.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 30, 2013

சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா? படித்து மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்!



கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...

ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றன பல நிறுவனங்களும்... எப்பேர்ப்பட்ட ரத்தப்போக்கையும் உறிஞ்சிக்கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தரவாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிறபோது, ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக்கணக்கில் உபயோகிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம்கூட வருவதில்லை. அந்த அளவுக்கு டாக்டர்களுக்கே விழிப்புணர்வு தேவைப்படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பலவித கெமிக்கல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னைகளுக்கும் அஸ்திவாரம்.

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக்குறைவான சில நாப்கின்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலைக்கூட சேர்த்து தயாரிப்பதாகவும், அதன் விளைவாக பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிப்பதாகவும் கூட ஒரு செய்தி!

இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்துவர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறை துணைப்பேராசிரியர் முகமது ஜாபீர், மறைக்கப்படுகிற பல ரகசியங்களையும் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடையறாங்கன்னு வச்சுப்போம். 40 வயசுல மெனோபாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்தபட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க. பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்கப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகுது. அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்...

முதல் குற்றவாளின்னு பார்த்தா டையாக்சின். புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக்கிறதில்லை. பல தயாரிப்பாளர்களும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பேப்பர் மற்றும் பொருள்களைக் கொண்டுதான் நாப்கின் தயாரிக்கிறாங்க. அப்படித் தயாரிக்கப்படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்களுக்கு சாப்பிடற அரிசிலேருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தாதான் திருப்தி. நாப்கினும் அப்படித்தான். அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்கறதுக்காக, தயாரிப்பாளர்கள் ஒருவிதமான பிளீச் பயன்படுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின்களை மறுபடி அலச முடியாது. அப்படியே அது பெண்களோட உபயோகத்துக்கு வந்துடும். நீக்கப்படாத அந்த பிளீச்லேருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக்கிட்டே இருக்கும். மென்மையான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும். வருஷக்கணக்குல இது தொடரும்போது, புற்றுநோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தரவாதம் தரும் பல கம்பெனிகளோட நாப்கின்கள்லயும் பிரதான பொருள் செல்லுலோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்றுதான்.

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தறதுக்காக அதிகக் காரத்தன்மை கொண்ட கெமிக்கல்களை உபயோகி க்கிறாங்க. அப்படிப் பல கட்டங்களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல்களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னைகளுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்லப்படற நாப்கின்கள்ல இதுதான் சேர்க்கப்படுது. துணிகளை நெய்யப் பயன்படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட செயற்கைப்பொருள் மாதிரியே மாத்தப்படுது. சருமத்துக்கு சுவாசிக்க வழியில்லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனுக்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப்பவர்களுக்கு சில அட்வைஸ்களைச் சொல்கிறார்.

‘‘தான் உபயோகிக்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப்பட்டிருக்குனு ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும். குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்கான்னு பார்க்கணும். சிறுநீரகத் தொற்றாகவோ, அரிப்பு, அலர்ஜியாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமானாலும் தரமான தயாரிப்பை உபயோகிக்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப்படறப்ப, பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். அதனால 3 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரியமானதுதான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதாரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!


வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.


உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?

ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.

வாய் நிறைய பாக்டீரியா

 ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.

பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?


டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்

 பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன. அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.

டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள்

 பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.

டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்

* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
 * ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.
 * தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.
 * உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை.

எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்


 ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.

உங்க இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...



ஆரோக்கியமான வாழ்வை நீடித்து வாழ்வதற்கு நமக்கு ஆரோக்கியமான இதயம் மிக அவசியமாக தேவை. வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இல்லாவிடில் ஆரோக்கியமான இதயத்தை பெற இயலாது. நமது இதயம் 66 ஆண்டுகளில் ஏறத்தாழ 2.5 பில்லியன் முறை துடிக்கின்றது. இத்தகைய மிக அவசியமான உறுப்பான இதயத்தை மதிப்புடனும் அக்கறையுடனும் பராமரிக்க வேண்டும். பல பேர் இதயம் செய்யும் அனைத்து காரியங்களையும் தான்தோன்றித்தனமாக எடுத்துக் கொண்டு மோசமான வாழ்க்கை முறைகளால், இதயத்தின் ஆரோக்கியத்தை கைவிட்டு விடுகிறார்கள்.

