.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 28, 2013

நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?

அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.

ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

பாதாம் சூப் - சமையல்!


 பாதாமைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவும்.

அதுமட்டுமின்றி இந்த சூப் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது அந்த பாதாம் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்...


தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/4 கப்

 வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்

 தண்ணீர் - 4 கப்

 பால் - 1 கப்

 உப்பு - தேவையான அளவு

 மிளகு தூள் - 1/8 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 குங்குமப்பூ - 1 சிட்டிகை


 செய்முறை:

முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ளதை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பொன்னறிமாக வறுக்க வேண்டும்.

பின்பு அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி, பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையான நன்கு கொதித்ததும், அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து, உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே குங்குமப்பூவை தூவினால், சுவையான பாதாம் சூப் ரெடி!!!

வாழக்கற்றுக்கொள்ளுங்கள்...?

தண்ணீர் ஏன் அழுக்கடைவதில்லை? ஏனென்றால் அது ஓடிக்கொண்டே இருப்பதால். தன்ணீர் ஏன் அழுகிப் போவதில்லை? ஏனென்றால் அது ஓடிக் கொண்டிருப்பதால் நீர் ஆறாக ஒடி, நதியாகி, கடலாகி பிறகு பெரிய சமுத்திரமாக எப்படி மாறுகிறது? அது ஓடிக் கொண்டே இருப்பதால். அதனால் மனிதனே நீ தேங்கி நிற்காதே. ஓடிக்கொண்டே இரு. முன்னேறிக் கொண்டே இரு.

பொதுவாக இன்றைய இளைஞர்களிடம் காணப்படும் மிக மோசமான குணம் என்ன வென்றால் சீக்கிரம் மனத்தளர்ச்சியடைந்துவிடுவது தான். தன்னம்பிக்கையுடன் போராடுவதில் சில சமயம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.. வாழ்வு என்பது ஏதோ வந்ததைப் பெற்றுக் கொள்வதல்ல. வாழ்வு நீரோட்டமல்ல வாழ்வு எதிர்நீச்சல். அது ஒரு போராட்டம். வாழ்வு ஒரு துடிப்பு. அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து போவதல்ல தாங்கள் செய்யும் வேலையில் தான் வேலைபளு, மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்று கூறிக் கொள்ளும் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது. எதில் தான் இல்லை கஷ்டம். துப்புரவு தொழிலாளி முதல் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் வேலை செய்யும் பெரிய அதிகாரி வரை அவரவர் தொழிலில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உளளது.

உண்மையான மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை. அதைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளு கின்ற கடின உழைப்பிலேயே உள்ளது என்கிறார் பெர்னாட்ஷா. சிரத்தை இல்லாமல் எதையும் அடைய முடியாது. ஓர் இந்தியன் இரண்டு ஜப்பானியனின் மூளைபலம் கொண்டவன். ஆனால் இரண்டு இந்தியர்களின் வேலையை ஒரு ஜப்பானியன் செய்து வருகிறான் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். காரணம் என்னவென்றால் இந்தியர்களிடம் சிரத்தையோடு வேலை செய்யும் மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே என்றும் கண்டறிந்தார். தன்மீது நம்பிக்கையும் தான் செய்யப் போகிறகாரியத்தின் மீது உண்மையான ஆர்வமும் இல்லாததுதான் சிரத்தை இல்லாமல் போவதன் காரணம் ஆகும். வெளியில் இருந்து உனக்குள் திணிக்கப்படும் எந்த உந்துதலும் உண்மையான ஆர்வமாக மாறமுடியாது. உன் ஆர்வமும் நம்பிக்கையும் உனக்குள்ளே இருந்து வர வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு துன்பங்கள் வருவது அவற்றைநாம் அனுபவிப்பதற்காக அல்ல. அரிசிக்குப் பாதுகாப்பாக உமி இருப்பது போல, பலாப்பழத்துக்குப் பாதுகாப்பாக அதன் தோல் இருப்பது போல, ரோஜா பூவுக்குப் பாதுகாப்பாக முள் இருப்பது போல நாம் அடையக் கூடிய இன்பங்களுக்கு பாதுகாப்பாக இறைவன் துன்பங்களை அமைத்து வைத்திருக்கிறான். இன்று, தற்கொலைகள் அதிகமாகி வருவதற்கு காரணம் தனக்கு வரும் துன்பம்தான் உலகிலேயே பெரியது என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அவசர அவசரமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். “தம்மிலும் கீழோரை நோக்குக” என்றவரிகளை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. காதலில் தோல்வி-அது வெறும் இனக்கவர்ச்சி யாக கூட இருக்கலாம். இவர்களாகவே அதை தெய்வீகக் காதலாக நினைத்துக் கொண்டு அந்த மாயையிலிருந்து விடுபடாமல் இறைவன் கொடுத்த அற்புதமான மானிடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்கிறார்கள். என்னே! இவர்களின் பரிதாப நிலை! மகிழ்ச்சியைத் தேடி அலையக்கூடாது. துன்பத்தைக் கண்டு ஓடக் கூடாது. இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டாலே நிம்மதியான வாழ்வு நிலைத்து நிற்கும்.

