.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 7, 2013

அறிவுரை - யானை பாகனுக்கு....



கோடை வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க கேரளத்தில் பாகன்களின் மரணமும் அதிகரிக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளில் இதைப் பார்த்தவர்களுக்கு விலங்கு கொடூரமாகத் தெரியலாம்.


யானைகளின் தும்பிக்கை ஆசிர்வாதத்திற்கு, பயத்தையும் மீறி தலைகுனிபவர் பலர். பாகன்களுக்கு அது ஒரு பணவேட்டை. சூடாறுமுன் யானையின் சாணத்தை மிதித்தால் காய்ச்சல் வராது என்பது கேரளத்தவரின் நம்பிக்கை. யானை முடியை உடலோடு தொடுமாறு கட்டிக்கொண்டால், பேய் பிசாசு அண்டாது; ஐஸ்வர்யம் பொங்கும் என்பது ஐதீகம்.


கேரள மாநிலத்திலேயே அதிகப்படியான யானைகள் உள்ளன. எனவேதான் யானைச் செய்திகளும் அம்மாநிலத்தில் இருந்து அதிகம் வருகின்றன. அம்மாநிலக் கலாசாரப் பாரம்பரியத்தில் யானைகளுக்கு சிறப்பிடமுண்டு. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானை எழுன்னுளிப்பு கட்டாயமானதாகும். பல யானைகள் நகையழகு பரிவாரத்துடன் பட்டங்கட்டி கஜகம்பீரத்துடன் தலையாட்டி நிற்பது கண்கொள்ளாக்காட்சி. யானை ஒன்றுக்கு ஒருநாள் வாடகை குறைந்தது ரூ. 5000.


யானை ஏன் பாகனைக் கொல்கிறது? யானைகளைப் புரிந்து நடக்க யானை ரசிகனாகிய மனிதனுக்குத் தெரியவில்லை என்பதே முதல் காரணம். இன்று யானைகளுக்குக் காட்டிலும் நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. யானை ஒரு காட்டுவிலங்கு. அடிக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தே அது சில காரியங்களைச் செய்கிறது. மற்ற விலங்குகளைவிட சற்று அதிகமாகவே யானைகள் மனித கொடூரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.


ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் உண்டு. யானைகளை நல்லவர்களாக்குவதும் கொலை வெறியர்களாக்குவதும் பாகன்களையும் பாகன்களின் செயல்களையும் பொறுத்தே அமைகிறது. ஒரு நல்ல பாகன் எப்போதும் யானையின் நல்ல நண்பனாகவும் இருப்பார். யானைக்கும் இது புரிந்து அது திருப்தி தெரிவிக்கும். சம்பவங்கள் எதிர்மறையானால் விளைவும் எதிர்மறையாகவே இருக்கும். முதற்பாகனாக வருவதற்கு முன், இரண்டாம் பாகனாக இருந்து 5 ஆண்டுகள் தீவிர அனுபவம் பெற்றிருக்க வேண்டும். யானையைத் தொடாதவர்களும் யானைகளின் மனோபாவம் புரியாதவர்களும் தொழிலுக்காகப் பாகன்களாக மாறிவரும்போது, செய்கைகள் கொடூரங்களாக மாறி மனித ஓலங்கள் டி.வி. காட்சிகளில் தெரிய ஆரம்பிக்கின்றன.


தலைவர்கள் வருகையின்போது கொளுத்தும் வெயிலில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்க நிற்கும் ஒருநாள் காட்சி நம்மிடம் பல கண்டனங்களைப் பெறுகிறது. வெப்பத்தைக் கிரகிக்கும் கருப்புத்தோலையுடைய, மென்மையான பாதங்கொண்ட யானையைப் பலமணி நேரம், பல நாள்கள் தார் இளகும் சாலையில் நிற்கவைப்பதும் கொண்டுபோவதும், கொடூரம் இல்லையா? வனங்களுக்குள் குளுமையான சூழ்நிலையில் உலாவியும் குட்டைகளுக்குள் உருண்டு புரண்டும் சுகம் அனுபவித்த யானைகளை மனிதனின் சுய தேவைக்காக அடக்குமுறையில் அல்லலுறச் செய்வது நியாயந்தானா?


