.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 1, 2013

சாமை அரிசி உப்புமா - சமையல்!

 

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்

 வெள்ளை வெங்காயம் - 1

கேரட் - ஒன்று

 நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 * சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 * வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 * கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

 * வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும்.

 * கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 * இப்போது சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி! சமையல்!

 

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை - அரை கப்,

தயிர் - ஒரு கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு

 கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.

• கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

• பிறகு, இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான, சத்தான ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க!


• மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


• வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


• நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்!



எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது.

இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். பொதுவாக எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது இன்றியமையாதது.

சொல்லப்போனால், இந்த நேரத்தில் பெற்றோர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சிரமத்தை மனதில் கொள்ளாமல், சரியாக கவனித்தால், உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் இருப்பார்கள். சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

• குறைவான எடையில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்கும்.எடை குறைவில் குழந்தை பிறந்தால், அடிக்கடி தொடர்ச்சியாக பாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உடலில் சத்துக்கள் சேர்வதற்கு சற்று தாமதமாகும்.

• மற்ற குழந்தைகளை விட, எடை குறைவாக பிறந்த குழந்ததையை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கைகளில் வைத்திருக்கும் போது, முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்

• பொதுவாக எடை குறைவில் பிறந்த குழந்தை தூங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகளுக்கு SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

• மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.

 
back to top