தள்ளி நின்று பார்க்கும் வரை எல்லாமே பிரச்சனைதான். துணிந்து நெருங்கினால் அது உன் நண்பனாகக் கூட மாறிவிடும். “நான் எதை மேற்கொண்டேனோ அதில் வெற்றி பெற்றேன்”, காரணம் அதை நான் மனப்பூர்வமாக விரும்பினேன், என்றான் மாவீரன் நெப்போலியன். அவனது வளர்ச்சிக்கு அவனது ஈடுபாடே காரணமாக அமைந்திருந்தது. இது வரைதான் என்னால் முடியும். இதற்கு மேல் என்னால் முடியாது என்று மனதை மட்டப்படுத்தி வைத்திருப்பதை விட்டுவிடுங்கள். “வானமே எல்லை” என்று யாராவது சொன்னால், “வானந்தானா எல்லை? என்றகேள்வி கேளுங்கள்.

ஒரே சிந்தையில் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த வேலையின் தரம் சற்றுக் குறைய நேரிடலாம். அதனால் உங்கள் மனதை கொஞ்சம் வேறு மகிழ்ச்சியான நிலைக்கு மாற்றுங்கள். அதாவது நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, கொஞ்சம் காலாற எங்கேனும் நடந்துவிட்டு வருவது போன்றவை. “Learn to Combine relaxation with activity” என்று கூறுகிறார் ஆல்டஸ் என்ற அறிஞர்.

வாழ்க்கை என்பது வாழ்ந்து தீர வேண்டிய ஒரு வி‘யம். அதை இப்படித்தான் வாழணும் என்று மனதில் ஒரு வரைமுறையை, நியதியை, சில கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு வாழ வேண்டுமே தவிர கற்பனையாக மனதில் சஞ்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அந்த கற்பனை நடைமுறைக்கு வராதபோது, மனம் ஏமாற்றம் அடைந்து, அதை தோல்வியாக எடுத்துக் கொள்கிறது.

தன் மீது எறியப்படும் கற்களை தான் கட்டும் வீட்டுக்கு அடிக்கல்லாகப் பயன்படுத்திக் கொள்கிறவன் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருப்பான். வாழ்க்கை சிலருக்கு இனிமையாக இருப்பதற்கு காரணம் அவர்களது அணுகுமுறையும் சூழ்நிலைகளும் தான். சூழ்நிலைகளை நாம் குறைகூறமுடியாது. அணுகுமுறை தவறாக இருக்கலாம்.

நாம் வாழ்க்கையை நேசிக்கப் பழக வேண்டும். அதற்கு முதலில் உங்களையே நீங்கள் நேசிக்கப் பழக வேண்டும். உங்களை நீங்கள் நேசிக்கப் பழகினால் உலகம் உங்களுக்கு இனிமையானதாக காட்சியளிக்கும். அப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் எல்லாமே உங்களுக்கு ஒரு கவிதையாக தோன்றும்.

துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

துணிவால் துன்பங்களை தூளாக்க வேண்டும்
 

உபத்திரவங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

உழைப்பால் அவைகளை உதைத்து தள்ள வேண்டும்
 

மனக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

மதி நுட்பத்தால் அவைகளை மடக்கித்தள்ள வேண்டும்
 

பணக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

படாதபாடு பட்டு பணக்கஷ்டத்தை துரத்தி அடிக்க வேண்டும்.

பெரிய நம்பிக்கை.........!

