.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 1, 2013

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்..!



நடிகர் : விமல், பார்த்திபன்

நடிகை : மனிஷா, பூர்ணா

இயக்குனர் : கரு.பழனியப்பன்

இசை : வித்யாசாகர்

ஓளிப்பதிவு : அர்பிந்து சாரா



பழனி-பண்ணக்காடு வழித்தடத்தில் செல்லும் ஒரு அரசு பேருந்தை மையமாக வைத்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பஸ் பழனியில் இருந்து தினமும் மாலை பண்ணக்காடுக்கும், மறுநாள் காலை பண்ணக்காட்டில் இருந்து பழனிக்கும் செல்லும். இந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபன் சீனியர். கண்டக்டராக வரும் விமல் வேலைக்கு புதுசு.

இந்த பஸ் ஒரு தடவை மட்டும் செல்வதால், டிரைவர்-கண்டக்டர் இரவில் பண்ணக்காடு பகுதியில் தங்குவது வழக்கம். இதனால் அப்பகுதி மக்களுடன் நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்களுக்கு பண்ணக்காட்டில் தங்குவதற்கு இடம், உணவு அனைத்தையும் பொதுமக்களே செய்து தருகிறார்கள்.

பார்த்திபன் சீனியர் டிரைவர் என்று சொல்லிக் கொண்டு எப்போதும் போதையில் வண்டி ஓட்டுகிறார். இந்த பஸ்சில் தான் பண்ணக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக பழனிக்கு செல்வார்கள். அதில் ஒரு பெண்ணாக மனிஷா வருகிறார். அவளை பார்த்தவுடன் மயங்குகிறார் விமல். அவருடைய காதலை அவளிடம் சொல்ல முயற்சிக்கிறார். மனிஷாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அண்ணா சார் என்ற பள்ளி வாத்தியாராக வருகிறார் ராஜேஷ். இவர் தன் நண்பரின் மகளான பூர்ணாவை தன் மகள் போன்று வளத்து வருகிறார். ஆசிரியையான பூர்ணாவை தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார்.

அந்த ஊரில் வசிக்கும் ரமணா, தன் தாயுடன் ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூர்ணாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்கிறார். அதை மறுக்கும் ராஜேஷ், “என் மகனுக்கு பூர்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். மகன் ஊர் திருவிழாவுக்கு வரும் பொழுது திருமண நடத்த போகிறேன்” என்று கூறுகிறார்.

இதற்கிடையே அந்த ஊரின் டேம் பொறுப்பாளரான விதார்த், அந்த வேலையை மட்டும் செய்யாமல் ஊரில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். ராஜேஷ் மகனுக்கு நண்பர் என்பதால், அவரது வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பழனியில் இருந்து பண்ணக்காடுக்கு பஸ் செல்லும் பொழுது வண்டி இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிற்கிறது. அதனை சரிசெய்யும் மெக்கானிக்கான சந்தான பாரதி, வண்டியை தன் உதவியாளரை சரி செய்ய சொல்லிவிட்டு பார்த்திபனுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

இருவரும் நிலை தெரியாத அளவுக்கு மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுது வண்டி சரியாகி விடுகிறது. பார்த்திபனால் வண்டி ஓட்ட முடியாத சூழ்நிலையில் இருக்க, பஸ்சை விமல் ஓட்டிச் செல்கிறார். இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டி செல்கிறார்கள். அந்த நேரத்தில் ஒருவன் வண்டி முன்பு வந்து விழுந்து விடுகிறான். தலையில் பலத்த அடிபட்டு கிடக்கும் அவனை அந்த வழியில் வரும் ஒரு ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறுகிறார்கள்.

நான் தான் அவன்மீது ஏற்றி விட்டேன் என்று நினைக்கும் விமல், பயத்துடன் அடிப்பட்டவன் பையை எடுத்துக் கொண்டு பண்ணக்காடு செல்கிறார். அந்த பையை திறந்து பார்க்கும் விமல், அடிப்பட்டவன் ராஜேஷின் மகன் என்று தெரிந்து கொள்கிறான். அதை ஊர் மக்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்த்திபன் சொல்ல, சொல்ல முடியாமல் விமல் தவிக்கிறான்.

இறுதியில் அடிப்பட்டவன் நிலை என்ன? விமல் ஊர் மக்களிடம் உண்மையை சொன்னானா? உண்மையாக அவன் எப்படி அடிப்பட்டான் என்பதே மீதிக்கதை.

கருப்பு என்னும் பார்த்திபன், நக்கல், நையாண்டி என அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். சுப்பையாவாக வரும் விமல் நல்ல கண்டக்டராக நடித்திருக்கிறார். இவருக்கும் மனிஷாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சாமி கதாபாத்திரத்தில் வரும் விதார்த்துக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. அதை திறமையாக செய்திருக்கிறார்.

பாவாடை தாவணியில் வரும் மனிஷாவுக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. டீச்சரான பூர்ணாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ரமணா, சிங்கம்புலி, மோனிகா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் சிலர் மட்டுமே மனதில் பதிகிறார்கள்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் வித்யாசாகரின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலைப்பகுதிகளை அழகாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இதுவரை நேரடி தமிழ் படங்களையே எடுத்து வந்த கரு.பழனியப்பன் முதல் முறையாக மலையாளத்தில் இருந்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்து வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்.

பேருந்தில் நடக்கும் சம்பவங்களை அதிகப்படியாக வைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் 'ஜன்னல் ஓரம்'  மிதமான காற்று வருகிறது.

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!

 
 நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.


மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.


தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே!

சளிதொல்லையிலிருந்து விடுபட!


பாதுகாப்பு முறை:

சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும்.


வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.


சில தீர்வுகள் :

 * எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

 * எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

 * கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

 * கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

 * அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
 தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 * அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

 * ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.

 * ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

சைகோடிரியா எலாட்டாக்கு முத்தம் கொடுக்க வாரீகளா!

 

பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.


இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.


பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.
 
back to top