.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 7, 2013

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

 

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை.


 இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர்.


இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும்.


தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது யூ எஸ் பின் உடைந்து விடும். அல்லது சில டிவைசை மாட்டவே முடியாது என்பதுடன் அதற்க்கு மேல் ஃபீமேல் எக்ஸ்டென்ஷன் வேண்டும்.


 இந்த கருமத்தை அனேக டேட்டா கார்டுகளில் / யூ எஸ் பி டாங்கிளில் நீங்கள் பார்த்தீருப்பீர்கள்.


இனிமேல் அந்த கவலை தேவையில்லை எப்படி சொருகினாலும் அது வேலை செய்யும்.


 இதன் மூலம் யூ எஸ்பியில் சார்ஜ் ஆகும் டிவஸ்களின் சார்ஜ் நேரம் குறையும் 1/3 ஆப்பிள் 5 எஸ் சார்ஜர் PIN இந்த வகையில் தான் வடிவமைப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா???

கிருபானந்தவாரியார்-சொற்பொழிவிலிருந்து....


 கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!


ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.

“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.”

“என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.”

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”

“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

“ஆம்! தெரிகின்றன.”

“முழுவதும் தெரிகின்றதா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.

“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”

“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”

“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”

“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.

“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”

“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”

“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?”

“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”

நிமிடங்களில் மாற்றம் !


ஏழு நிமிடங்களில் நம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? முடியும் என்கிறார் 'தி 7 மினிட் சொல்யூஷன்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அலிசன் லூயிஸ். ஏழு நிமிடங்களில் மாற்றம் என்பது இரண்டு அடிப்படை நம்பிக்கைகளை மனதில் கொண்டு சொல்லப்படுவது என்கிறார் அவர். முதலாவது, நீங்கள் மாற வேண்டும் என்று நினைத்த நேரத்திலேயே மாறுதல் வந்துவிடுகிறது. இரண்டாவது, மாற வேண்டும் என்று நினைத்த நிமிடத்தில் இருந்து அன்றாடம் சிறுசிறு அடிகளாக முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆக, மாற வேண்டும் என்கிற எண்ணம்தான் மாற்றத்துக்கான வித்து. 


அதெப்படி மாறவேண்டும் என்று நினைத்தவுடன் மாறிவிட முடியுமா? என்று கேட்கிறவர்களுக்கு மனித இதயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் ஆசிரியர். இதயம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? நம் உடலுக்குத் தேவையான ரத்தத்தைத் தேவையான அளவில் சீராக பம்ப் செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆனால், உடலின் தேவையோ ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. படுத்துறங்கும்போது குறைந்தபட்ச தேவையும், உடற்பயிற்சி செய்யும்போது அதிகபட்ச தேவையும் உண்டாகிறது. இதயமோ தேவைக்கேற்ப மாறுபட்டு செயல்படுவதில் சளைப்பதே இல்லை. அதுமாதிரி நீங்கள் என்ன கேட்கிறீர்களோ, அதைத் தரும் குணத்தைக் கொண்டுள்ளது வாழ்க்கை. திருப்தியான வாழ்க்கையைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கு  நிச்சயம் கிடைக்கும். 


ஒவ்வொரு நாளும் ஏழு நிமிடங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை கொஞ்சம் சீரியஸாக உற்றுநோக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என்கிறார் ஆசிரியர்.


ஏன் ஏழு நிமிடம்? ஏழு நிமிடத்துக்குமேல் மனிதனின் முழுக்கவனம் ஒன்றின்மேல் ஈடுபாட்டுடன் இருப்பதில்லை என்கிறது உளவியல் ஆய்வுகள்.  இதயம் சரியாக செயல்பட ஆக்ஸிஜன் தேவைப்படுகிற மாதிரி நம் வாழ்க்கை சிறக்க இந்த ஏழு நிமிட தீர்வுகள் உதவும். இந்தத் தீர்வில் ஆசிரியர் நம்மை நாமே அன்றாடம் கேட்டுக்கொள்ளச் சொல்வது ஏழே ஏழு கேள்விகளைத்தான். அந்தக் கேள்விகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


உங்கள் வாழ்வை அறிவீர்களா?


உலகத்தில் இருக்கும் பிரச்னைகளுடனான இரைச்சல்களில் நம் மூளை எது முக்கியம் என்பதை உணரத் தவறுகிறது. பெருநகரங்களில் அலுவலகத்துக்குச் செல்வதே பெரிய வேலையாகிறது, அலுவலகத்தில் செய்யும் வேலையைவிட! நிஜமான கேள்வியே உங்களுக்கு உங்கள் வாழ்க்கை என்ன தரவேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்களோ, அதைத் தர வாழ்க்கை தயாராக இருக்கிறது. உங்கள் தேவை  என்ன? அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.


முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறீர்களா?


நீங்கள் உங்கள் வாழ்க்கையிடம் அதிகமாக திட்டவட்டமாக இது வேண்டும் என்று கேட்கும்போது, நாம் இதற்கு தகுதியானவராக இருக்கிறோமா அல்லது நம்மை இந்தத் தகுதிக்கு உயர்த்திக்கொள்ளும் செயல்களைச் செய்கிறோமா என்கிற கேள்வி உங்களுக்கே தோன்றிவிடும் என்கிறார்
ஆசிரியர்.

