.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 15, 2013

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’




 ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.


ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.


இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.


`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.


அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர். விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.


அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.


துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.

பெண்கள் பற்றி சில தகவல்கள்....




1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி

18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி......

எது பெண்ணியம் - மகளுக்கும் சகோதரிகளுக்கும்!



ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா?

கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?

ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை சிறிதாக்கிக் கொள்வது, மேற்கத்திய நாகரிகம் செல்லும் திக்கை நோக்கியே பயணிப்பது, இதுதான் பெண்ணியம் என சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை சிறிது யோசியுங்கள். அவர்கள் இம்முறையில் கீழ்த்தரமானதை செய்ததாலா பெருமை பெற்றனர்? மனித குலத்தை உயர்த்தும் செயலிற்சிறந்த ஆண்களோடு போட்டியிட்டு அவர்களைப் போல அல்லது அதை விடவும் சிறப்பாக செயலாற்றிக் காண்பித்ததாலேயே பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்.

பழங்காலத்தைப் போல் இன்று பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக ஆண்கள் இல்லை என்னுமளவுக்கு ஆண்கள் மாறியுள்ளனர். அது மட்டுமின்றி பெண் வளர்ச்சிக்காகவும் விடுதலைக்காகவும் சமீப கால இந்தியாவில் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் இராஜா ராம் மோகன்ராய், தந்தை பெரியார், திரு.வி.க., பாரதி, பாரதிதாசன் போன்ற ஆண்கள்தான்.

முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும். ஓட்டுரிமை மறுக்கப்பட்ட காலம் போய் இன்று 33 விழுக்காடு இட ஓதுக்கீடு இலக்கை பெற முயற்சித்துப் பெருங்கள். நாளை இது 50 விழுக்காடு நோக்கிய பயணமாயிருக்கட்டும்.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். பெண்களால் இயலாது எனப்பட்ட காவல் துறை, இராணுவம் ஏன் விண்வெளி வரை பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற பெரும் பழியை வரதட்சனை, மருமகள் கொடுமை போன்றவற்றால் இன்னும் பெண்கள் சுமக்கிறார்கள். இவற்றையெல்லாம் உடைத்து வெளி வருவதில்தான் பெண் முழு விடுதலை நோக்கி வருவாள்.

மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம், நினைத்ததை எல்லாம் செய்யும் கட்டுப்பாடற்ற சுதந்திரம், முடிவெடுக்கும் அதிகாரம் இவை கிடைத்து விடுதல்தான் பெண் விடுதலை என சில பெண்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இல்லை. பெண் விடுதலை என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதே ஆகும்.

தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல், ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள். இவற்றை விட்டு விலகுவது காலப்போக்கில் பண்பாட்டுச் சீரழிவை விதைத்து, உயரிய கலாச்சாரத்தைக் கெடுத்து, பெண்களுக்கே எதிரான விளைவுகளைத்தான் தரும்.

ஆண்களோடு உடல் வலுவில் பெண்கள் போட்டியிட முடியாது போலவே பெண்ணின் இத்தகு தனித்தன்மைகளில் ஆண்களும் போட்டியிடவே முடியாது. இதுதான் இயற்கை நியதி.

பெண்ணிணமற்ற ஆணிணமும், ஆணிணமற்ற பெண்ணிணமும் உலகில் நிலைக்குமா? சேர்ந்திருந்தால்தானே நிலைக்கும்.

என் மகளே! சகோதரிகளே! எது உண்மையான விடுதலையோ அதை நோக்கிய பயணத்தை செலுத்துங்கள். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் சில நியதிகளை கடைபிடித்துக் கொண்டே உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வெற்றி பெருங்கள். அப்போதுதான் உங்களோடு இந்த சமுதாயமும் உயரும்.

ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்! கட்டுரை!




ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும்போது ரஜினிதான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்களும் மெல்ல மெல்ல கூடுதலாகப் பல வர்ணங்களை இந்தப் புனைவில் சேர்த்துவிட்டுச் செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்துதான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பரோ பகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்மையானவராகத் தன்னைக் குறித்து ஒரு சித்திரத்தை உருவாக்கினார்.