நம் வாழ்கை முறையில் உள்ள பல காரணிகள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எப்படி இருந்தாலும் சில மரபணு கோளாறுகள் நம்முடைய கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் இதயத்தை பாதித்து வருகின்றன. ஆரோகியமற்ற வழிமுறைகள் அதாவது அதிக அளவு நொறுக்குத் தீனி உட்கொள்ளும் போது டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் இதயத்தின் குழாய்களை அடைத்துக் கொண்டு அதை மிகவும் கடுமையாக உழைக்க வைக்கின்றது. இந்த நிலை பல நாட்களுக்கு நீடித்தால் இதயம் மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டு மேலும் சிக்கல்களை உருவாக்கும்.

இதய அழுத்தத்தை குறைப்பதற்கு புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவு மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற இன்பம் தரும் செயல்களை தவிர்க்க வேண்டும். உடலை ஆரோக்கியமாக பராமரிக்க சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அவ்வாறு இல்லாவிடில் அதிகமாக இருக்கும் உடல் எடையால் உருவாகும் ஆரோக்கியமற்ற கொழுப்பு உடலில் சேர்ந்து இதயத்தை பாதிக்கின்றது. உங்கள் இதயத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயமாக மன அழுத்தம் உள்ளது. வெற்றிக்காகவும் பணத்திற்காகவும் ஓடும் படலத்தில் மக்கள் அதிகப் படியான அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இதயம் பழுதடைகின்றது.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்

 ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதலே முதன்மையான வழியாகும். சரிவிகித ஊட்டச்சத்து தரும் உணவு முறையே ஆரோக்கியமான உடலையும் இதயத்தில் அழுத்தத்தையும் குறைத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக அளவு டிரான்ஸ்-கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கவும்

 உடலின் எடையை எப்போதும் கண்காணித்து அதை கட்டுக்கோப்பாக வைப்பது அவசியம். உடல் பருமன் இதய சார்ந்த நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. உங்களது உயரத்திற்கேற்ப எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பதை கண்டறிந்து அதை கண்டிப்பாக அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்யவும்


 தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்து வருவது, உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அனுதினமும் பயில்வதற்கு ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். விளையாட்டு, ஏரோபிக்ஸ் அல்லது நடனம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

சுறுசுறுப்பாக இருக்கவும்

 உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் பொதுவாக அமர்ந்து வேலை செய்யும் தொழிலில் இருந்தால் தினமும் காலை அல்லது மாலையில் நடக்கவோ அல்லது மிதி வண்டியில் பயிற்சி மேற்கொள்வதோ உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க உதவும்.

கெட்ட பழக்கங்களை கைவிடவும்

 புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் இதர பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய போதை பொருட்கள் உடலை ஊடுருவி மற்றும் உருக்குலைத்து உடலையும் இதயத்தையும் சேதப்படுத்துகின்றன. இத்தகைய போதைக்கு அடிமையாவதை மெதுவாக தவிர்க்க முயல வேண்டும் ஆனால் முழுமையாக விட்டு விட வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

 எவ்வளவு அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் தனிப்பட்ட வாழ்கையிலும், வேலை அலுவல்களிலும் மன அழுத்தத்தின் அளவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையையும் வேலையும் சரி சமமாக வைத்து வாழ்கையின் வழிப்படியே சென்று சந்தோஷத்தை அனுபவிக்க முயலவேண்டும் அதிக அளவு அழுத்தம் இதய நோய்களை உருவாக்கி விடும்.

பரம்பரை நோய் தானா என்று கண்டறியவும்


 பரம்பரை பரம்பரையாக பற்பல இதயம் சார்ந்த நோய்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதலால் மரபணு சார்ந்த குடும்ப விஷயங்களை கண்டறிந்து முன் யோசனையுடன் அத்தகைய நோய்களை தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது பின் நாட்களில் வரும் பல்வேறு சிக்கல்ளை தவிர்க்கும். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் இந்த நோய்களுக்கு சிகிச்சை செய்வதும் எளிதாக இருக்கிறது.

உணவில் மீன்களை சேர்த்துக் கொள்ளவும்

 எண்ணெய் நிறைந்த மீன்களையும் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு மிக்க உணவுகளையும் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மத்தி, புதிய டூனா, மற்றும் சால்மன் போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு சத்து மிக்கவையாகும். இவை இதய கோளாறுகளிருந்து நம்மை காக்கின்றன.