அடுத்த 90 நாட்களில் இதைச் செய்து முடிக்கவேண்டும் என்ற தீர்மானமான முடிவை எடுத்து செயலாக்க முயன்றீர்கள் என்றால், உங்களினுள் பிறக்கும் உத்வேகத்துக்கு அளவேயிருக்காது என்கிறார் அவர்.


நீங்கள் வளர்கிறீர்களா?


நம் மூளைக்கு அபரிமிதமான சக்தி இருந்தபோதிலும், ஒரேயரு பிரச்னை அதில் இருக்கிறது. உபயோகியுங்கள் அல்லது இழந்துவிடுங்கள் என்ற நிலையில்தான் மூளையின் பவர் அனைவருக்கும் இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தாதபட்சத்தில் மூளை தன் சக்தியை இழக்கிறது என்கிறார் ஆசிரியர். வளர்ந்துகொண்டே கற்றுக்கொள்வது மிக மிக முக்கியமானது என்று இங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார்.


நீங்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறீர்களா?


எப்போது பார்த்தாலும் பிஸியாக இருக்கும் நீங்கள் ஈடுபாடில்லாமல் பிஸியாக மட்டும் இருந்தீர்கள் என்றால் வாழ்க்கை உங்களுக்கு சுலபத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடும். மிகவும் பிடித்த மற்றும் ஈடுபாடுடைய விஷயங்களைப் பட்டியலிட்டு அதைத் தொடர்ந்து செய்யும்போது மட்டுமே புதிய முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்.


நீங்கள் விடாமுயற்சியுடன் கொண்ட ஊக்கம் மிகுந்தவரா?


வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாறுதலைக் கொண்டுவர நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி என்பது மிக மிக அதிகமாக வேண்டியிருக்கும். ஏனென்றால், கெட்ட பழக்கங்களை (இணையத்தில் மூழ்கியிருப்பது) விட்டொழிப்பதற்கு விடாமுயற்சி மிக மிக அவசியம். சௌகரியமான தினசரி வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கும் விடாமுயற்சி அதிகமாக இருக்க வேண்டும். இவற்றைவிட்டு வெளியே வந்தால்தான் வளர்ச்சி என்ற ஒப்பற்ற விஷயத்தை நாம் அனுபவிக்க முடியும் என்கிறார் அவர்.


நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறீர்களா?


மனித மூச்சைப்போல நம்பிக்கையும் மிக மிக முக்கியமான ஒன்று. நம்பிக்கைதான் உங்களை இன்றைய நிலையிலிருந்து முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்வது. நம்மாலும் மாற முடியும் என்ற நினைப்பைத் தருவது. நம்பிக்கையில்லாத வாழ்க்கை ஓர் அவநம்பிக்கை நிறைந்ததாக இருக்கும், எந்த ஒரு மூடநம்பிக்கையிலும் (பில்லி, சூனியம், சாமியார் என) நம்பிக்கைகொண்டதாக மாறிவிடவும் கூடும்.


இந்த ஏழு நிமிட முறையினை எப்படி கடைப்பிடிப்பது என்று புத்தகம் முழுவதுமே விவரித்து இருக்கிறார்.

''உங்கள் கனவுகளை பேப்பரில் கொண்டு வாருங்கள். எழுதாத கனவுதனை சாதிப்பது என்பது சாத்தியமில்லை. உங்களை ஊக்கப்படுத்தும் ஒரு நபரிடமாவது அன்றாடம் உரையாடுங்கள். நீங்கள் சரியென்று நினைக்கும் விஷயங்களைத் தவறென்று சொல்லும் புத்தகங்களைப் படியுங்கள். உங்கள் நண்பர் ஒருவரையும் அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லுங்கள். இருவரும் அந்தப் புத்தகத்தைப் பற்றி உரையாடுங்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு பாசிட்டிவ் சபதத்துடன் ஆரம்பியுங்கள். உங்கள் சபதத்தை உறக்கச் சொல்லுங்கள். அது உங்கள் மனதில் வலுசேர்க்கும்.


கஷ்டம் வரும்போது நீங்கள் எதையெல்லாம் நினைத்துப் பெருமைப்படவேண்டும், எதற்கெல்லாம் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும் என்ற ஒரு லிஸ்ட்டைப் போடுங்கள். அவை உங்கள் மனதின் போக்கை மாற்றிவிடும். உங்களுடைய தனித்திறமை ஒன்றை கண்டுபிடியுங்கள். அதை வளர்ப்பதற்கு தினம்தினம் முயற்சிகளை இடைவிடாது செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நம்புங்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து செயல்படாதீர்கள்'' என்று சொல்கிறார் ஆசிரியர்.


புத்தகத்தின் கருத்துகளும், அவை சொல்லப்பட்ட விதமும் தன்னை மாற்றவேண்டும் என்ற உத்வேகம் கொண்ட வர்கள் படித்தேயாகவேண்டும் என்று பறைசாற்றுபவையாக இருக்கின்றன. அனைவரும் ஒருமுறையாவது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் சந்தேகமே இல்லை!

எதிரிகளை வெல்ல ஸ்லோகம்



ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்


ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
 
back to top