.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 14, 2013

ஜாதியில் என்ன இருக்கு?



"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."என்ற பாரதியின் பாடலை பள்ளியில் பாடமாக படிக்க வேண்டுமென்றால் கூட முதலில் நாம் என்ன ஜாதி? என்ற விபரம் சொல்லிய பிறகு தான் அந்த பள்ளியில் நம்மை சேர்த்துக் கொள்வார்கள்.


அந்த அளவுக்கு இன்றைக்கும் நாட்டில் ஜாதி என்பது தவிர்க்க முடியாத கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கடந்த ஒருமாத காலமாக இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு செய்து வருகிறது.இந்தக் கணக்கெடுப்பில் முளைத்திருக்கும் பிரச்சனை தான் "ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு."


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட போது 1936 - ஆம் ஆண்டு தான் கடைசியாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதன் பிறகு நம் நாட்டில் ஜாதி வாரியான கணக்கெடுப்பே நடைபெறவில்லை.


அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக மக்கள் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே அவசியம் தான்.


ஆனால் அதேநேரம் ஜாதிகள் மூலமாகத்தான் ஒருவர் தாழ்ந்தவர், ஒருவர் உயர்ந்தவர் என்று தரம் பிரித்து பார்க்க முடியும் என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமான செயல் மட்டுமில்லாது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கூட...


ஒரு குறிப்பிட்ட சாதியில் படித்தவர்கள், டாக்டர்கள், அரசுஊழியர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையை அறியாமல், அந்த சாதியினர் பின்தங்கியுள்ளனரா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது என்ற வாதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


தங்களை சார்ந்திருக்கும் மக்கள் எல்லோருடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால் அரசின் எண்ணம் அனைத்து ஜாதி மக்களின் வாழ்க்கை தரத்தையும் கருத்தில் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும்.


ஆனால் ஜாதி வாரியான கணக்கெடுப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை கவனிக்காமல் விட்டுவிடுவதற்கும் இந்த கணக்கெடுப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். இதுவே பிற்காலத்தில் ஜாதிவாரியான மோதலுக்கும் வழிவகுத்து விடும்.


நண்பர் ஒருவர் உங்களிடம் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று உங்களிடம் "நீ எந்த ஜாதி?" என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போது உங்கள் நண்பரைப் பற்றி உங்கள் மனதில் எழும் எண்ணம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.


"இவன்..ஜாதி வெறி பிடிச்சவனா இருப்பான் போலருக்கே..?" என்ற மரியாதை குறைந்த எண்ணமாகத்தான் அது இருக்கும்.அதன் பிறகு உங்கள் முகத்தில் எழும் எரிச்சல் கலந்த முகபாவங்களும்,நீங்கள் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை சொல்லி முடித்த பிறகு அவர் முகத்தை நீங்கள் பார்க்கையில் உங்கள் மனதில் எழும் எண்ணங்களும், அல்லது அவர் உங்கள் முகத்தைப் பார்க்கையில் உங்களைப் பற்றி அவர் மனதுக்குள் எழும் எண்ணங்களும் அதுவரை கலகலப்பாக போய்க்கொண்டிருந்த உரையாடலை கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டு வருவதாக நீங்கள் உணர்வீர்கள்.அல்லது உங்கள் நண்பர் உணர்வார்.


லல்லுபிரசாத்யாதவ்,முலாயம்சிங்யாதவ்,டாக்டர்.ராமதாஸ் என்று பல அரசியல் தலைவர்கள் இந்த ஜாதி வாரியான கணக்கெடுப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்றும் அவர்கள் அபயக்குரல்களையும் எழுப்பியுள்ளனர்.


ஒரு சமுதாயத்தில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை என்ன? என்பது பற்றி எந்தவொரு உண்மையான தகவல்களும் இல்லாமல் நாட்டு மக்களுக்கான சமூக நீதியை எப்படி நிலைநாட்ட முடியும்? என்றெல்லாம் ஜாதி வாரியான கணக்கெடுப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் கேட்கலாம்.


ஆனால் அதில் அவர்கள் ஜாதிவாரியான ஓட்டுகளை வாங்கி தொடர்ந்து அரசியல் நடத்துவதற்கான சுயநலம் மட்டுமே இருக்குமன்றி கண்டிப்பாக அதில் பொதுநலம் இருக்காது.அதனால் தான் அவர்கள் இப்படி கூச்சலிடுகிறார்கள்.


அதேநேரம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஒரு பொருட்டாக கொள்ளாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்,சமூக,பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களையும் கணக்கில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.


தற்போதைய சமூக வாழ்க்கையில் உள்ள மக்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதத்தினர் ஜாதியையும்,மதத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.மேலும் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் ஜாதி ஒரு பொருட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதை இதற்கு முன்பு நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?




தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.


உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.


சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.


எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.


சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.


கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.


இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

கிராமங்களை நோக்கித் தேடுங்கள்..?



கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத்லெட்டிக் வீரர்கள் நிறையக் கிடைப்பார்கள்.


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு கொண்ட விஞ்ஞானிகள் நிறையக் கிடைப்பார்கள்.


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றும், அறிவியலில் சாதிக்கும் குழந்தைகள் நிறையக் கிடைப்பார்கள்.


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். சிலம்பாட்டம் முதல் கரகாட்டம் வரையிலான தமிழர் கலைகள் இரத்தத்திலேயே ஊறிப்போன கலைஞர்கள் நிறையக் கிடைப்பார்கள்.


என்று இந்த நாடு கிராமங்களை நோக்கி தேட ஆரம்பிக்கிறதோ..

என்று இந்த நாடு கிராமங்களிலும் எல்லாம் இருக்கிறது என்பதை நம்புகிறதோ..

என்று இந்த நாடு திறமையுள்ள எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ..


அன்றே அறிவியல், கலை, விளையாட்டு என அத்தனை துறைகளிலும் இதுவரை இல்லாத மாபெரும் வளர்ச்சியைக் காண முடியும்.

அழுவதுக் கூடச் சுகம் தான் - கவிதை!




அழுவதுக் கூடச் சுகம் தான்
 அழவைத்தவரே அருகில் இருந்து
 சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
 காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
 பிருந்திருந்த காலம் அன்பை
 இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
 சட்டென முடிக்கு கொண்டு வரும்
 சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
 முகத்தில் புன்னகையை மட்டும்
 வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
 அக்கறையையும் மட்டும்
 வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
 விவாதத்தை விட உயர்ந்தது உறவு
 என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
 உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
 உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
 முயற்சியின் தீவிரத்தை இன்னும்
 அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
 தவறாமல் தவறிலிருந்து பாடம்
 கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
 எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
 தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...
 
back to top