.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 26, 2013

எப்படி? எப்படி? எப்படி?

அறிவது எப்படி; புரிவது எப்படி; உணர்வது எப்படி; தெளிவது எப்படி; பார்ப்பது எப்படி; கேட்பது எப்படி; கவனிப்பது எப்படி; தேர்ந்தெடுப்பது எப்படி இருப்பது “இலக்கைக் குறிப்பது எப்படி?” – என்று!

“வாழ்க்கை” – என்கிற பயணத்தில் நாம் அடைய வேண்டிய இடம் எது? அதனைக் குறித்த பிறகு – அதனை அடைவதற்கான வழித்தடம் எது? அந்த வழியில் நாம் கடக்க வேண்டிய மைல் கற்கள் எவை? என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடித்து – அமைத்துக் கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இலக்கைக் குறிப்பதன் அவசியமென்ன என்கிறீர்களா? “இதுதான் நான் அடைய விரும்பும் இடம்” என்று குறித்தால்தான் நமது கவனம் அந்த இடத்தை நோக்கிக் குவியத் தொடங்கும். மனிதனுக்கு மிகச் சிரமமான காரியம் எது தெரியுமா? மனதை ஒன்றின் மீது குவிப்பது தான். அது மட்டும் சாத்தியமாகிவிட்டால் மனிதனால் இயலாதது என்பதே இருக்காது.

மனித இனத்தின் மிகப்பெரிய துயரம் என்னவெனில் மனிதர்களின் கவனச் சிதறல் தான். மனம் சிதறிக்கிடக்கும் போது அது கவலையாய் பரிமாற்றம் ஆகிவிடுகிறது. எண்ணம் அலையும்போது மனம் அமைதியாய் இருக்காது. மனம் அமைதியாய் இல்லாதபோது நாமெடுக்கும் முடிவுகள் சரியானவையாய் இருக்க முடியாது. முடிவுகள் சரியில்லாதபோது நாம் புரியும் செயல்கள் தீர்மானமானதாக இருக்காது. தீர்மானமில்லாத செயல் எதுவும் விரும்பத் தகுந்த பயனை தராமல் போய்விடுமல்லவா?

எனவே “நாம் மனம் குவிப்பது” அவசியம் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வாறு நம் மனதைக் குவிக்கத்தான் “இலக்கு” என்னும் ஒன்று தேவைப்படுகிறது.

சரி… நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இலக்குகள் இருக்கக்கூடும். அவற்றை எப்படித் தீர்மானிப்பது என்பதில் உள்ள நுட்பங்களை இங்கே காண்போம்.

உற்று நோக்கினால் நாம் ஒவ்வொருவரின் இலக்குமே “மகிழ்ச்சி”யாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதிசயம் என்ன தெரியுமா? ஒவ்வொரு தனிமனிதனும் அந்த மகிழ்ச்சியை அடைவதற்கு வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறான்.

ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் பாதை – வேறொருவருக்குப் பொருந்துவது இல்லை. ஒருவருக்கு விவசாயம் மகிழ்ச்சியைத் தரலாம்; வேறொருவருக்கு இசைப்பது மகிழ்ச்சியைத் தரலாம். இன்னொருவருக்கு விமானம் ஓட்டுதல் மகிழ்ச்சியைத் தரலாம்; ஒருவருக்கு ஆராய்ச்சி செய்வதும்; வேறொருவருக்கு காவல்பணியும், இன்னொருவருக்கு மாவட்ட ஆட்சியராய் இருப்பதுவும் மருத்துவராகவும், வழக்கறிஞராகவும் ஹோட்டல் நிர்வாகம் புரிவதும் என இப்படி இன்றைய நூற்றாண்டில் எண்ணற்ற கலைகள்; எண்ணற்ற துறைகள், எண்ணற்ற திறமைகள் – எனப் பல்வேறு வழிகளில் பயணம் செய்து தாம் விரும்பும் மகிழ்ச்சியை அல்லது குதூகலத்தை பரிசாகப் பெறலாம்; பெறமுடியும். இப்படிப் பரந்து விரிந்து கிடக்கின்ற – இன்றைய நவீன தொழில் யுகத்தில் தனக்கான ஒரு இலக்கைத் துல்லியமாகக் குறித்துக் கொள்தல் அவசியம் என்கிற அதே நேரத்தில் அது எவ்வளவு கடினமானது என்பதும் – இன்று நாம் அன்றாடம் உணர்ந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.