உலகில் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தங்களுடைய நம்பிக்கையை சிறிய செயல்களில் செலுத்தி வீணாக்கி விடவில்லை.

இதற்கு மாறாக நம்பிக்கையை பெரிய செயலில் செலவிடுவதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்து, அதற் காக ஓயாது பாடுபட்டு முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஜான் பயர்டு என்பவர் தான் டி.வி.யைக் கண்டு பிடித்தார். அவருடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், அளவு கடந்ததாகவும் இருந்தது என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும்.

நம்முடைய நம்பிக்கையை எதில் வைத்து எப்படி செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஜான் பயர்டின் இளமைப் பருவத்திலே பொறிகளை உருவாக்க வேண்டும் என்றஎண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தினால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மின் இயல் கல்வியைக் கற்றார்.

பின்பு ஒரு தொழிற்சாலையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றினார். அதன் பின்பு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் கால் உறையை தயாரித்தார்.

அத்துடன் காலணிகளுக்கான மையும் உற்பத்தி செய்தார். ஆனாலும் அவற்றில் லாபம் கிடைக்கவில்லை. கடுமையான உழைப்பின் பயனாக உடல் தளர்வுற்று நோய் ஏற்பட்டது.

உடல்நலம் நன்றானதும் மறுபடியும் பழச்சாறு செய்யும் தொழிலை மேற்கொண்டார். அதிலும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இனிமேல் தொழில் தொடங்க வேண்டாம் என்றமுடிவில் சில கம்பெனிகளிடம் பணிபுரிந்தார். போதுமான வருவாய் கிடைக்கவில்லை.

அதன் பிறகு எப்படியும் டி.வி.யை கண்டு பிடிக்க வேண்டும் என்று விடாப் பிடியாகச் செயல்பட நம்பிக்கையுடன் ஆரம்பித்தார்.

தேநீர் தயாரிக்கும் ஒரு பாத்திரமும் ஒரு தகர டப்பாவுமே ஆய்வுக்கருவி களாக அமைத்து ஆராய்ச் சியைத் தொடங்கினார்.

இரவு பகலாக ஆராய்ந்தார். எண்ணற்ற இடுக்கண்களையும் ஏமாற்றங்களையும் தோல்வி களையும் தாங்கிக் கொண்டார்.

வெற்றி பெற்றே தீருவது என்றதிடமான நம்பிக்கை யோடு ஆண்டு கணக்கில் ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தினார்.

இந்தச் சமயத்தில் அவருக்குப் பணம் தேவைப் பட்டது. பலரிடம் உதவி கேட்டார். இவருடைய வெற்றி யில் நம்பிக்கை வைத்து எவரும் பணம் தர முன்வரவில்லை.

ஆனால் அவருக்கோ தன்னுடைய ஆராய்ச்சியில் முழுமையான நம்பிக்கை இருந்தது பசியோடும் பட்டினி யோடும் வேலை செய்தார். இன்னல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார்.

தன் முன்னே வைத்து ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த பொம்மையின் உருவம் மங்கலாகத் திரையில் விழுந்ததும் அவருக்கு எற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பொம்மையை வைத்து ஆராய்ச்சி நடத்தி வெற்றி கண்ட அவர் மனிதனையும் முன்னே நிறுத்தி ஆராய்ச்சியில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.

உடனே செயல்பட ஆரம்பித்து மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி கண்ணில் பட்ட சிறுவனை அழைத்து பொம்மை இருந்த இடத்தில் சிறுவனை நிறுத்தினார்.

கருவிகளை இயக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சிறுவனின் உருவம் கருவியில் தெளிவாகத் தென்பட்டது.

பயர்டு டி.வி.யை கண்டு பிடித்து விட்டார். பெரிய அளவில் நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார்.

நாமும் இவரைப் போன்று ஏன் பெரிய நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றி பெறக் கூடாது? அவரைப் போன்ற ஆற்றலும் திறமையும் நம்மிடமும் உள்ளது அல்லவா! பின்பு ஏன் செயல்படாமல் சும்மா இருக்க வேண்டும் ?

நாமும் பெரிய நம்பிக்கையை வைத்துச் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இதில் சந்தேகமே இல்லை. நாமும் இன்று முதல் பெரிய நம்பிக்கை வைத்து செயல்படுவோம். வெற்றிகளை குவிப்போம்.
 
back to top