.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 9, 2013

இன்பம் எங்கே?


இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது".


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.


சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.


நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் "துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா" என்று எச்சரிக்கை செய்கிறார்.


பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.


ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.


இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.


நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.


உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.


இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

இது என்ன?


படத்தை பார்த்ததும், கிளைக்கு, கிளை தாவிக்கிட்டும், உர்... உர்... உர்... என்று உறுமிக் கொண்டு இருக்கும் குரங்குகள் என்றுதானே நினைத்தீர்கள்,


அவை, குரங்குகள் இல்லை.


ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளில் வளரும் மிக அபூர்வமான, "மங்கி ஆர்கிட்' எனப்படும் மலர்கள்.


இயற்கையிடம் தான் எத்தனை, ஆச்சரியங்களும், அழகும் கொட்டிக் கிடக்கின்றன!




உங்கள் சந்தோஷம் மற்றவரின் அமைதி!



குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்.


"ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்" என்று லக்னோவில் உள்ள மனநல மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.


திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி" விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொடங்கி, அனைவறிடமும் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற கவலை; தனது எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கவலை; இதில் சிக்கல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற மன உளைச்சல்... இப்படி கவலைப்பட்டே தனது முதல் 10 ஆண்டு மணவாழ்க்கையை பாழடித்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


இடையே ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. அவற்றை சரியான முறையில், நோய் நொடி இல்லாமல் வளர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டில் உள்ள வேலைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாடு, "கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு..." என்று மற்றவர் பரிதாபப்படும் நிலைதான்.


தினமும் ஒரே மாதிரியான பிரச்னைகள்; அவற்றை தனி ஒருத்தியாக தீர்க்க முடியாத சூழ்நிலை. தானாகவே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில், வேதனைக்கு ஆளாகி, தன் சுய சிந்தனையை இழந்து, வீட்டிலும், அலுவலகத்திலும் தனது முழுத்திறனை வெளிக்காட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறாள்.


இப்படிப்பட்டவர்களிடம் நல்ல மனநிலையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆனால், அது தான் முக்கியம். வேகமாக ஓடிப் போய்விட்ட 10 ஆண்டு கால இடைவெளியில், அவளையும் அறியாமல், அவளது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாய் தொலைத்து விட்டு, மெதுவாய் தன் நிலைக்கு திரும்ப வரும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காகவே கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி? எப்போதும் சந்தோஷமும், ஆரோக்கியமுமாய் இருப்பது எப்படி? உங்கள் முடிவுகள் மீது மற்றவர் கருத்துக்களைத் திணிக்க இடம் கொடுக்காதீர்கள்.


இந்த அறிவுரையுடன், வேறு சில விஷயங்களை நீங்கள் நனைவில் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டின் மரியாதையைக் காப்பாற்றுவது, புகுந்த வீட்டின் அன்பைப் பெறுதல், சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்படுதல், குழந்தைப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் என்பதுவரை திருமணத்தின் போதே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது, மணவாழ்க்கையின் வேறு பரிணாமத்தைப் பார்க்கும் காலம் துவங்கி விடும்.


இந்த கால கட்டத்தில் அதிக பொறுப்புகள் சேரும். அவற்றோடு சேர்ந்து நம் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியத்தைக் கோட்டை விட்டால், மீளவே முடியாத நிலை ஏற்படும்.


ஆரோக்கியமான மனநிலையை வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது:


* நன்றாக, திருப்தியாகச் சாப்பிடுங்கள். காலை உணவு தொடங்கி, இரவு சாப்பாடு வரை அனைத்தும் திருப்தியாய் அமைவதாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


* சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.


* மனதுக்கு தெம்பும், தைரியமும் அளிக்கும் நில்ல புத்தகங்களை, இதிகாசங்களை, பிரச்சனையிலிருந்து உங்களை மீட்டும் தன்னம்பிக்கைத் தொடர்கள் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள்.


* சுய பச்சாதாபத்தைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


* உங்கள் உணர்வுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வீணான கற்பனைகளுக்கெல்லாம் மூட்டை கட்டிவிடுங்கள். ஏனெனில், உங்கள் முகத்தில் ஓடும் சந்தோஷம் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அமைதியாக வாழ வைக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிட் காயின் என்றால் என்ன? முழு கட்டுரை!




பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி). இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.

மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.


பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.


எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப் படுகிறது.



உலகின் முதல் 'பிட்காயின்'- டிஜிட்டல் பணம் வழங்கும் ஏடிஎம் திறப்பு

 கனடா வான்கூவர் நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) மாற்றிக் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.


பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதல் பிட் காயின் ஏடிஎம் இயந்திரம் இதுவாகும். இந்த ஏடிஎம் இயந்திரம் வான்கூவரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிட்காயினிகாஸ் நிறுவன மும், நெவேடாவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ரோபோகாயின் நிறுவனமும் இதனைச் செயல்படுத்துகின்றன.


வான்கூவரில் ஒரு காபிக் கடையில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வான்கூவர் நகரில் 20 வர்த்தக நிறுவனங்கள் பிட்காயின்களை ஏற்றுக் கொள்கின்றன. அதில் இந்தக் காபி கடையும் ஒன்று.


ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட் காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கையை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும்.



பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.


பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும்.


நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார். தோண்டி எடுப்பது என்றால் குழம்ப வேண்டாம். டிஜிட்டல் உலகில் அர்த்தமுள்ள தகவல்களை தேடி எடுப்பதை மைனிங் என்று குறுப்பிடுகின்றனர். எந்த ஒரு மைய அமைப்பாலும் வெளியிடப்படாத பிட்காயினையும் அதன் வலைப்பின்னலில் இப்படி தான் தோண்டி எடுக்க வேண்டும்.


2009 ல் ஹோவல்ஸ் தனது லேப்டாப் மூலம் பிட்காயினை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தார். சுமார் ஒரு வார கால் தேடலில் அவருக்கு 7,500 பிட்காயின்கள் கிடைத்தன. இது பெரிய அதிர்ஷ்டம் தான். இப்போது பிட்காயினை தோண்டி எடுக்க லேப்டாப் எல்லாம் போதாது. ஏனெனில் பிட்காய்னை தோண்டி எடுப்பது என்றால் கணிதவியல் சமன்பாடு போன்ற புதிர்களுக்கு விடை காண வேண்டும். பிட்காயின் சித்தாந்தப்படி ,இந்த புதிர்கள் சிக்கலாகி கொண்டே வரும். தற்போது பிட்காயின் வலைப்பின்னலின் புதிர்களை விடுவிக்க லேப்டாப்பைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவை. இதற்காக என்றே பிரத்யேக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் இருக்கின்றன. பலர் ஒன்று கூடி கம்ப்யுட்டர் வலைப்பின்னல் அமைத்தும் பிட்காயின் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.


ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்னரே ஹோவல்ஸ் 7,500 பிட்காயின்களை சேகரித்து வைத்து விட்டார். பிட்காயின்களுக்கு பெளதீக வடிவம் கிடையாது. அவற்றை குறீயிடுகளாக இணைய பர்சில் போட்டு வைக்கலாம். ஹோவல்ஸ் தனது பிட்காயின்களை லேப்டாப் ஹார்ட்டிரைவில் வைத்திருந்தார். அவரது போதாத நேரம் லேப்டாப் பழுதாகி அதை தனியே மேஜையில் வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டை சுத்தமாக்கிய பொது அதை தெரியாமல் தூக்கி வீசி எரிந்து விட்டார் . அதை மறந்தும் விட்டார்.


ஆனால் இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் ஏற்ற இறக்கங்களுக்கு இலக்கானாலும் சமீபத்தில் அதன் மதிப்பு எகிறத்துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு பிட்காயினின் மதிப்பு 100 டாலரை தொட்டது. இதோ சில தினங்களுக்கு முன் ஒரு பிட்காயின் ஆயிரம் டாலர் எனும் உச்சத்தை தொட்டுள்ளது.


இத்தனைக்கும் நிஜ உலகில் பிட்காயின் பரிவர்த்தனையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. சட்டபூர்வ கேள்விகளும் உள்ளன. பிட்காயினை கொண்டு சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும். ஆனாலும் அதன் மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் கைவசம் பிட்காயினை வைத்திருப்பவர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாகி கொண்டிருக்கின்றனர்.


இனி ஹோவ்ல்ஸ் கதைக்கு வருவோம். பிட்காயினை மறந்திருந்தவர் சமீபத்திய பரபரப்பால ஈர்க்கப்பட்டு தனது ஹார்ட்டிரைவை தேடிப்பார்த்த போது தான் அதை குப்பை என தூக்கி வீசியது தெரிந்து திடுக்கிட்டு போனார். பிட்காயின் பரிவர்த்தனை மதிப்பு படி அவரிடம் இருந்த 7,500 பிட்காயின்களின் மதிப்பு 75, 00000 டாலர்கள்.


ஹோவ்லஸ் உடனே தனது பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். வேல்ஸ் மாகானத்தின் நியூபோர்ட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தின் அதிகாரிகள் , அவரிடம் கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்த குப்பை மலையை காட்டி அதன் அடியில் தான் ஹார்ட்டிரைவ் இருக்க வேண்டும் என கூறினர். அதை கேட்டதுமே ஹோவல்சுக்கு நம்பிக்கை போய்விட்டது. தன்னால் அதை தேட முடியாது என விட்டுவிட்டவர் வேறு யாரேனும் அரும்பாடு பட்டு தேடி எடுத்தால் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் இதழில் இது பற்றி தனது சோக கதையை ஹோவல்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் பிட்காயின் மதிப்பை உணர்த்துவதோடு இன்னொரு பாடத்தையும் சொல்லாமல் சொல்கிறது. கம்ப்யூட்டரில் எதை சேகரித்து வைத்தாலும் அதற்கு பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஹோவல்ஸ் பேக் அப் எடுத்து வைத்திருந்தால் அவர் சேகரித்திருந்த பிட்காயினை இயக்குவதற்கான இணைய சாவி அவரிடமே இருந்திருக்கும்.
 
back to top