.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 7, 2013

நட்பு ?

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.


பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.


என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.


இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.


அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.


பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.


வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.


"புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
ந‌ட்பாங் கிழமை தரும்".

தமிழ்ச்சொல் - வடமொழிச்சொல்!

அகம்பாவம் - தற்பெருமை.

அக்கிரமம் - முறைகேடு

அசுத்தம் - துப்புரவின்மை

அதிகம் - மிகுதி

அனுக்கிரகம் - அருள்

அபிவிருத்தி - வளர்ச்சி

அவசரம் - விரைவு

ஆகாரம் - உணவு

ஆசை - விருப்பம்

ஆதாரம் - அடிப்படை

ஆரம்பம் - தொடக்கம்

இந்திரியங்கள் - ஐம்பொறிகள்

இரசிகன் - சுவைஞன்

இருதயம் - உள்ளம்

இலட்சியம் - குறிக்கோள்

உஷ்ணம் - வெப்பம்

உதாரணம் - எடுத்துக்காட்டு

உபயோகம் - பயன்

ஏகாந்தம் - தனிமை

கருணை - இரக்கம்

கல்யாணம் - திருமணம்

கிரயம் - விலை

கும்பம் - குடம்

சகோதரன் - உடன் பிறந்தான்

சங்கீதம் - இசை


சமாதானம் - அமைதி

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

சீக்கிரம் - விரைவு

சீலம் - ஒழுக்கம்

சுகந்தம் - நறுமணம்

சொப்பனம் - கனவு

ஞாபகம் - நினைவு

தருமம் - அறம்

தூரம் - தொலைவு

தேசம் - நாடு

நவீனம் - புதுமை/புதினம்

நாமம் - பெயர்

நிபந்தனை - கட்டுப்பாடு

பயம் - அச்சம்

பரம்பரை - தலைமுறை

பிரசுரம் - வெளியீடு

பிரபஞ்சம் - உலகம்

பிரயாணம் - பயணம்

பேதம் - வேற்றுமை

மகிமை - பெருமை

முத்தி/முக்தி - வீடுபேறு

வயோதிகம் - முதுமை

வாலிபம் - இளமை

விவசாயம் - வேளாண்மை

வேதம் - மறை.

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்!

 ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.


Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே



- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.


நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்

- காய்கறி கேரி பேக்குகள்

- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்

- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்

- வீட்டு குப்பை பைகள்

- வணிக குப்பை பைகள்

- தொழிற்சாலை லைனர்கள்

- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்

காகிதம் - 2-5 மாதங்கள்

கயிறு - 3-14 மாதங்கள்

ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்

தோல் காலணி - 25-40 ஆண்டுகள்

நைலான் துணி - 30-40 ஆண்டுகள்

தகர கேன் - 50-100 ஆண்டுகள்

அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது


எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.


பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?


சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை


அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

புறக்கணிக்கப்பட்ட கவிதை!

'

இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.


1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற புரட்சிக் கருத்துக்களை ஷெல்லி வெளியிட்டார்.


ஷெல்லியின் தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மதப்பற்று மிகுந்தவர். அவர் ஷெல்லியின் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டினார். ஷெல்லி மறுக்கவே உதவி செய்வதை தந்தை நிறுத்திக் கொண்டார். இதனால் உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டது, இருந்தாலும் தன்னுடைய புரட்சிகர எழுத்தை மட்டுமே ஷெல்லி நிறுத்திக் கொள்ளவே இல்லை.


அவர் இத்தாலியில் தங்கியிருந்தபோது படகொன்றில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பெரும் புயலடித்து படகு கவிழ்ந்தது. 1822 ம் ஆண்டு 30 வயது கூட நிறைவடையாத ஷெல்லி மரணமடைந்தார். ஆனால் அவரது கவிதைகள் அவர் இறந்த பதினேழு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட போது பெரும் புயலைக் கிளப்பியது. இன்று வரை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்படும் ஷெல்லி வாழ்நாளில் ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

 
back to top