ஆகவேத்தான் இலக்கைக் குறிப்பதற்கான வழிமுறையைத் தெளிவாக அறிந்து கொள்வது மேலும் அவசியமாகிறது.

இலக்கைக் குறிக்க விரும்பும் யாரும் – தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகளை இப்போது காண்போம்.


1. நம் ஒவ்வொருவரின் “தன்முனைப்பையும்” (Self Esteem) அதிகரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் “தன்னார்வம்” மிக்க மனிதராக மாறுவோம். தன்னார்வமின்றி நம்மால் எதையும் சாதிக்க இயலாது. சாதிக்க வேண்டுமெனில் எதைச் சாதிப்பது என்பதைக் குறிக்க வேண்டுமல்லவா?

2. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் “தனித்திறமையை” – உள்ள பூர்வமாக உணர்ந்து தெளிய வேண்டும். இது ஆளுக்கு ஆள் வேறுபடும். இந்த வேறுபாடுதான் ஒருவரிடமிருந்து – இன்னொருவரை உயர்த்தியோ தாழ்த்தியோ காட்டுகிறது. தனித்திறமையை உணராதவரால் இன்றைய பந்தயத்தில் பங்கேற்று வெற்றிபெற இயலாமல் போய்விடும்.

3. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய “இப்போதைய தேவை எது?” என்றும், “நாளைய தேவை எது?” என்றும் உணர்ந்து – அவற்றை முன்னுரிமை (priority) அடிப்படையில் வரிசைப் படுத்திக்கொள்ள பழக வேண்டும். இது மிக முக்கியமான பயிற்சி. பழகப் பழகத்தான் நமது தேவை எது எனத் தெளிவு பெறும் பக்குவம் வாய்க்கப் பெறுவோம்.

மீண்டும் ஒரு முறை மேற்கண்ட மூன்று குறிப்புகளிலும் உங்கள் கவனத்தை ஓட விடுங்கள். இப்போது புரிகிறதா? – தன் முனைப்பு போதுமானதாக இருப்பவன்தான் முன்னேறும் எண்ணம் கொள்வான். அப்படிப்பட்டவன் பயனுள்ள பயிற்சிகளில் ஈடுபட்டு அவற்றின் மூலம் தன் முயற்சி செய்வான். உண்மைதான். ஆனால் அவனால் எப்போடு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடியும் தெரியுமா? – அவன் மேற்கொள்ளும் பணியில் – அவனது தனித்திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது தான்! அப்போதுதான். அவன் அர்ப்பணிப்பு மிக்கவனாக திகழ்வான்.

பிறகென்ன – அர்ப்பணிப்பு மனோபாவம் கொண்ட எவனும் மகத்தான வெற்றிப் பெறுவான் என்பது தானே காலங்களை வென்று இருக்கும் வரலாறு, நமக்கு வழங்கும் பாடங்களாகும். நடைமுறை உண்மைகளும் இதையே நிரூபிக்கின்றன.

எனவே மேற்கண்ட “தன் முனைப்பு” “தனித்திறமை”, “தன் தேவை” – என மூன்றையும் சரியான முறையில் கைவரப் பெற்றுவிட்டால், தெள்ளத் தெளிவான துல்லியமான இலக்குகளைக் குறித்துக் கொள்ளுதல் எளிதாகிவிடும்.

முன்னேற மூன்றே சொற்கள், மூன்றே பண்புகள் ஆகிய தீர்மானமான முடிவு, இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர் மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று பண்புகளை, மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகிவிடுகிறது, விளைவு படுத்தப்படுகின்றது. முடிவு நல்லதாக அமைகின்றது.

இவை நம்மிடையே உள்ளவை
இந்த மூன்று பண்புகளும் நம்மிடையே உள்ளவைதாம். முன்னர் சொன்ன மூன்று பண்புகளையும் முடிவு, முயற்சி, உழைப்பு ஆகிய மூன்றையும் நாம் வருந்தி வருத்திப்பெறவேண்டும். ஆனால் நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்ற இந்த மூன்று பண்புகளையும் நாம் நாம் நம்மிடமிருந்து விட்டுவிட்டால் போதும், நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்தப் பண்புகளை உதறி எறிந்துவிட்டால் போதும். நாம் வெற்றி கண்டுவிடலாம்.