ஆனால் அவர் ஒரு அரசியல் இயக்கத்தின் பகுதியாகவும் இருந்தார். திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை என்றால் எம்.ஜி.ஆர். இவ்வளவு காவியத் தன்மை பெற்ற நாயகனாகியிருக்க மாட்டார். ஆனாலும் ரஜினியின் தொன்மம் முற்றிலும் வேறானது. அவரிடம் உள்ள விளையாட்டுத்தனம் நாம் மலையாளத்தில் மோகன்லாலின் பாத்திரங்களிலும் காண்கிறோம். ஆனால் ரஜினியிடம் கூடுதலாக கள்ளங் கபடமின்மையும், அப்பாவித்தனமும் இருக்கும். தொண் ணூறுகளில் இருந்து ரஜினியின் படங்களில் ஒரு தத்துவார்த்த சரடைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வந்துள்ளதைக் காணலாம். சமகாலத்தில் அவரைப் போல் வேறெந்த நாயகனுக்கும் இவ்வளவு தொடர்ச்சியுடன் ஒரு அடிப்படை தொன்மம் பல கதைக ளிலும் மாறாமல் மீள மீள பேசப்பட்டு வந்ததில்லை. ரஜினிக்குப் பிறகு வந்த பல நடிகர்களும் அவரைப் போல் ஒரு தொன்மத்தை உருவாக்க முயன்றனர். அவருடைய ஸ்டைலைப் பல்வேறு அளவுகளில் வரித்துக் கொள்ளப் பார்த்தனர். எதுவுமே வெற்றி பெறவில்லை.


ரஜினியின் தொன்மம் வெற்றி பெற்றதற்கும் நம் சமூக மனதுக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. நாம் பொதுவாக எப்படி யோசிக்கிறோம் என்பதை இத்தொன் மத்தை அறிவதன் வழி உணரலாம். தொன்மப்படி ரஜினி முதலில் ஒரு அதிமனிதன். ஆனால் இதன் இன்னொரு அடுக்கில் அவர் பிறரை விட மிக பலவீனமானவராகவும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படவும், துன்புறுத்தப்படவும், அழிக்கப்படவும் தன்னை அனுமதிக்கிறவராகவும் வருகிறார். இரண்டு அடுக்குகளும் படம் முழுக்க சேர்ந்தே அவர் பாத்திரத்தின் பண்புகளாக இருக்குகின்றன. தொடர்ந்து தோற்கடிக்கப்படும்போது தான் அவர் வெற்றி அடையும் போது கூடுதல் தாக்கம் இருக்கும் என நீங்கள் வாதிடலாம். கைத்தட்டும் ஆரவாரமும் பொங்கும் என கூறலாம். ஆனால் க்ளைமேக்ஸில் ரஜினி ஒரு பிரம்மாண்டமான எதிரியை வீழ்த்திய பின் அல்லது மாய எதார்த்த பழங்கதைகளில் வருவது போன்ற தடைகளைக் கடந்த பின்னரும் அவர் முழுமையான வெற்றி பெறுவதில்லை. தொடர்ந்து படம் முழுக்க சிறுகச் சிறுக அவர் அடைந்த தோல்விகளும், இழப்புகளும், பெற்ற காயங்களும் இந்தக் கடைசி வெற்றியை சமனப்படுத்துவதில்லை.


நுணுக்கமாகக் கவனித்தால் அவரது பெரும் வெற்றி பெற்ற படங்களின் முடிவில் அவர் ஒரு கசப்புடனும், வெறுப்புடனும்தான் வெற்றியைப் பார்த்துப் புன்னகைப்பார் அல்லது குடும்பம், நட்பு போன்ற ஏதாவது உறவுகளின் நீரோட்டத்தில் ஒரு குருதி படிந்த வாளைக் கழுவுவது போல் தன்னைக் கரைத்துக் கொள்வார். கமல், விஜய், விக்ரம், விஜயகாந்த், சரத்குமார் என யாரிடமும் இந்தக் கசப்பான, கிட்டத்தட்ட தோல்விக்கு நிகரான வெற்றியைக் காண முடியாது. மேலும் ரஜினியின் படங்களில் வில்லன் விழும்போது அது ரஜினியின் சாகசமாக, சாமர்த்தியமாக நாம் காண்பதில்லை. தீமையின் அழிவாகவே தோன்றுகிறது. ஏனென்றால் தீமை ஒரு பிரம்மாண்ட மரத்தைப் போலத்தான் விழும். அப்போது அதன் அழிவுடன் சேர்த்துக் குருவிகளும், அதன் முட்டைகளும், சிறு சிறு உயிரினங்களும், மனிதர்களும்தான் சாகவேண்டும். மாபெரும் தீமைகள் முடிவுக்கு வரும் போது நன்மையையும் பெருமளவுக்குக் காவு வாங்கியிருக்கும். மகாபாரதப் போர் முடியும் போது வரும் கசப்பு இது எனக் கூறுவது மிகையாக இருக்கும் என்பதால் அதில் ஒரு கால்வாசி எனலாம். ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள நாயகத் தொன்மங்களிடையே உள்ள முக்கிய வித்தியாசம் இது.