வெறிநாய் என்பது போல யானைக்கும் மதம்பிடித்தல் மனிதனுக்குக் கிலியை ஏற்படுத்துவதாகும். மதச்சுரப்பி என்பது யானைகளுக்கே உரியது. விஞ்ஞானத்தின்படி யானையின் தலையில் இருபுறமும் காதிற்கும் கண்ணிற்குமிடையே மதச்சுரப்பி அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் சிறுகீறல் போன்று இது காட்சியளிக்கும். இது செயல்படும் நாள்களில் அப்பகுதியைச் சுற்றி நீர்வீக்கம் ஏற்பட்டு பசைபோன்ற கருப்புத்திரவம் அதிலிருந்து வழியத் தொடங்கும். இம்மதக்காலத்தின் பராமரிப்பு முறையைப் பொறுத்தே மனித உயிர், குறிப்பாக பாகனின் உயிர்ப்பாதுகாப்பு அமைகிறது.
மதநீர் 15 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை ஒழுகுகிறது. கீழ்ப்படியாமை, தப்பித்து ஓடும் பழக்கம், மனிதருடன் பகை, எதையும் அழிக்கும் மனோபாவம் போன்றவை மதக்காலச் செயல்கள்.


சராசரியாக யானைகளுக்கு 20-25 வயதின் போதே மதம்பிடித்தல் உண்டாகிறது. தொடர்ந்து 60-65 வயது வரை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இது ஏற்படுகிறது. ஆசிய யானைகளில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களிலேயே மதம் அதிகமாக ஏற்படுகிறது. காட்டுயானையிலும் நாட்டுயானையிலும் மதம் ஏற்படும். மதத்தின் உச்சநிலையை அடைந்த யானை யாரையும் அருகில்வர அனுமதிக்காது. தீவனம் உண்ணாது. கையில் கிட்டிய எதையும் எடுத்து எதிரில் நிற்பவரை நோக்கி எறியும். மனிதனைப் பொறுத்தமட்டில் மதக்காலமும் மற்ற காலமும் ஒரேகணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாலேயே உயிருக்கும் உடைமைக்கும் இழப்பு ஏற்படுகிறது.


மதங்கொண்ட யானையின் உடலில் குளுமையை ஏற்படுத்த வேண்டும். குளிப்பாட்டியும் குடிநீர் அளித்தும் வரவேண்டும். வெயி#ல் கொண்டு செல்லக்கூடாது. வேலையில் ஈடுபடுத்தக்கூடாது. கட்டியிட்டு ஓய்வுகொடுத்து மூன்றுமாதம் பாரமரிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக விழா மற்றும் பண்டிகைக் காலங்களும் யானைகளுக்கு மதம்பிடிக்கும் காலமும் டிசம்பர் முதல் ஏப்ரலுக்குள்ளேயே அடங்குகின்றன. நாளொன்றுக்கு ரூ. 5000 நட்டம் வீதம் 3 மாதத்துக்கு ரூ. 4.5 லட்சம் எனக் கணக்குப் பார்க்கக்கூடாது. ரூ. 10 லட்சம், 15 லட்சம் எனக்கொடுத்து யானை வாங்கி வளர்ப்போருக்கு இந்நட்டம் பெரியதாக இருந்தாலும் மதம்கொண்ட யானையால் ஏற்படும் உயிருக்கும் உடைமைக்குமான இழப்பு அதைவிட அதிகமல்லவா!

காட்டில் விரும்பியவற்றை ருசித்து உண்டு, இளைப்பாறிய யானைகளுக்கு நாட்டில் அவை செய்யும் வேலையைக் கருத்திற்கொண்டு அரைவயிறு நிறையும் அளவுக்குக்கூட உணவு அளிக்கப்படுவதில்லை. பாகனே இதற்குக் காரணமென அறிவுக் கூர்மை உள்ள யானைகள் சினங்கொள்கின்றன. பாகனின் நிலைமையோ இதைவிட மோசம். நிரந்தரத் தொழிலோ, காப்பீடு வசதியோ இல்லை. இறுதியில் யானையின் சினம் பாகனின் கொலையில் முடிகிறது.


யானைச்சாவுகளையும் யானைகளின் மூலமான மனித மரணங்களையும் எவ்வாறு தவிர்ப்பது? வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் பிரிவில் சேர்க்கப்பட்ட விலங்கு யானையாகும். யானையைத் தொந்தரவு செய்தால் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையுண்டு. இச்சட்டத்தின்படி வெயிலில் அலைக்கழித்தல், பட்டினி போடுதல், காயமேற்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்துவோர் குற்றவாளிகளாவர்.


