.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 9, 2013

பிட் காயின் என்றால் என்ன? முழு கட்டுரை!




பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி). இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.

மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.


பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.


எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப் படுகிறது.



உலகின் முதல் 'பிட்காயின்'- டிஜிட்டல் பணம் வழங்கும் ஏடிஎம் திறப்பு

 கனடா வான்கூவர் நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) மாற்றிக் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.


பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதல் பிட் காயின் ஏடிஎம் இயந்திரம் இதுவாகும். இந்த ஏடிஎம் இயந்திரம் வான்கூவரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிட்காயினிகாஸ் நிறுவன மும், நெவேடாவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ரோபோகாயின் நிறுவனமும் இதனைச் செயல்படுத்துகின்றன.


வான்கூவரில் ஒரு காபிக் கடையில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வான்கூவர் நகரில் 20 வர்த்தக நிறுவனங்கள் பிட்காயின்களை ஏற்றுக் கொள்கின்றன. அதில் இந்தக் காபி கடையும் ஒன்று.


ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட் காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கையை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும்.



பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.


பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும்.


நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார். தோண்டி எடுப்பது என்றால் குழம்ப வேண்டாம். டிஜிட்டல் உலகில் அர்த்தமுள்ள தகவல்களை தேடி எடுப்பதை மைனிங் என்று குறுப்பிடுகின்றனர். எந்த ஒரு மைய அமைப்பாலும் வெளியிடப்படாத பிட்காயினையும் அதன் வலைப்பின்னலில் இப்படி தான் தோண்டி எடுக்க வேண்டும்.


2009 ல் ஹோவல்ஸ் தனது லேப்டாப் மூலம் பிட்காயினை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தார். சுமார் ஒரு வார கால் தேடலில் அவருக்கு 7,500 பிட்காயின்கள் கிடைத்தன. இது பெரிய அதிர்ஷ்டம் தான். இப்போது பிட்காயினை தோண்டி எடுக்க லேப்டாப் எல்லாம் போதாது. ஏனெனில் பிட்காய்னை தோண்டி எடுப்பது என்றால் கணிதவியல் சமன்பாடு போன்ற புதிர்களுக்கு விடை காண வேண்டும். பிட்காயின் சித்தாந்தப்படி ,இந்த புதிர்கள் சிக்கலாகி கொண்டே வரும். தற்போது பிட்காயின் வலைப்பின்னலின் புதிர்களை விடுவிக்க லேப்டாப்பைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவை. இதற்காக என்றே பிரத்யேக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் இருக்கின்றன. பலர் ஒன்று கூடி கம்ப்யுட்டர் வலைப்பின்னல் அமைத்தும் பிட்காயின் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.


ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்னரே ஹோவல்ஸ் 7,500 பிட்காயின்களை சேகரித்து வைத்து விட்டார். பிட்காயின்களுக்கு பெளதீக வடிவம் கிடையாது. அவற்றை குறீயிடுகளாக இணைய பர்சில் போட்டு வைக்கலாம். ஹோவல்ஸ் தனது பிட்காயின்களை லேப்டாப் ஹார்ட்டிரைவில் வைத்திருந்தார். அவரது போதாத நேரம் லேப்டாப் பழுதாகி அதை தனியே மேஜையில் வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டை சுத்தமாக்கிய பொது அதை தெரியாமல் தூக்கி வீசி எரிந்து விட்டார் . அதை மறந்தும் விட்டார்.


ஆனால் இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் ஏற்ற இறக்கங்களுக்கு இலக்கானாலும் சமீபத்தில் அதன் மதிப்பு எகிறத்துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு பிட்காயினின் மதிப்பு 100 டாலரை தொட்டது. இதோ சில தினங்களுக்கு முன் ஒரு பிட்காயின் ஆயிரம் டாலர் எனும் உச்சத்தை தொட்டுள்ளது.


இத்தனைக்கும் நிஜ உலகில் பிட்காயின் பரிவர்த்தனையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. சட்டபூர்வ கேள்விகளும் உள்ளன. பிட்காயினை கொண்டு சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும். ஆனாலும் அதன் மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் கைவசம் பிட்காயினை வைத்திருப்பவர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாகி கொண்டிருக்கின்றனர்.