நமக்கு ஏன் கமலை விட ரஜினியைப் பிடித்திருக்கிறது? ஏனென்றால் இந்திய சமூகத்தில் தினம் தினம் தோல்விகளையும் அவமானங்களையும் பல்வேறு நிலைகளில் சந்திக்கிறவர்கள் தாம் அதிகம். சராசரி இந்தியனை ஒரு மிதியடி எனலாம். தினம் தினம் அவனைக் குடும்பத்தில், அண்டை வீடுகளில், சொந்தங்களில், வேலையிடத்தில், சமூகத்தில் யாராவது மிதித்து தேய்த்தபடியே இருக்கிறார்கள். மிதிக்கப்பட்டு மிதிக்கப்பட்டு அவன் தன் தனித்தன்மையை சுரணையை கிட்டத்தட்ட இழந்து விட்டான். அவன் எதிர்ப்பது எப்படி என யோசிக்க மாட்டான். கசப்புகளையும், அவமதிப்புகளையும், பிரச்சினைகளையும் சாலையில் கிடக்கும் ஒரு நாயின் பிணத்தைப் போல், ஈ மொய்க்கும் ஒரு பைத்தியக்காரனின் உடலைப் போல், தேங்கி நிற்கும் சாக்கடை வெள்ளத்தைப் போல் கடந்து போவதெப்படி எனத் தான் யோசிப்பான். இந்தியனுக்கு வாழ்க்கை ஒரு சவால் அல்ல, பனிமூட்டம். அதன் வழி அதைக் கடந்து போவதுதான் அவன் உத்தேசம், விருப்பம், பாணி. கமல் வாழ்க்கையின் பிரச்சினைகளைக் கேள்வித்தாள் சவால்களாகப் பார்க்கும் ஒரு சமூகத் தட்டின் பிரதிநிதி. இந்த மேல்தட்டு நுண்ணுணர்வு என்றுமே இந்திய மனதுக்கு ஏற்பானது அல்ல.


ரஜினியின் தொன்மத்தில் உள்ள இன்னொரு முரண்பாடு குடும்பம். அவரது வெற்றிப்படங்களில் குடும்பத்தோடு தீவிரமாக ஒட்டுறவாடுபவராகத்தான் வருகிறார். எல்லா பெரிய பிரச்சினைகளும் குடும்பத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. ஆனால் குடும்ப உறவுகளின் அநிச்சயம், வஞ்சகம், மேலோட்டத் தன்மை ஆகியவை பற்றி சதா வருந்துகிறவராகவும் வருகிறார். வில்லனை விட ரஜினியை அதிகம் நோகடிப்பது, துன்புறுத்துவது, மார்க் ஆண்டனி பாணி கத்திகளை அவர்மீது சொருகுவது குடும்ப உறவுகளாகத்தான் இருக்கிறார்கள். வீட்டுக் கோபத்தை வெளியே காட்டுபவர் போலத் தான் ரஜினியும் ஏதோ ஒரு வில்லனை இறுதியில் துவைத்தெடுக்கிறார். இதுவும் நம் கதைதான். உலகத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் சதா கவலைப்படுகிறவர்கள் நாம். ஆனால் வாசற்படியைத் தாண்டிய எந்தப் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு தேடுவதோ அக்கறை காட்டுவதோயில்லை. இந்த முரண்பாடு நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது. இவ்வளவு அரசியல் கட்டுரைகள், வாதங்கள், டி.வி. விவாதங்கள், அலுவலக, டீக்கடை, இணைய அரட்டைகள், சினிமாவுக்கு அடுத்தபடியாய் நாம் அதிகம் ஈடுபடுவது அரசியல் அரட்டையில் தான்.


