.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 8, 2013

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கொத்தவரங்காய் சாப்பிடுங்க...



பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மூலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.


ஆயுர் வேதமருத்துவத்தில் 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்போது இது நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15வது இடத்தை வகிக்கின்றது.


நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால் ஏற்றுமதியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


கடந்த காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல் நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது. நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.


எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்கலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்த ஒரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை. ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பை விரைவாக செரிக்கச் செய்கிறது.


இஞ்சியானது ரத்தத்தை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது. ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.


மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் விளையும் ஒருவகை கருமை வண்ண பழம் தான் அகாய் பெர்ரி. நம் ஊரில் நாவற்பழம் போன்றது. பனை வகையைச் சேர்ந்தது. இதன் ஜூஸ் அல்லது இப்பழத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் பொடிக்கு உடல் எடையைக் குறைக்கும் வல்லமை உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கின்றன. உடலுக்கு சக்தியை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இப்பழத்தில் உள்ளன. ஒருவகை கண்டங்கத்திரி செடியின் இலை போன்றது நெட்டில் இலை. இவ்விலையில் உடலுக்கு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தை சுத்திகரித்து கொழுப்புகளை எரிக்க உதவுகின்றது.


வர மிளகாயில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது.


மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது. நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகு. இந்த மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.


கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது. உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது. உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.


நம் அசைவ உணவில் அதிகமாக சேர்க்கப்படுவது சோம்பு. இந்த சோம்பு, உணவு செரிப்பதற்கு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது. இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும்.


அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும். இந்த வகையில் மிகவும் முக்கியமானது செம்பருத்தி. இதன் பயன்பாடு அதிகம் உள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது.

உழைப்புக்கேற்ற; வேலைக்கேற்ற; உங்களுக்கேற்ற; உணவு!






'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இரவு நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள், வெப்பம் மிகுந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பலருக்கும் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்கான உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து, ஊட்டச் சத்து நிபுணர்களான தாரிணி கிருஷ்ணன் மற்றும் ஷைனி சந்திரன் அளிக்கும் ஆலோசனைகள்.


இரவுநேரப் பணியில் ஈடுபடுபவர்கள்:


இவர்களுக்கு சோர்வு, தூக்கம் தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் இன்றி உடல் எடை அதிகரிப்புதான் இவர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை. இரவில் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க, இவர்கள் உணவில் அதிக அளவில் புரதச் சத்தைச் சேர்த்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதச் சத்து, கவனம் மற்றும் விழிப்புத் தன்மையை (அலர்ட்) அளிக்கிறது. 
 
 
இதேபோல், இனிப்புமிக்க பானங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரைச் சத்துள்ள உணவுப்பொருள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இருப்பினும், நம் உடலின் சர்க்கரையைக் கையாளும் திறன் இரவு நேரத்தில் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில், அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது உடலைப் பாதிக்கும். இரவு பணியில் உள்ளவர்கள், நொறுக்குத் தீனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வர். இது தேவையற்ற கலோரிகளைச் சேர்த்து, கொழுப்பாக மாற்றிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும்.


இரவு நேரத்தில் சப்பாத்தி, இட்லி, பொங்கல் போன்ற ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நல்லது. இரவு ஒரு மணிக்கு 'ஃப்ரூட் சாலட்’ அல்லது ஏதாவது ஒரு 'ஃப்ரெஷ் ஜூஸ்’ குடிக்கலாம். பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களையும் சாப்பிடலாம். அதிகாலை மூன்று மணிக்கு நல்ல குளிர்ச்சியான பானங்கள் குடிக்கலாம். பணியின் இடையே பசித்தாலும் முளைகட்டிய பயறு வகைகளை, சாலட் செய்து சாப்பிடுவது நல்லது.


அதிகம் உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள்:


இவர்களுக்கு நீரிழப்புதான் மிக முக்கியமான பிரச்னை. நம்முடைய உடலில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, குளிர்விப்பதற்காக அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. இதனால் உடலில் உள்ள நீரும், தாது உப்புக்களும் வெளியேறுகின்றன. வெப்பமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.
 
 
 
 இதைத் தவிர்க்க 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்த வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தினசரி உணவில் இளநீர், மோர் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் அருந்துவதைத் தவிர்த்து, மண் பானைத் தண்ணீர் அருந்தினால் மிகவும் நல்லது.


நீண்ட நேரம் நடந்து/நின்றுகொண்டு வேலை செய்பவர்கள்:



இவர்கள், குறைந்த கலோரி, புரதம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரி உணவு தேவை. வேலை நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு அலைந்துகொண்டே இருப்பதால், பஜ்ஜி, போண்டா என்று ஆங்காங்கே கிடைக்கும் பொரித்த உணவைச் சாப்பிடுவதையும் இவர்களால் தவிர்க்க முடியாது. இதனால், கலோரியின் அளவும் 2,200-க்கு மேல் அதிகரித்துவிடும். 
 
 
நொறுக்குத் தீனியைத் தவிர்த்து, வேகவைத்த கடலை, பழங்கள் சாப்பிடலாம். காலையில் மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் ஒன்று முதல் ஒன்றரை கப் அளவு சாதம், அதற்குச் சரிசமமாக காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். மூன்று மணியளவில் தேநீர் அருந்தலாம். மாலை வேளையில் முளைகட்டிய பயறு வகைகளை வேகவைத்துச் சாப்பிடலாம்.


அமர்ந்தே வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்கள்:



அதிகம் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து, எனர்ஜி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் தவிர்த்து பழங்கள் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான சாதத்துடன், அதிகம் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்காராமல் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருமுறை, சிறிது தூரம் நடந்து போய்விட்டு வரலாம். இரவு உணவை எட்டு மணிக்கு முன்னால் முடித்துக்கொள்வது மிகவும் நல்லது.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!



காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


 நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்

 நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

 முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

 சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

 முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

 முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்


 சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

துளசி மல்லி கஷாயம்




துளசி மல்லி கஷாயம்

 துளசி - 2 கைப்பிடி,

சுக்கு - 1 துண்டு,

வெள்ளை மிளகு - 20,

ஏலக்காய் - 5,

தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு

 அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.


சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.
 
back to top