இனி ஹோவ்ல்ஸ் கதைக்கு வருவோம். பிட்காயினை மறந்திருந்தவர் சமீபத்திய பரபரப்பால ஈர்க்கப்பட்டு தனது ஹார்ட்டிரைவை தேடிப்பார்த்த போது தான் அதை குப்பை என தூக்கி வீசியது தெரிந்து திடுக்கிட்டு போனார். பிட்காயின் பரிவர்த்தனை மதிப்பு படி அவரிடம் இருந்த 7,500 பிட்காயின்களின் மதிப்பு 75, 00000 டாலர்கள்.


ஹோவ்லஸ் உடனே தனது பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். வேல்ஸ் மாகானத்தின் நியூபோர்ட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தின் அதிகாரிகள் , அவரிடம் கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்த குப்பை மலையை காட்டி அதன் அடியில் தான் ஹார்ட்டிரைவ் இருக்க வேண்டும் என கூறினர். அதை கேட்டதுமே ஹோவல்சுக்கு நம்பிக்கை போய்விட்டது. தன்னால் அதை தேட முடியாது என விட்டுவிட்டவர் வேறு யாரேனும் அரும்பாடு பட்டு தேடி எடுத்தால் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் இதழில் இது பற்றி தனது சோக கதையை ஹோவல்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் பிட்காயின் மதிப்பை உணர்த்துவதோடு இன்னொரு பாடத்தையும் சொல்லாமல் சொல்கிறது. கம்ப்யூட்டரில் எதை சேகரித்து வைத்தாலும் அதற்கு பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஹோவல்ஸ் பேக் அப் எடுத்து வைத்திருந்தால் அவர் சேகரித்திருந்த பிட்காயினை இயக்குவதற்கான இணைய சாவி அவரிடமே இருந்திருக்கும்.

ஆத்திச் சூடி 2014!



ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும்.


    அன்புடன் அனுகு

    ஆணவம் அகற்று

    இரவல் விலக்கு

    ஈதல் ஒதுக்கேல்

    உறுதியே துணை

    ஊனத்தை இகழேல்

    எள்ளி நகையேல்

    ஏளனம் பேசேல்

    ஐம்புலன் அடக்கு

    ஒன்றே இறைவன்

    ஓரம் போகேல்

    ஔவை சொல் கேள்

    அஃதும் இஃதும் மேல்.



அர்த்தங்கள்

படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது என் கடமை.


1. அன்புடன் அனுகு - எந்த ஒரு செயலையும் ரசித்து அதனை செய்யவேண்டும். பிறரிடம் பழகும்போது ஒவ்வொரு முறை அவர்களை அனுகும்போது அன்போடும் பாசத்தோடும் அனுகினால் ஊரில் உள்ள அனைவருமே நமக்கு எப்போதும் நண்பர்களாக இருப்பர்.


2. ஆணவம் அகற்று - செருக்கு, அதாவது ஆணவம்தான் ஒருவனுக்கு
அழிவை ஏற்படுத்தும் நோய். அதனை கை விட்டால் நம் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.


3. இரவல் விலக்கு
– கடன் வாங்கக்கூடாது. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பார்கள். மேலும் கடன் வாங்குவதால் பல பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஏழைப் பெண்மணி ஒருவளிடம் நகை இரவல் வாங்கி ஒரு திருமணத்திற்கு அணிந்து செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதை அவர் தொலைத்துவிட்டால் ஏழையான அவர் எப்படி அதனை நகைக்குச் சொந்தக்காரரிடம் கொடுப்பார்?


4. ஈதல் ஒதுக்கேல் – நாம் செய்யும் தர்மம்தான் நாம் சாகும் வரை நம் கூடவே வரும். எனவே தர்மம் செய்வதை ஒதுக்கவே கூடாது.


5. உறுதியே துணை
– மனதில் உறுதி வேண்டும். உறுதியோடு செய்யும் செயல் ஒவ்வொன்றும் வெற்றியடையும். உறுதிதான் நமது வாழ்க்கைக்குத் துணை.


6. ஊனத்தை இகழேல் – ஒரு ஊனமுற்றவரைப் பார்த்து இகழும்முன் அந்த ஊனம் நமக்கு வந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தால் நாம் அவரை இகழமாட்டோம்.