யானை வளர்ப்பில் முறையான அக்கறையுடையோரையும் பயிற்சி பெற்றோரையும் மட்டுமே பாகன்களாக ஆக்கவேண்டும். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானைகளை உபயோகப்படுத்துமுன் அவற்றின் உடல்நிலை குறித்து கால்நடைமருத்துவரின் நலச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படவேண்டும். யானைகளுக்கு மதம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள இது உதவும். யானைகளைத் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்துக்கு நடத்திச் செல்லக் கூடாது. நாள் ஒன்றுக்கு 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக நடத்திக் கொண்டு செல்லக்கூடாது. தினமும் குளிப்பாட்ட வேண்டும். பாகனுக்குக் காப்பீட்டு வசதியை யானை உரிமையாளர் செய்ய வேண்டும்.


யானை காட்டுவிலங்குதான். மனிதனின் சில சுய தேவைகளுக்கும் கொடூரங்களுக்கும் பயந்தே பல காரியங்களைச் செய்கிறது. உசுப்பேற்றிவிட்டால், யானைக்கல்ல, மனிதனுக்கே அடிசறுக்கும் என்பதை உணரவேண்டும்.

தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

 

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.


அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.


"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.


ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.


ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்...

தமிழன் என்று சொல்வோம்....

தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

தவறு செய்தாள் மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!



‘சாரி… நான் உங்களை, ‘டீஸ்’ செய்திருக்கக் கூடாது…’ என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; ‘பரவாயில்லை… ஐ டோன்ட் மைண்ட்’ என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல் அடித்த ஆணிடம் கூறிப் பாருங்கள்… ‘மவனே… இன்னொரு தடவை கிண்டல் பண்ணினே…’ என, மூக்கு விரிய, உங்களை அடிக்க வருவார்.


அரை மணி நேரத்திற்குப் பிறகு தான், ஆசுவாசப்படுவார்.ஒரு பெண்ணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ நடந்து கொண்டால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அப்பெண் எதிர்பார்ப்பார் எனவும், அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதய பாதிப்பே கூட ஏற்படும் என்றும், பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


எனினும், மன்னிப்பு கேட்ட அடுத்த நொடியே, அந்தப் பெண், சாதாரண மனநிலைக்கு வந்து விடுவார்; அவருடைய ரத்த அழுத்தமும் சாதா நிலைக்கு வந்து விடும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதே போல் ஒரு ஆணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ பேசி விட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் லேசில் பணிய மாட்டார்.


 மேலும், அவருடைய ரத்த அழுத்தம் சீரடையவும், கோபம் தணியவும் வெகு நேரம் ஆகும் என்றும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது.மன்னிப்பு கேட்பது, மாத்திரைகள் விழுங்குவதைத் தவிர்க்க சிறந்த மருந்து என்று, அந்த ஆய்வை நடத்திய பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எளிய முறையில் சரும பராமரிப்பு வழிகள்!



 வெயில் காலங்களில் நமது சருமம் சீக்கிரமாக வாடிவிடும் அதேபோல் மழைக்காலங்களில் வறண்டு காணப்படும். இதற்கு வீட்டிலேயே எளிய முறையில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்தை பராமரிக்கலாம். உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் வர பல காரணங்கள் இருக்கின்றன.


இந்த சரும பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மனஅழுத்தம். சர்க்கரை மற்றும் சீஸ் வகைகளான சாக்லெட்களும் அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் அழகான முகத்தில் பருக்களும் அதனால் ஏற்படும் தழும்புகள் கொடுமையானவைகளாக இருக்கும்.


உங்கள் சருமத்தை சிறந்த வழியில் கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிதைவு ஏற்பட்டாலோ வீட்டிலேயே சிகிச்சை செய்து இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணலாம். பருக்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சிகிச்சை செய்வதற்கான வழிகளை பார்க்கலாம்.


• தேன் மற்றும் பட்டையை சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த தேன் மற்றும் லவங்கப்பட்டையின் கலவை சரும பாதிப்புகளுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்த கலவையை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?


• முட்டையின் வெள்ளைக்கரு நமது டயட்டில் கால்சியத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாது சரும பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டை வெள்ளைக்கரு சரும பாதிப்புகளுக்கு ஒரு எளிமையான தீர்வாக இருக்கும்.


அதில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் கனிமங்கள் சரும பாதிப்பை எதிர்த்து செயல்பட்டு உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும். மலிவான விலையில் இந்த முறை உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகத்தில் சிறிது நேரம் தடவி காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.


• இன்று கடைகளில் கிடைக்கும் சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15 -20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும்.


• எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கான முக்கிய தீர்வாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். எலுமிச்சை சாற்றை உங்கள் சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.


மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும்.
 
back to top