.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 10, 2013

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
 


அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.


அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.


ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.


ஒருநாள்...


அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.


தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.


அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.


நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.


ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
 


உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
 


1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
 


2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
 


3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 
 

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் அனி திரும்ப வரமாடடேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????

ஆசிரியரும் நானும்!


  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியாமலில்லை.   தன் ஆசிரியரை போலவே தானும் ஆசிரியன் ஆகவேண்டும் என்று  ஈர்க்கப்பட்டு தாங்களும் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து செம்மையாக பணியாற்றிவரும் மாணவர்கள் இப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


    ஆனாலும்  நான் என்றுமே ஒரு ஆசிரியனாக ஆகவேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் அண்ணன் என்னை ஆசிரியருக்கான படிப்பு படி, நீ விரைவில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்  என்று என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தியும்  நான் ஆசிரியராகிவிடக் கூடாது  என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.  இவ்வளவிற்கும்,   மற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதிலும் அவர்களின் வினாவிற்கு விடை அளிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.  இப்படி கற்பித்தலில் ஆர்வம் இருந்தும் ஆசிரியர் பணி ஏன் என்னை ஈர்க்கவில்லை?.  இவை எல்லாவற்றிற்கும்  ஆசிரியர்களில் மேல் எனக்கிருந்த வெறுப்புதான் காரணம். என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் சரி, கல்லூரி வாழ்க்கையிலும் சரி ஒரு உண்மையான ஆசிரியருக்கான குணங்களைக் கொண்ட ஆசிரியர் ஒருவரைக்கூட நான் சந்திக்கவே   இல்லை என்பதுதான்  இந்த சொல்லொண்ணா வெறுப்பிற்கான காரணம்.


     என் பள்ளி நாட்களில் ஆசிரியர் என்றாலே அவர் கையில் வைத்திருக்கும்  பிரம்பும் அவர் கொடுக்கும் அடிகளும் தான் என் நினைவிற்கு வரும்.  பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையாக எனக்கு காட்சியளித்தது. பள்ளிக்கூடம் போகக்கூடாது  என்பதற்காக நான் சுடுகாட்டில் பதுங்கிக்கொண்ட அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.  சுடுகாட்டைவிட பள்ளிக்கூடம் எனக்கு அதிக பயத்தை அளித்தது.  ஏன் இப்படி? இவை எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்தும் அவலம்  என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த கட்டுரையை நான் எழுதுவதன்   நோக்கம் ஆசிரியர்களை குறைக்கூறுவதற்க்கன்று. மாறாக, ஆசிரியர்களிடம் என்னை போன்ற மாணவர்கள் எப்பண்புகளை எதிர்பார்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தத்தான்.


     ஒரு நல்ல ஆசிரியருக்கு கையில் பிரம்பு தேவையே இல்லை.  ஒரு மாணவனை அடிப்பதன் மூலம் அவனை படிக்க வைத்துவிடமுடியும் என்று நினைப்பது அறிவீனம்.  ஒரு மாணவனை அடிப்பதால் அவனுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத சில ஆசிரியர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். தன் இசையாலும், பாட்டாலும், சிரிப்பாலும், விளையாட்டாலும், ஆர்விமிக்க தகவல்களாலும் மாணவர்களை கவரத்தெரியாத ஆசிரியர்களே பிரம்பின் உதவியை நாடுகிறார்கள்.  மாணவரைக்கவரும்  இவ்வுத்திகளை  தெரியாதவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது அபத்தம்.


     ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடம்  மாணவனுக்கு   புரியாமல் போனால் அது    மாணவனின் குறையில்லை.  மாறாக, அது ஆசிரியரின் குறை. எந்த மாணவனுக்கு எந்த முறையில் விளக்கினால் அவனுக்கு  விளங்கும் என்பதை கண்டறிந்து அம்முறையில் கற்பிப்பதுதான்  கைதேர்ந்த ஆசிரியரின் கடமை. அதை விட்டுவிட்டு அடியாள் மாதிரி கம்பை கையில் எடுப்பது ஒரு சிறந்த ஆசிரியருக்கு அழகல்ல.


     ஒரு மாணவன் ஒழுக்கக் குறைவான செயல்களை செய்யும்போதும், பல முறை சொல்லியும் கேட்காமல் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும்போதும் கண்டித்து தண்டிக்கபட வேண்டியவனாகிறான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.  ஆயினும்,  "இம்மாணவன்  நான்  சொல்லிக்கொடுப்பதை விளங்கிக்கொள்வதே இல்லை",  "இவன் குறைவான மதிப்பெண் வாங்குகிறான்", "இவன் படிப்பில் மந்தம்"  என்ற இதுபோன்ற சில காரணங்களுக்காக மாணவர்கள் அடிக்கப்படுவதை  என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  இக்காரணங்களை நானாக கண்டுபிடித்து எழுதவில்லை. இவை எல்லாமும்  என் பள்ளி வாழ்க்கையில் நான் கண்ணால் கண்டதும் காதால் கேட்டவையும் தான் .


     ஒரு நல்ல ஆசிரியரானவர்  மாணவரோடு  மாணவராக சேர்ந்து  தானும் ஒரு மாணவனாகவே மாறி அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.  மாணவர்களுக்கு அவர் ஒரு முன் மாதிரியாக நடந்து மாணவர்களையும் அவ்வழியில் நடக்க அறிவுரை வழங்குகிறார். பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமல்லாமல் வாழ்கைக்குவேண்டிய நெறிகளையும்  வேறு சில இன்றியமையாத செய்திகளையும்   சேகரித்து மாணவர்களுக்கு போதிக்கிறார்.  மாணவர்களிடம் எப்போதும் அன்பாகவே நடக்கிறார். இதை ஆசிரியர்கள் கவனிப்பார்களா?