7. எள்ளி நகையேல்
– பிறரை அவரது மனம் புண்படும்படி பேசுவது, அவர்களைப் பார்த்து கேவலமாக சிரிப்பது போன்றவைகளைத் தவிர்க்கவேண்டும்.


8. ஏளனம் பேசேல் – மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு பேசுதல், அவதூறு பேசுதல், இவரிடம் அவரைப் பற்றி ஏளனமாக பேசுதல், அவரிடம் இவரைப் பற்றி ஏளனமாக பேசுதல் இவைகளையெல்லாம் தவிர்க்கவேண்டும்.


9. ஐம்புலன் அடக்கு
– நமது ஐம்புலங்களால் வரும் பிரச்சினைகள்தான் அதிகம். எனவே ஐம்புலங்களை அடக்கி ஒழுக்கமாக வாழவேண்டும்.

10. ஒன்றே இறைவன்
– சாதி, மத, இன கலவரங்கள் கூடாது. உலகில் உள்ள அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்னும் எண்ணம் வேண்டும்.


11. ஓரம் போகேல் – எந்த ஒரு செயலிலும் முடியாது என்ற விளிம்பிற்கு செல்லக் கூடாது. அதாவது ஒரு செயலை செய்யத் தொடங்கிவிட்டு அது முடியாது என்று ஓரம் போகக்கூடாது. விளிம்பில் சென்றால் என்ன நடக்கும்? நிலை தடுமாறி விழுந்து பலத்த அடி வாங்குவோம்.


12. ஔவை சொல் கேள் – இங்கு ஔவை என்பதை அனுபவ அறிவு உடைய வயதானவர்கள் என்னும் அர்த்தத்தில் குறிக்கிறேன். எனவே பெரியவர்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டும். அது நமது வாழ்கையின் முன்னேற்றதிற்கு உதவும்.

13. அஃதும் இஃதூம் மேல்
– அன்று ஔவை சொன்ன ஆத்திச் சூடியும் இன்று நான் எழுதியிருக்கும் ஆத்திச் சூடியும் வாழ்கையில் கடைபிடிக்கவேண்டிய மேன்மையான கருத்துக்கள்.

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்!



நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் பெரியவர்கள்.

கனவு எப்படி வருகிறது?


அறிவியல் முறைப்படி:



நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனக்குழப்பம் அதிகமாக இருந்தாலோ நமக்கு அடிக்கடி கனவு வரும்.


நினைவுகளே கனவு:



சிலருக்கு தாங்கள் பார்த்த திரைப் படங்கள் அப்படியே கனவாக வரும். நாம் என்ன நினைத்துக்கொண்டு தூங்குகிறோமோ அதுவே கனவாகவும் வரலாம். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் "நாளைக்கு தேர்வுக்குப் படிக்கவில்லையே, எப்படி எழுத்தப்போகிறோமோ" என்று எண்ணிக்கொண்டு தூங்கினால், அவனுக்கு தேர்வு எழுதுவது போன்றும், அதில் தேர்ச்சி பெறாதது போன்றும் கனவு வரலாம். இந்த மாதிரி கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இல்லை.


மத நம்பிக்கையின் படி:



கடவுள், அவரை வேண்டிக்கொள்பவர்களுக்கு கனவு மூலமாக சிலவற்றை தெளிவுபடுத்துவார். பிரியமானவர்களிடம் கனவு மூலம் பேசுவார். பிற்காலத்தில் நடக்கப் போகும் தீங்கை காட்டி எச்சரிப்பார்.
உதாரணமாக, பைபிளில் ஏரோது என்னும் மன்னன் குழந்தை ஏசுவை கொள்ள தேடிக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை சூசைக்கு கனவில் தேவ தூதன் தோன்றி எச்சரித்து எகிப்துக்குச் தப்பிச் செல்லும்படி கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் அந்த மன்னன் இறந்த பிறகு மீண்டும் அதே தேவ தூதன் சூசையின் கனவில் வந்து, ஏரோது இறந்துவிட்டான் என்பதையும் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் என்பதையும் கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.


சில கனவுகள் மற்றும் அதன் அர்த்தங்கள்:



பெரியவர்கள் சிலர் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அவற்றை தொகுக்க எடுக்கப்பட முயற்சிதான் இக்கட்டுரை.
சில வயதானவர்களிடம் கேட்டறிந்து பின்வரும் சில கனவுகளையும் அதன் அர்த்தங்களையும் எழுதுகிறேன்.