நாவடக்கம் என்பார்களே

நாவடக்கம் என்று கேள்விப்பட்டிருப்போம். நாவை அடக்குதல் என்பது பிறர் மனம்புண்படும்படி பேசாதிருத்தல்; வேண்டாத விவாதிதங்களில் ஈடுபடாதிருத்தல், வீணான கேளிக்கைப் பேச்சில் ஈடுபடாதிருத்த் ஆகிய மூன்றையும் விட்டு விடுவது தான். அப்படிப் பேச நேரும்போது நாவை அடக்கிவிடுவதுதான் நாவடக்கம் என்பது.

துன்பங்களுக்கு அடிப்படை


நம் முன்னோர்கள் நாவடக்கம் என்று சொன்னதை, இன்றைய அறிவியல் அறிஞர்கள், மூன்றாகப் பகுத்து மக்கள் மனங்கொள்ளும் வகையில், சமுதாயத்தில் உள்ள நடைமுறைக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளார்கள். நுணுகி நுணுகி ஆராய்ந்த பார்த்தால் நமக்கு ஏன் பலருக்கும் வருகின்ற துன்பங்களின் பெரும் பகுதி இவற்றின் வழியாகத்தான் வருகின்றன. என்பதை அறிந்துகொள்ளலாம் தவளை தன் வாயினால் கெட்டுவிடுகிறது என்று கிராமங்களில் பழமொழியாகச் சொல்வார்கள். தவளை மனிதர்கள் ஒரு காலும் மனிதர்கள் ஒரு காலும் முன்னேற முடியாது.

பிறர் பற்றிக் கருத்துரை வழங்குதல்


ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு கணிப்பு. அவரது நடை முறைகள் பற்றிய ஒரு முடிவு இருக்கவே செய்கின்றது, ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஒரு அலுவலகத்தில் 40 பேர் வேலை செய்கிறார்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தன்னைத்தவிர மற்ற 36 பேரைப் பற்றிய கருத்தை, முடிவை வைத்தே இருக்கிறார்கள். நல்ல, பாராட்டக் கூடிய முடிவாக, கருத்தாக இருக்குமானால், அதுவும் தேவை நேர்ந்தால் மட்டுமே சொல்லலாம். இல்லாவிட்டால் சொல்லாமல் இருந்து விடுவதே நல்லது. தேவை இல்லாத இடத்தில், பேசாமல் இருப்பதே அறிவுடமை. மாறாக குறையான கருத்துக்களைத் தெரிவிக்க நேர்ந்து விடுவதால் அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் நமக்கு பகைவர் ஆகி விடுகிறார். ஒவ்வொருவரைப் பற்றிய குறைகளை வெளிப்படுத்துவோமானால் 39 பேரும் நமக்கு பகைவர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மைச் சுற்றிலும் பகைமைதான் மிஞ்சும்.

பல அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமே இப்படிக் கருத்துத் தெரிவிப்பதுதான். இவர் குறையில்லாதவராக இருந்து கருத்துத் தெரிவித்தால்கூட உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? அதேபோல் தொழில் செய்யும் இடங்களில், குடும்பத்தில், உறவினர்களிடையில், ஏன் நாம் பழுகின்ற, பணி புரிகின்ற அனைத்து இடங்களிலும் நாம் இவ்விதம் கருத்துத் தெரிவிப்பதால் துன்பத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.

ஒரு மாதம் சோதனை முயற்சியாக யாரைப்பற்றியும் கருத்துத் தெரிவிப்பதில்லை என்ற முடிவோடு நடந்து பாருங்கள். துன்பங்கள் குறையும். பிறகு துன்பங்கள் இல்லாமலேயே போகும். யாராவது வற்புறுத்திக்கேட்டால் கூட மன்னிக்கவும் என்று பதில் சொல்லிவிடுங்கள். (No Comments) என்று முடிவு செய்து கொண்டே உங்கள் அன்றாடச் செயலைத் தொடங்குங்கள். ஏதேனும் கருத்துத் தெரிவிக்கும் அவசியம் நேர்ந்தால் பிறர் மனம் புண்படாத வகையில் சொல்லுங்கள்.

