

 செக்கோஸ்லோவேகியா


 திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.-

 டென்மார்க்



 திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.

- வேல்ஸ்

 அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள். - ஜெர்மனி

 பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!-

ஐரோப்பா

 திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது - ஸ்காட்லாந்து

 மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.- ஹாலந்து

 கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம் - தமிழ் நாடு

 இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்! - இலங்கை

கால்சியம் குறைபாடு இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிடுங்க!

 nov 22 - health calcium_foods_

மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. மேலும் தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமாகலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவதில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள்.

இந்த கால்சியம் எலும்புகள், பற்களுக்கு மட்டுமல்ல, தசை இயக்கத்திற்கு நரம்புகள் இயக்கத்திற்கு ரத்தம் உறைவதற்கு தேவையான தாதுப்பொருள்.உடலுக்கு கால்சியம் வாழ் நாள் முழுவதும் தேவை. ஆனால் வளரும் பருவத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக அளவில் அவசியம் தேவை.
உடலில் அதிகம் உள்ள தாதுப் பொருள் கால்சியம். ஒரு நன்கு வளர்ந்த ஆணிடம் 1200 கிராம் கால்சியமும், பெண்ணிடம் 1000 கிராமும் உள்ளது. உடல் எடையில் 1.5 லிருந்து 2.0 சதவிகிதம் கால்சியம் உடலில் உள்ள எல்லா தாதுப் பொருட்களில் 39% கால்சியம் தான். இதில் 99% எலும்பில் தான் (பற்களை சேர்த்து) இருக்கிறது. மீதி 1% ரத்தத்திலும், சில திசுக்களிலும் இருக்கும்.கால்சியத்தின் உற்ற தோழன் பாஸ்பரஸ். இவை இரண்டும் இணைந்து தான் கால்சியம் பாஸ்பேட்டாக (கால்சியம் கார்பனேட்டுடன்) எலும்புகளில், பற்களிலும் அமைந்திருக்கின்றன.

இந்நிலையில் சூரிய ஒளியே படாத சூழலில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், பால், இறைச்சி போன்றவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை வரும். கால்சியம் குறைபாடானது, தசைகளை வலுவிழக்கச் செய்வதுடன், தசைகளில் வலியையும் உண்டாக்கும்.

தசைகள் பலவீனமாவது, தசைப்பிடிப்பு, நாள்பட்ட கால்வலி, நாள்பட்ட முதுகு வலி, கால்களில் ஒருவித மதமதப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம். உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் மறைமுகக் காரணமாகலாம். வலி என்றதும் பெரும்பாலான மக்கள், உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொள்வார்கள். அதில் குணம் தெரியாவிட்டால், அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தாவி, ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை வரை போவார்கள்.

எதிலுமே பலன் இருக்காது. சரியான வலி நிவாரண மருத்துவரை அணுகி, நோயின் அறிகுறியைச் சொல்லி, அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவை ரத்தத்தில் கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால், எலும்புகள் வலுவிழந்து நொறுங்கிப் போகலாம். வயதானவர்களாக இருந்தால், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். லேசான பொருளைத் தூக்கினாலே எலும்புகள் நொறுங்கலாம். சின்ன அடி பட்டாலே தொடை எலும்புகளும், முதுகெலும்பும் தானாகவே நொறுங்கலாம். முதுகெலும்பு நொறுங்குவதால் எலும்புகள் அழுத்தப்பட்டு, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

இப்படி சாதாரண வலி முதல் வாழ்க்கையையே முடக்கிப் போடும் அபாய வலி வரை பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான கால்சியம் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே புத்திசாலித்தனம். 24 மணி நேரமும் ஏசி அறையிலேயே இருப்பது, வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது, சருமம் வெளியில் தெரியாமல் உடல் முழுக்க மூடிக் கொண்டு செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெயிலே படாமலிருந்தாலும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்…

ஐநாவும் என்னை அழைத்தது... சுவர்ணலட்சுமி சாதனை!

 

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.


சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

 பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, சதுரங்கம் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
 இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.


ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.


இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விடயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன.

‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள்.

முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999.

(சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)
 
back to top