நல்ல கனவுகள்:


· பால் வாங்குவது போன்று கனவு கண்டால், நமக்கு வரவு, நல்ல சம்பவம், மன மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லது வாழ்கையில் முன்னேற்றம் நடப்போகிறது என்று அர்த்தம்.

· தலையில் பூச்சூடுவது போன்ற கனவு-குடும்பத்தில் அமைதி மற்றும் நிம்மதி.

· பழம் சாப்பிடுவது- ஒரு செயலின் வெற்றியை குறிக்கிறது.

· கனவில் சாவு விழுந்தால் சுப நிகழ்ச்சி (திருமணம் போன்றது) நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

· நம் கையில் உள்ள பணத்தை யாருக்காவது கொடுத்துவிட்டால், நம்மிடம் உள்ள வியாதிகள் நீங்குகிறது என்று அர்த்தம்.

· நம் தலை முடி நிறைய இருப்பது போன்ற கனவு- நாம் சந்தோஷமாக இருப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

· கனவில் பூ வாங்கினாலும் நல்லது. நமக்கு வரவு இருக்கிறது என்று அர்த்தம்.

· நாம் உயரப் பறப்பது போன்று இருந்தால், நமது வாழ்கையில் பிரச்சினைகளில் இருந்து துரிதமான முன்னேற்றம் அடையப் போகிறோம் என்று பொருள்.

· படிக்கட்டு ஏறினாலோ அல்லது உயரமான பகுதிகளுக்கு ஏறினாலோ, நாம் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறோம் என்று அர்த்தம்.

· கனவில் யாரேனும் இறந்தால், அவர்களுக்கு ஆயுள் கெட்டி என்று அர்த்தம்.

· வீட்டில் விளக்கு எறிதல் - குடும்பம் என்ற விளக்கு நன்றாக இருக்கிறது.

· பேருந்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது, வழியில் இறங்கிவிட்டதைப் போன்று கனவு வந்தால், நாம் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.
கெட்ட கனவுகள்:

· கனவில் பணம் வாங்கினால் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் அல்லது நோய் வாய்ப்பட நேரிடும் என்று அர்த்தம்.

· வீட்டில் விறகு அடிக்கியிருப்பது போன்றோ அல்லது விறகு சம்பந்தமான கனவு வந்தால், வீட்டில் அல்லது வெளியில் சண்டை வரும்.

· தண்ணீரில் நீந்துவது போன்ற கனவு - வாழ்கையில் இன்னும் போராட வேண்டியிருக்கிறது அல்லது ஏதோ ஒரு போராட்டத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

· பெரிய பள்ளத்தில் அல்லது குழியில் இருப்பது போன்றும் எப்படி வெளியில் வரப்போகிறோம் என்று எண்ணினால், சிக்கலான பிரச்சினையில் இருக்கிறோம் சமாளிப்பது சற்று கடினம் என்று அர்த்தம்.

· மேட்டுப் பகுதியில் இருந்து பள்ளத்தில் விழுந்தால், படு தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று அர்த்தம்.

· சாப்பிடுவது போன்ற அல்லது தலை குளிப்பது போன்ற கனவு - நாம் நோய் வாய்ப் பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

· வாந்தியெடுப்பது அல்லது வாயிலிருந்து ஏதோ எடுத்தல் – அதிகமான துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.

· நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் நமது வீட்டில் சாப்பிடுவது போன்ற கனவு - அவர்களுக்கும் நமக்கும் விரோதம் ஏற்படும்.

· அரிசி வீட்டில் கொட்டிக் கிடத்தல் - கெட்ட செய்தி வரப்போவதற்கான அறிகுறி.

· தேர்வு எழுதுவது போன்ற கனவு - பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் வலுக்கிறது.

· கனவில் திருமணம் நடந்தால்- துயர செய்தி, துயர சம்பவம்.

· கனவில் அடுத்தவர்களுக்கு நமது கையில் உள்ள பாலைக் கொடுத்தால், நமது வீட்டுச் செல்வம் நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம்.

· கனவில் அடுப்பு எறிந்தால், வீட்டில் சண்டை.

· புது வீடு கட்டுதல், மரம் சாய்தல் மற்றும் வீடு இடிதல் - இழப்பிற்கு அறிகுறி.