வீண் விவாதங்களில் ஈடுபடுதல் (Arguments)

கருத்துத் தெரிவித்தல் வேறு, விவாதித்தல் வேறு. தான் எடுத்துக் கொண்ட கொள்கை சரியா? தவறா? என்றே கருதாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போலப் பேசுகின்றவர்கள் உலகம் அறவே வெறுத்து ஒதுக்கி விடுகின்றது. அத்தகையவர்களைக் கண்டால் உலகம் ஒதுங்கிக் கொள்கிறது. அவர்களுக்கு எவ்வித பங்களிப்பையும் கொடுக்க நல்லவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். நாளடைவில் இத்தகைய “விவாதிகள்” (augumenters) இருந்தும் கூட வாழ்வில் எந்தத் துறையிலும் முன்னேற முடியாமல் தடைப்பட்டுப் போய்விடுகிறார்கள்.

வீண் அரட்டை (Gossip)

அதேபோல் எப்பொழுதும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள். மணிக்கணக்காகப் பேசுவார்கள். கூட்டம் போட்டு பேசுவார்கள். ஒரு பயனும் இருக்காது. இத்தகையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தாங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். இந்த வீண் அரட்டைகளால் கருத்து வேறுபாடுகள் தோன்றி, விவாதங்களில் ஈடுபட்டு ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் தெரிவித்து, வெளிப்படையாகச் சொல்லவோமானால் திட்டித் தீர்த்து சுற்றிலும் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த மூன்று தன்மைகளும் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்த மூன்று குணங்களும் எந்த அளவு இருக்கிறது என்று கணியுங்கள். இதற்கு ஒரே வழி கூடுமானவரை வாய் திறவாதிருத்தல்தான்; இதனால் நன்மைகள் அதிகம். பிறர் உதவியின்றி நீங்களே செய்யக்கூடிய இந்தக் காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது தினம் எழுந்திருக்கும்போதே ஒரு முறை நினைவு கூறுங்கள் (No Comments, No argumensts, No gossip) இதுவும் ஒரு வகையில் இறைவழிபாடுதான்.

உங்களை காதுகளை கொடுங்கள்


மாறாக பிறர் சொல்லுகின்ற நல்ல கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள். அனுபவமும் அறிவும், பண்பும் நிறைந்த மனிதர்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் நம்மைச் சிந்திக்கச் செய்யும். தீமைகளிலிருந்து விலகச்செய்யும். நன்மைகளை நாடி நடக்கச் செய்யும், அதனால்தான் அறிஞர்கள் நல்லவர்களின் அறிவுரையைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்கள். நாம் நம் காதுகளைக் கொடுப்போம்.

எலுமிச்சை -பெயர் காரணம்!

 
எலுமிச்சை இதை


 தேவக்கனி, 


இராசக்கனி 


என்றும் கூறுவார்கள்.


எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். 



ஆனால் 


எலுமிச்சையை மட்டும் எலி 


தொடவே தொடாது. 



எலி மிச்சம் வைத்ததாதல்தான், 


இந்தப் பழத்திற்கு எலிமிச்சை 


என்பது மருவி,



என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.

மாணவர்களும் மன ஆற்றலும்!

இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.

பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.

‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த குரங்கு கட்கும் உள்ளுணர்வாய் சென்றடைந்ததை நாம் அறிவோம். அதுபோல் பெரும்பாலும் பெற்றோர் விருப்பப்படி எதிர்கால படிப்பைத் தேர்வு செய்கிறோம்.

விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தை விரும்பு என்பதற்கேற்ப, தேர்வு செய்த பாடத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு, திட்டமிட்டு, முழுமன ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கனிகள் நம் கரங்களில் தவழுவதை எவராலும் தடுக்க முடியாது. அதற்கு சில குறிப்புகள்:

மனம் ஒரு மகத்தான சக்தி மிக்கது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியத்
திண்ணிய ராகப் பெறின்


என்றார் வள்ளுவர்.

‘நல்ல எண்ணங்களே நல்ல விளைவுகளைத் தரும். நமது எண்ணங்களே நம் வாழ்க்கையை நடத்துகின்றன. உன்னை நம்பு என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் நீ வாழலாம் என்றொரு பாடல் உள்ளது.