தனிமனிதனும் சமுதாயமும்!



இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது!


சிறைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான். எதை நோக்கி ? பணம் , புகழ், அதிகாரம், அந்தஸ்து இப்படி பட்டியல் நீள்கிறதே அதை நோக்கி.


எவரும் தம்முடைய வாழ்க்கையை தாம் தீர்மானிப்பதாக தெரியவில்லை. அதிலும் இந்தியா கலாச்சாரம் மிக்க நாடு என்ற பெருமை கொண்டுள்ளது. சமுதாயம் கலாச்சாரம, பண்பாடு என்று பழம் பெருமை பேசியே தனிமனித சுதந்திரத்தை காலங்காலமாய் விழுங்கி வருகிறது.


புதியதாய் மணம் முடித்துக் கொண்ட இளம் தம்பதியினர் சந்தோஷமாய் இருக்கின்றனர். சுற்றி இருப்பவரோ ‘ என்னது ‘ இரண்டு வருடங்களாகியும் ஒரு புழு பூச்சி இல்லாமல் போயிற்றே ? என ஆரம்பித்து அவர்களை கேள்வி கேட்டே அழ வைத்துவிடுவர்.


கல்வித் துறையில் உள்ள சீர்கேட்டை பெரும்பாலோர் அறிவர். இருந்தும் பட்டம் பெற்ற இளைஞனைப் பார்த்து மக்கள் இன்னும் வேலைக்கு போகலையா? என்றே 90 வயது முதியவர் வரை கேட்டுக்கேட்டே தனிமனிதனை அழித்துவிடுகின்றனர்.


தந்தை சொல்கிறார் ” நாள் சொல்கிற படிப்பே படி. நாள் முழுவதும் பணம் சம்பாதிக்கலாம். வாழ்க்கை என்றால் பணம் தான். மற்ற விஷயங்கள் பணம் வந்துவிட்டால் தாமாக வந்துவிடும். ” மகன் தனக்கு விருப்பமானதை படிக்க முடிவதில்லை. நாங்கள் சொல்கிற பெண்ணை கல்யாணம் கட்டிக்கொள். இல்லையேல் என்னை பிணமாகத்தான் பார்ப்பாய் . இது அன்னையின் வாக்கு.


சொத்தில் சல்லிக் காசும் தரமாட்டோம். இது அப்பா. இது எனக்கு பிடிக்காத சங்கீதம். இதை நீ எப்போதும் கேட்கக் கூடாது – இது கணவன்.


நீங்கள் பொதுச் சேவையில் இனி ஈடுபட்டால் நான் என் அம்மா வீட்டுக்கு போய்விடுவேன் – இது மனைவி


நாம் முதலாளியாக இருந்து கொண்டு இன்று நறுக்கென்று நாலு வார்த்தை திட்டிப் பேசினால்தான் நாளை அவன் நம்மை மதிப்பான். பயம் வரும், – இது முதலாளியின் மனம்.


குறைவான வருமானம் இருந்தும் கலர் டி.வி. வாங்க திட்டமிட்டு தவனை முறையில் வாங்கி சமுதாய அந்தஸ்து வேண்டுமாம்.


கடன் வாங்கியாவது ஆடம்பர திருமணம் நம்மலையும் நாலு பேர் மதிக்க வேண்டுமாம்.


நன்கு தெரிந்த பையனுக்கு தம் பெண்ணைத் தர விரும்பியும் முடியவில்லை. ஜாதகம் பொருந்தவில்லையாம்.


ஆம் இன்றைய நிலையில் சமுதாயம் ( மற்றவர்கள் ) தனி மனிதனை நெருக்குகின்றன. உண்மையில் நாம் நாமாக வளரவில்லை. வாழவில்லை. பிறர் தீர்மானிப்பதை நாம் செய்து வருகிறோம். பெற்றோர் சொல்வதை குழந்தைகள் பின்பற்றுவது மாதிரியே வயது வந்த பின்னும் பிறருடைய விருப்பங்களுக்கே வாழ்கிறோம். எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு பகவான் ஓஷோ சொல்கிறார். உங்களுடைய வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க விட்டு விடாதிர்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே சொந்தம்.


நான் லிங்கனைப் போன்றோ, நெப்போலியனைப் போன்றோ ஆவதல்ல என்னுடைய விருப்பம் என்னுடைய விருப்பம் என்னுடைய பலம் எவ்வளவு செயலாக்கப்படுகிறது பலவீனம் எப்படி சரிகட்டப்படுகிறது என்பதில்தான் என்னுடைய வாழ்க்கை உள்ளது.


டாக்டர் மு. வரதராசனார் சொல்கிறார் ” இந்த சமுதாயத்துக்கு பயந்தவன் தனக்கும் சரி, தன்னைச் சுற்றி இருப்போர்க்கும் சரி ஒரு நாளும் நன்மையானதைச் செய்ய மாட்டான்”.


செம்மறியாடுகள் போன பாதையிலேயே போய் மாயட்டும். சிந்தனை மிக்க இளஞ்சிங்கங்களாகிய நாம் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இருக்கும் சில மாணிக்கங்களை மட்டும் பொறுக்கிக் கொண்டு எஞ்சியவற்றை கரியாக்கி விடுவோம்.


என்னுடைய சந்தோஷத்தில் அடுத்தவரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது மட்டும் சமுதாயம் பேசட்டும். அந்த மொழியை என் காதுகள் பணிவோடு கேட்கும். அன்போடு அதனை பரிசீலனை செய்வேன். சமுதாயத்தின் குரல் சரியென்றால் அந்த நிமிடமே நான் என்னை மாற்றிக் கொள்வேன். என்றெண்ணி எந்நாளும் இன்பமாய் வாழ்வோம்.
 
back to top