· கனவில் தலை முடி கொட்டுதல் அல்லது வழுக்கைத் தலை - நமக்கு மிகப்பெரும் அவமானம் மற்றும் நஷ்டம் வரப்போகிறது.

· கனவில் இனிப்பு, வேர்கடலை மற்றும் மீன் சாப்பிடுவது அல்லது இவைகள் கண்ணுக்குத் தென்படல் - நோய்க்கு அறிகுறி.

· தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் இருந்தால், கொடிய நோய்கள் வரப்போகிறது என்று அர்த்தம்.

· பல் அடி படுவது, மற்றும் மலம் அல்லது சிறு நீர் கழிப்பது - அவமானங்கள் மற்றும் துன்பங்கள் வருகிறது.

· கனவில் கையெழுத்து போடுவது - பெரிய துன்பம் வரும்.

· இறந்தவர்கள் நம்மை அழைத்து, நாம் வருகிறோம் என்று சொன்னால், நமது உயிருக்கு ஆபத்து.

· வாகனங்களில் ஏறுவது போன்ற கனவு - நோயின் வழியில் பயணம் செய்கிறோம்.

· காட்டில் இருப்பது போன்று கனவு வந்தால், பிரச்சினைகள் மத்தியில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.

· தேரை அல்லது ஆமை வீட்டில் நுழைதல் - தொடர்ச்சியான கொடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.


சில உண்மைக் கனவுகளும் அதன் பிறகு நடந்த சம்பவங்களும்:



எனது பாட்டியிடம் இந்த கனவுகளுக்கு அர்த்தம் கூறுவது பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது. “நாம் பல கனவுகளைக் காண்கிறோம். ஆனால் தூங்கி எழுந்தவுடன் அனைத்தும் ஞாபகம் இருப்பதில்லை. ஒரு சிலது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. அதுவும் நமது வாழ்க்கைக்குத் தொடர்புடையதாகவும் இருக்கிறது. அந்த கனவு தொடர்பான சம்பவங்கள் பல வருடங்கள் கழித்து நடந்தாலும் அந்த கனவிற்கான அர்த்தம்தான் அந்த சம்பவம் என்றும் தெரிகிறது. அது போலத்தான் என் தோழி, கனவில் யாரோ ஒருவர் அவளிடம் வீட்டில் எரியும் ராந்தல் விளக்கைக் கேட்டதற்கு தர மறுத்திருக்கிறாள்.


ஆனால் அவர் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். அவள் விழித்து எழுந்த பிறகு ‘ஐயோ ! விளக்க கொடுத்திட்டேனே, என்ன நடக்கப் போகப்போகுதோ !‘ என்று புலம்பினாள். நாங்கள் எல்லாரும் அவளிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னோம்.


ஆனாலும் அவள் பயந்ததுபோலவே நடந்தது. அவர்களது தோட்டத்தில் மோட்டார் திருட வந்தவனை அவளது மகன்கள் அடிக்கபோய் எதிர்பாராத விதமாக அவன் இறந்துவிட்டான்.அதனால் அவளது மகன்கள், சிறை தண்டனை பெற்றனர். அவர்களது குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. இப்போது அவர்கள் விடுதலை பெற்றாலும், அவரவர்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். கனவில் எரியும் விளக்கைக் கொடுத்தால் குடும்பம் இருட்டாகும். இப்போது அதுதான் நடந்துள்ளது.” என்று ஒரு உண்மைக் கதையைக் கூறினார். மேலும் பல உண்மைச் சம்பவங்களைக் கூறினார்.


எனது அம்மாவும், தான் கண்ட பல கனவுகளுக்கு அர்த்தங்கள் கூறுவார். அது நடந்தும் இருக்கிறது. அவற்றில் ஒன்றை சொல்கிறேன். என் அம்மாவின் உடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையின் தலையில் இரும்பு கிரீடம் வைத்து இருப்பது போன்று கனவு கண்டார். காலையில் எழுந்தவுடன் என்னிடம் தான் கண்ட கனவைக் கூறி அவர்களுக்கு ஏதோ கொடிய நோய் வரப்போவதாகத் தெரிகிறது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். நான் அதை ஏதோ உளறுகிறார்கள் என்று விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ஆனால், சில நாட்களில் அந்த ஆசிரியை மிகுந்த தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதித்தபோது அவருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்தார்கள். அவர் ஒரளவு குணமடைய ஐந்து வருடம் ஆனது.