தன்னையறிந்தின்ப முற வெந்நிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெந்நிலவா

என்றார் வள்ளலார்.

ஆகவே, அடிப்படையில் எவர் ஒருவர் நெப்போலியனைப் போல் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்துள்ளாரோ அவரால் இலக்கினை சுலபமாக அடைய முடியும்.

Arise, Awake And Stop not till the goal is reached

என்ற விவேகானந்தர் குரலை என்றும் நினைவில் கொண்டால், தொய்வின்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

நேரம் உயிரை விட மேலானது ஏனெனில் உயிருக்கு அழிவில்லை. உடலை விட்டு சென்று விடுகிறது.

ஆனால், சென்றநேரம் திரும்பக் கிடைக்காது. நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துபவர்கட்கு வானத்தையே கையகப் படுத்தும் திறமை வந்து விடும்.

முழுமன ஈடுபாடு மிகவும் அவசியம். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனம் சிதறாமல் கவனித்து மனதில் பதிய வைத்தல் மிகவும் பயனுடையது.

அந்தப் பதிவுகளை 24 மணி நேரம் / ஒரு வாரம் / ஒரு மாதம் / மூன்று மாதம் / ஒரு வருடம் என ஐந்து முறை நினைவுக்குக்கொண்டு வந்தால் என்றும் மறவாமல் ஆழ்மனதில் இருக்கும். தேவைப்படும் போது வெளிமனதுக்கு கொண்டு வந்து விடலாம்.

நம் மூளை வினாடிக்கு 14 முதல் 40 முறை சுழலுகிறது. இதை EEG என்ற கருவி மூலம் கண்டு பிடிக்கலாம். நமது மூளை / மன அலைச்சுழல் எந்த வேகத்தில் இருக்கும் போது பதிகிறதோ அதே அலை இயக்கம் வரும்போது தான் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர முடியும். அமைதியான மன நிலையில் பதிவானவைகள் பதட்டப்படும்போது நினைவுக்கு வராது. எனவே 14க்கும் கீழ் மன அலைச்சுழல் வேகத்தைக் கொண்டு வந்துவிட்டால் மனம் நம் வயப்படும்.

அதற்கு எளிய பயிற்சி

உடல் தளர்வுறும் போது
மனம் தளர்வுறுகிறது
மனம் தளர்வுறும் போது
மூளையின் அலைச்சுழல் வேகம் குறைகிறது
மூளையின் அலைச்சுழல் வேகம் குறையும் போது
வலது மூளை வேலை செய்கிறது
அப்போது இறைநிலையுடன்
பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

அந்நிலையில் நாம் எண்ணும் எண்ணங்களை பேசும் பேச்சுக்கள், செய்யும் செயல்கள் முழுமையான பலன்களைத் தருகிறது.

உடல் தளர்வுப் பயிற்சி

தளர்வாக அமர்ந்து கொண்டு, கைகளைக் கோர்த்து, கண்களை மூடி லேசாக மூச்சு விடவும். நெற்றி தசைகள், குழப்பம், மன இறுக்கத்தின் இருப்பிடம்; கன்னங்கள், தோள்பட்டைகள், உணர்ச்சிகளின் இருப்பிடம்; தாடைகள், புஜங்கள், கோபத்தின் இருப்பிடம்; பின் கழுத்து கவலை வருத்தங்களின் இருப்பிடம்.

இந்த உறுப்புக்களைத் தளர்வுறச் செய்தால் தொடர்புடைய உணர்வுகளும் நீங்குகிறது. கீழ்க்கண்டவாறு வரிசைப்படி தளர்வுறச் செய்யும்.

நெற்றி தசை, கண்கள், கன்னம், நாக்கு, தாடை, கழுத்து, பின்கழுத்து, தோள் பட்டைகள், புஜங்கள், கைகள், விரல்கள் மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி, இடுப்புப் பகுதி, தொடை, முழங்கால், பாதம்.

தளர்வுற்றபின், தேவையான இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீராகப் பாய்ந்து நிரம்புவதாய் பாவித்து, பின் படிப்பதில் ஈடுபட்டால் பாடம் கவனித்தால் முழுப் பலன் கிடைக்கிறது. தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.

நாகரீக கோமாளிகள்!

 

ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.

நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்

நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.
 
back to top