ஆனால் நம்மை விட படிப்பறிவும் முன் னேற்றமும் குறைந்த நாடுகளில் கூட அடிக்கடி சமூகப் போராட்டங்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தியர்கள் ஒரு பொதுப்பிரச் சினைக்காக துருக்கியர், வங்கதேசத்தினர் போல் போராடியதாய் வரலாறு இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் கூட சாமியார் என பொதுமக்களிடையே நம்பப்பட்ட ஒருவரால், சாதி அடுக்குநிலையை அசைக்க விரும்பாத ஒருவரால் பொது எதிரி ஒருவர் மீது எல்லா கோபங்களையும் குவித்து தான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வெளியே ஆயிரம் பேர் செத்தாலும் நாலு சுவர்களுக்குள் நாமும் குடும்பமும் நம் சாதியினரும் மட்டும் பத்திரமாக இருந்தால் போதும் என நினைப்பதே இந்திய மனநிலை. இந்திய என்பது தனிமனிதர்கள் வாழும் இடம் அல்ல. சிறுகச் சிறுக சிதறிய கோடி குடும்பங்கள் வாழும் இடம். இந்தக் குடும்பங்களை வேறு அரசியல் குடும்பங்கள் ஆட்சி புரிகின்றன. இந்தக் குடும்பங்கள் தம் அடுத்த நீட்சியான சாதியோடு மட்டும் தான் தம்மைப் பிணைத்துக் கொள்ளும், அடையாளப்படுத்தும். இந்தளவுக்குக் குடும்பப்பாங்கான இந்தியர்களின் கணிசமான துன்பங்களும் இயல்பாக குடும்பங்களில் இருந்து தான் வருகின்றன. பரஸ்பரம் காயப்படுத்துவது நம் ஜனநாயகமற்ற இறுக்கமான உறவுகளிடையே மிக மிக சகஜம். வேறு எந்த சமூகத்தையும் விட நாம் அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளுக்கு அதிகமான பாசத்தையும், மரியாதையும் அள்ளி வழங்குகிறோம். ஆனால் எந்த அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளிடம் பேசிப் பாருங்கள், - நம்மைப் பற்றிய ஆயிரம் புகார்களும், கோபங்களும் அவர்களிடம் இருக்கும். குடும்பத்தைக் கரையேற்ற நகரத்தில் தங்கி சொற்பமான வருமானத்தில் வாழ்ந்து காசு சேமிக்கிற எத்தனையோ பேரை அறிவேன்.


அது போன்றே பிள்ளைகளுக்காக எல்லா சுகங்களையும் தியாகம் செய்ய முனைகிற பெற்றோர்களும். சிறுவயதில் அம்மா என்னை டியூசனுக்கும் பல இடங்களுக்கும் தூக்கிச் சுமந்து போவாள். என் பெற்றோர்கள் தம் ஆயுளின் கால்வாசியை என்னைக் குறித்த கண்ணீரிலேயே கரைந்திருப்பார்கள். குறிப்பாக, தமிழர்களுக்கு இந்தக் குடும்ப செண்டிமெண்ட் மிக மிக அதிகம். ஆனால் எல்லா மிகையான அன்பும் ஆழத்தில் கசப்பைத்தான் சுரக்கும். அன்பை இவ்வளவு உக்கிரமாகக் கையாள்வது ஒரு கைப்பிடி இல்லாத கத்தியைக் கொண்டு வெட்டுவதைப் போன்றது. இதனால்தான் நம் வீடுகள் போர்க்களங்களைப் போல் இருக்கின்றன. கட்டில், சோபா, மேஜைகளிடையே சடலங்களை மறைத்தபடி வீட்டை அப்பழுக்கின்றி வைத்தபடி சகஜமாக வாழ்க்கையைத் தொடர்ந்தபடி இருப்போம். ஆனால் அணுக்கமாகச் சென்று விசாரித்தால் உற்ற உறவுகள் தம்மை மிக மோசமாகக் காயப்படுத்திய ஆயிரம் கதைகள் அவர்களிடம் இருக்கும். ஆனால் இதே உறவுகளை விட்டு விட்டும் நம்மால் வாழ முடியாது. ரஜினியின் படங்களில் மிக நெருக்கமான குடும்ப உறவுகள் இருக்கும். பிறகு ஒரு கட்டத்தில் சுயநலம், அகம்பாவம், புரிந்துணர்வு இல்லாமை காரணமாய் அவரைக் “கைவிடுவார்கள்,” துன்புறுத்துவார்கள். கொட்டுகிற மழையில் ரஜினி ரத்தம் வழிய வீட்டில் இருந்து துரத்தப்படுகிற காட்சி நம் சமூக பிரக்ஞையில் உறைந்து விட்ட ஒரு தனி தொன்மம் எனலாம். இதன் பிறகுதான் ரஜினி சமூகத்துக்குள் செல்கிறார். தீமையும் சூதும் மிகுந்த இடங்களுக்கு சென்று வெற்றிகரமாகச் செயல்பட்டு இறுதியில் பெற்ற அனைத்தையும் கைவிட்டு மீண்டும் குடும்பத்துக்குள் திரும்புகிறார். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம்.


