.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 9, 2013

ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்!



விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார்.


விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார்.


பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.


இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார்.


சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்பினார்கள்.


இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீஷுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.


நல்ல கதை கிடைத்திருக்கிறதாம். படத்துக்கு 'சகாப்தம்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் விஜயகாந்த் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இன்பம் எங்கே?


இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது".


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.


சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.


நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் "துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா" என்று எச்சரிக்கை செய்கிறார்.


பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.


ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.


இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.


நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.


உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.


இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

இது என்ன?


படத்தை பார்த்ததும், கிளைக்கு, கிளை தாவிக்கிட்டும், உர்... உர்... உர்... என்று உறுமிக் கொண்டு இருக்கும் குரங்குகள் என்றுதானே நினைத்தீர்கள்,


அவை, குரங்குகள் இல்லை.


ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளில் வளரும் மிக அபூர்வமான, "மங்கி ஆர்கிட்' எனப்படும் மலர்கள்.


இயற்கையிடம் தான் எத்தனை, ஆச்சரியங்களும், அழகும் கொட்டிக் கிடக்கின்றன!




உங்கள் சந்தோஷம் மற்றவரின் அமைதி!



குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்.


"ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்" என்று லக்னோவில் உள்ள மனநல மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.


திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி" விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொடங்கி, அனைவறிடமும் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற கவலை; தனது எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கவலை; இதில் சிக்கல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற மன உளைச்சல்... இப்படி கவலைப்பட்டே தனது முதல் 10 ஆண்டு மணவாழ்க்கையை பாழடித்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


இடையே ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. அவற்றை சரியான முறையில், நோய் நொடி இல்லாமல் வளர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டில் உள்ள வேலைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாடு, "கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு..." என்று மற்றவர் பரிதாபப்படும் நிலைதான்.


தினமும் ஒரே மாதிரியான பிரச்னைகள்; அவற்றை தனி ஒருத்தியாக தீர்க்க முடியாத சூழ்நிலை. தானாகவே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில், வேதனைக்கு ஆளாகி, தன் சுய சிந்தனையை இழந்து, வீட்டிலும், அலுவலகத்திலும் தனது முழுத்திறனை வெளிக்காட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறாள்.


இப்படிப்பட்டவர்களிடம் நல்ல மனநிலையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆனால், அது தான் முக்கியம். வேகமாக ஓடிப் போய்விட்ட 10 ஆண்டு கால இடைவெளியில், அவளையும் அறியாமல், அவளது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாய் தொலைத்து விட்டு, மெதுவாய் தன் நிலைக்கு திரும்ப வரும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காகவே கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி? எப்போதும் சந்தோஷமும், ஆரோக்கியமுமாய் இருப்பது எப்படி? உங்கள் முடிவுகள் மீது மற்றவர் கருத்துக்களைத் திணிக்க இடம் கொடுக்காதீர்கள்.


இந்த அறிவுரையுடன், வேறு சில விஷயங்களை நீங்கள் நனைவில் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டின் மரியாதையைக் காப்பாற்றுவது, புகுந்த வீட்டின் அன்பைப் பெறுதல், சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்படுதல், குழந்தைப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் என்பதுவரை திருமணத்தின் போதே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது, மணவாழ்க்கையின் வேறு பரிணாமத்தைப் பார்க்கும் காலம் துவங்கி விடும்.


இந்த கால கட்டத்தில் அதிக பொறுப்புகள் சேரும். அவற்றோடு சேர்ந்து நம் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியத்தைக் கோட்டை விட்டால், மீளவே முடியாத நிலை ஏற்படும்.


ஆரோக்கியமான மனநிலையை வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது:


* நன்றாக, திருப்தியாகச் சாப்பிடுங்கள். காலை உணவு தொடங்கி, இரவு சாப்பாடு வரை அனைத்தும் திருப்தியாய் அமைவதாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


* சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.


* மனதுக்கு தெம்பும், தைரியமும் அளிக்கும் நில்ல புத்தகங்களை, இதிகாசங்களை, பிரச்சனையிலிருந்து உங்களை மீட்டும் தன்னம்பிக்கைத் தொடர்கள் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள்.


* சுய பச்சாதாபத்தைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


* உங்கள் உணர்வுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வீணான கற்பனைகளுக்கெல்லாம் மூட்டை கட்டிவிடுங்கள். ஏனெனில், உங்கள் முகத்தில் ஓடும் சந்தோஷம் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அமைதியாக வாழ வைக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
back to top