நல்ல தூக்கம் அவசியம்

 தினமும் போதுமான அளவிலும் மற்றும் நன்றாகவும் உறங்குவது மிகவும் அவசியமாகும். நீங்கள் தூங்கும் நேரத்தை குறைக்கும் போது பயம், மன அழுத்தம் மற்றும் உறக்கம் தொடர்பான கோளாறுகள் உடலில் ஏற்படும். இவை உங்கள் இதயத்தில் எண்ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தும்.

நன்கு சிரிக்கவும்

 இறுதியானதாகவும் மற்றும் முக்கியமாகவும் இருப்பது உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது - அது தான் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். வாய்விட்டு சிரிக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் இரத்த ஓட்டத்தை 22% உயர்த்தும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’ கனவாக விரியும் சாகசக் கதை!

 

கற்பனைக்கெட்டாத தொலைவில் ஒரு உயர்ந்த இலக்கு. பிரத்யேக சிறப்பியல்புகளைக் கொண்டவர்களின் துணையுடன் அதை அடைய ஒரு நெடிய பயணம். வழியில் எதிர்ப்படும் இன்னல்கள், எதிர்கொள்ளும் சாகசங்கள். ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த வகைக் கதைகள் படிப்பதற்குச் சுவையாக இருக்கும்.

ஆனால் அவற்றைப் பொது ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் திரைப்படமாக எடுப்பதற்கு ஒரு ஜாம்பவானால்தான் முடியும். பிரம்மாண்டமான மாயக்கனவுலகின் திரைவடிவமாக உருவான ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ வரிசைப் படங்களை இயக்கிய பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தில் உருவாகி, வரும் டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவிருக்கும் படம் ‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’.

‘ப்ரெய்ன் டெட்’ என்ற கொடூரமான ஜோம்பி படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற பீட்டர் ஜாக்ஸன், மகத்தான தனது படைப்புத் திறன் மூலம் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ‘கிங்காங்’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளைத் தந்தவர். ஹாலிவுட்டின் சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் பீட்டர் எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தந்தை ஒரு சாதாரண குமாஸ்தா. தாய் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தவர். சிறு வயதிலேயே திரைப்படக் கலை மீது காதலை வளர்த்துக்கொண்ட பீட்டர் 1933இல் வெளியான ‘கிங்காங்’ படம் தனக்கு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதிக் காட்சியில் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலிருந்து அந்த ராட்சத கொரில்லா குரங்கு கீழே விழுவதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதாராம். பின்னாட்களில் அதே கதையை வியக்க வைக்கும் தனது தொழில்நுட்ப அறிவைக்கொண்டு அற்புதப் படைப்பாக அவரால் உருவாக்க முடிந்தது. இத்தனைக்கும் திரைப்பட தொழில்நுட்ப அறிவைத் தானே கற்றுக்கொண்ட ஏகலைவன் அவர்.

‘லார்டு ஆப் தி ரிங்ஸ்’ கதையை எழுதிய ஜே.ஆர்.ஆர். டோல்கீனின் மற்றொரு படைப்பான ‘தி ஹாபிட்’ நாவலை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய ‘தி ஹாபிட்: தி அன் அன்எஸ்க்பெக்டட் ஜர்னி’ படத்தின் இரண்டாம் பாகம் இப்படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியடைந்தது. கடந்த ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘தி ஹாபிட்: தி அன் அன்எஸ்க்பெக்டட் ஜர்னி’ படம் பெற்றது. பொதுவாக ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்ற அளவில்தான் இன்றுவரை காட்சிகள் உருவாக்கப்படுகின்றன.

 இந்தப் படம் ஒரு நொடிக்கு, 48 பிரேம்கள் கொண்டது என்பதால் அதிக அளவிலான பொருட்செலவு தவிர்க்க முடியாததானது. தவிர இதுவரை இல்லாத தொழில்நுட்பம் என்பதால் எல்லாத் திரையரங்கிலும் இந்தப் படத்தைத் திரையிடுவதில் சிக்கல் இருந்தது. எனவே, வழக்கம்போல நொடிக்கு 24 பிரேம்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுப் படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’ படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறார் பீட்டர் ஜாக்ஸன். கரோலின் கனிங்ஹம், பிரான் வால்ஷ் ஆகியோருடன் இணைந்து அவரே படத்தைத் தயாரித்திருக்கிறார். பிரான் வால்ஷ் அவரது காதல் மனைவியும் கூட. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் உலகமெங்கும் விநியோகம் செய்யப்படும் இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காணும் பிரம்மாண்டமான ஃபேன்டஸி கனவாக அமையும் என்று படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது.
 
back to top