ஒரு புறம் சிலருக்கு மறைமுகமாக கனவுகள் வரும்போது, சிலருக்கு நேரடியாக நடக்கப் போகும் நிகழ்வுகள் அப்படியே கனவில் வந்துகொண்டிருக்கிறது. என் அப்பா நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுப்பதுபோல் கனவு கண்டதாக தேர்வு முடிவுகள் வரும் நாளன்று கூறினார். முடிவுகளைப் பார்த்தப் பிறகு எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவர் கண்டது போலவே நானும் 430 மதிப்பெண்கள் பெற்றேன். மேலும் பனிரெண்டாம் வகுப்பிலும் 1090 மதிப்பெண்கள் பெருவதுபோல் கனவு கண்டதாக கூறினார். அதுவும் நடந்தது. இதைப் போல் எனது வாழ்க்கையிலேயே பல கனவுகள் உண்மையாக நடந்துள்ளன.


நான் கூற வருவது:



என்னதான் கனவு கண்டாலும், அதுவே நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் மோசமான கனவுகள் வந்தால் அதை நினைத்து பயப்படாமல் துணிந்து நின்று வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும். இந்த கட்டுரை இப்படிபட்ட கனவுகளுக்கு, இப்படிப்பட்ட அர்த்தங்களைக் கூறிவருகிறார்கள் என்று சொல்ல எழுதப்பட்டதே தவிர யாரையும் பயமுறுத்துவதற்காக எழுத்தப்பட்டது அல்ல. மேலும் இதில் உள்ள கனவுகள் கண்டால் அதில் உள்ள அர்த்ததைப் போன்றே வாழ்கையில் நடக்கும் என்று கூறி உங்களை அச்சுறுத்தவும் இந்த கட்டுரையை நான் எழுதவில்லை.

பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?

வாயுநிலையில் உள்ள தாவர ஊக்கியான எத்திலீன் பழங்களை பழுக்கச்செய்கிறது; பூக்களை உதிரச்செய்கிறது. பழங்கள் மற்றும் பூக்களின் வாழும்காலத்தை விரைவுபடுத்தும் இந்த எத்திலீன் வாயு தாவரசெல்களில் அதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.


தாவரங்களின் வாழ்க்கைப்பயணம் முழுவதும் எத்திலீன் வாயு உடன்செல்கிறது. தாவரநாற்றுகளின் ஒளிநாட்டம், புவிநாட்டம், வேர்நாட்டம் பண்புகளுக்கு எத்திலீன் காரணமாக இருக்கிறது.


 விதை முளைத்தலைத் தூண்டுகிறது; தடைகளைத்தாண்டி தாவரத்தை வளரச்செய்கிறது; வேர்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது; குறிப்பாக வேர்த்தூவிகளை வளரச்செய்கிறது; நைட்ரஜனை வேர்முண்டுகளில் நிலைப்படுத்தும் செயல்களில் துணைநிற்கிறது.


ஒரு பழக்கூடையில் ஒர் அழுகிய பழத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயு அருகில் உள்ள பழங்கள் அழுகுவதை விரைவுபடுத்துகிறது. இதனால்தான் பழங்களையும் பூக்களையும் விற்பவர்கள் அன்றாடம் தரம்பிரித்து அழுகிப்போனவற்றை அகற்றிவிடுகின்றனர்.


அதேசமயம் நோய்க்கிருமிகளையும் பாதகமான சுற்றுச்சூழலையும் தாங்கிநிற்கும் வலிமையையும் இந்த எத்திலீன் வாயுதான் தாவரத்திற்கு அளிக்கிறது. அதிகப்படியான எத்திலீன் உற்பத்தி விளைபொருட்களில் நாசத்தை ஏற்படுத்துவதால் எத்திலீன் உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.


தாவரங்களில் காணப்படும் EIN2 என்ற புரதம் எத்திலீனின் முயற்சிகளை முறியடிக்கவல்லது என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. அழுகுதல் மற்றும் உதிர்தல் காரணமாக ஏற்படும் பயிர் இழப்பைக்குறைப்பதற்கு இந்த ஆய்வுகள் துணைசெய்கின்றன.
 
back to top