ஒன்று, நாம் விரும்பும் மிகப்பெரிய வசதி “குடும்பத்துக்குள்ளே” இருந்து விடுவது. கருவறை போல் குடும்பம் மிகவும் பாதுகாப்பு என நம்புகிறோம். குடும்பத்துக்குள் இருப்பது சாதிக்குள் இருப்பதுதான். நம் முன்னோர்கள் “குடும்பத்தில்” இருந்து என்றுமே வெளியேறியவர்கள் இல்லை. ஒரு மாறாக, சமூக அடுக்கில் ஒரு மூலையில் இருந்து சின்னஞ்சிறு கற்கள் உடைத்துக் கொண்டிருந்தார்கள் - பிறகு பிறந்த மண்ணிலேயே சாவதை விரும்பினார்கள். இந்த சமூக இறுக்கம் ஒரு நிலைப்பையும் தந்தது என்கிறார் எரிக் புரோம். அதாவது சமூகத்தில் கொந்தளிப்பு குறைவாக இருந்தது. மலம் அள்ளுகிறவர் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றல்ல. ஆனால் படிநிலையை எதிர்ப்பது தவறு என்னும் எண்ணமும் வேறு வாய்ப்பு இல்லாமையும் அவர்களை மௌனமாக வைத்திருந்தது. இந்தப் போலி மௌனம் சுதந்திரம் கிடைத்த பின்னான இந்த அரைநூற்றாண்டில் பெருமளவு கலைந்துள்ளது. நிறைய எதிர்க்குரல்கள் அமைதியைக் கலைத்துள்ளது. பலதரப்பட்ட நிலைகளில் இருந்து மக்கள் படித்து முன்னேற சமூக அடுக்கு மீண்டும் மீண்டும் சீட்டுக்கட்டு போல் கலைத்து கலைத்து அடுக்கப்பட்டது. எல்லோருக்குள்ளும் பாதுகாப்பு பற்றிய அநிச்சயம் குறித்த பயமும் பதற்றமும் அதிகரித்துள்ளது.


