.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 1, 2013

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!


வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

சாமை அரிசி உப்புமா - சமையல்!

 

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்

 வெள்ளை வெங்காயம் - 1

கேரட் - ஒன்று

 நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 * சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 * வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 * கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

 * வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும்.

 * கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 * இப்போது சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி! சமையல்!

 

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை - அரை கப்,

தயிர் - ஒரு கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு

 கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.

• கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

• பிறகு, இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான, சத்தான ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க!


• மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


• வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


• நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.
 
back to top