மத்திய, மேல் சாதியினர் கொட்டுகிற மழையில் வழியும் ரத்தத்தோடு வீட்டை விட்டு வெளியேறத் துவங்கினர். பொருளாதார ஸ்திரமின்மை குடும்ப கலகங்களுக்கும் பந்தங்களிடையே துரோகங்களுக்கும் பிரதான தூண்டுகோல். குடும்பத்தையும் சொத்தையும் பிரித்து, ஊரை சொந்தங்களைப் பிரிந்து, பிரிக்க ஒன்றுமே இல்லாதவர்கள் ஊரிலுள்ள அந்தஸ்தை நகரங்களில் அடைய முடியாத துக்கத்துடன், பட்ட சான்றிதழுடன் பிழைப்புக்காக அலைவது இந்தக் காலகட்டத்தில் பரவலாக நடந்துள்ளது. “வீட்டை” விட்டு வெளியேறும் இந்த வலி நம் அனைவருக்குள்ளும் உள்ளது. நம்முடைய மிகப்பெரிய ஏக்கம் திரும்ப “வீட்டுக்கு” போவதுதான். இந்த நகரத்து அவசரத்தில் இரைச்சலில் அடையாளக் குழப்பத்தில் “நாம்” யாரென யாருக்கும் தெரியவில்லை எனும் வருத்தம் கண்ணில் விழுந்த தூசி போல் தொடர்ந்து உறுத்துகிறது. ரஜினி ஃபார்முலா என்பது ஒருவிதத்தில் தொடர்ந்து சொந்தபந்தங்களை இழப்பதும் மீட்பதும் அதன் மூலம் வீட்டுக்குத் திரும்புவதும் தான். அவர் படங்களில் உள்ள மிகையான குடும்ப சென்டிமெண்ட் நம்மை எரிச்சலடைய வைக்காததன் காரணம், உறவுகளின் கசப்பான எதிர்மறையான பக்கத்தையும் அது காட்டுவது தான். விசு பாணி குடும்ப விமர்சனத்துக்கும் இதற்கு மான வித்தியாசம், ரஜினியிடம் லட்சியமான நல்ல உறவுகளே இல்லை என்பது. எல்லாரும் நம்மை ஒரு கட்டத்தில் கைவிடுவது தான் எதார்த்தம் என அவர் படங்களில் ஒரு அழுத்தம் உள்ளது.



இன்னொரு பக்கம் ஒரு எதிர்குடும்ப நாயகனாகவும் இருக்கிறார். “வேலைக்காரன்”, “தளபதி”, “முத்து” போன்ற படங்களில் அம்மா அல்லது அப்பாவால் கைவிடப்பட்ட, ’அநாதையல்லாத அநாதையாக’ வருகிறார். கைவிடப்பட்ட குழந்தைகளிடம் ஒரு அவசர முதிர்ச்சியும் நீட்டிக்கப்பட்ட குழந்தைமையும் முரண் பாடாக சேர்ந்தே இருக்கும். “தளபதி”யில்” அம்மாவை முதன்முறை நேரில் சந்தித்துப் பேச முடியாது தேம்பும் இடத்திலும், “பாட்ஷா”வில் தன்னை வீட்டை விட்டுத் துரத்திய அப்பா வீட்டுக்கு வந்து பார்த்து திட்டும் போது தலையைக் குனிந்து எதிர்க்காமல் கேட்கும் அந்த அழகான காட்சியில் அந்த அநாதைத்தனமும், கைவிடப்பட்டவனின் தீராத ஏக்கமும் உள்ளது. குடும்பத்தால் கைவிடப்பட்ட குடும்பத்துக்காக ஏங்கும் எதிர்பிம்பம் எண்பதுகளில் இருந்தே ரஜினி கட்டுவித்த எதிர்சமூக நாயக பிம்பத்தோடு பொருந்திப் போகிறது.


வீட்டில் இருந்து வெளியேறுவதை நாம் ஒரு உலகப் பொதுவான தொன்மமாகவும் பார்க்கலாம் என்கிறார் உளவியலாளர் கார்ல் யுங். “துரத்தப்பட்ட இளவரசனின்” தொன்மம் பல சமூகங்களிலும் ஆதிகாலத்தில் இருந்த ஒன்று என்கிறார். ஒரு இளவரசன் தன் அரசியல் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு இன்னொரு ஊருக்குத் தப்பிச் செல்வான். அங்கு பல அபாயங்களைச் சந்தித்து முறியடித்து வாழ்வான். பிறகு வளர்ந்த இழந்த தன் சமூக இடத்தை மீட்பான். யுங் இந்த தொன்மம் கர்த்தருக்கும் கண்ணனுக்கும் பொதுவாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இதை ஒத்த வேறு பலநாட்டுத் தொன்மங்களையும் பட்டியலிடுகிறார். ரஜினியின் “வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்” தொன்மம், இந்த கண்ணனின் “துரத்தப்பட்ட இளவரசனின்” தொன்மத்தின் இன்னொரு வடிவம் தான். குசேலனின் கதையைத் தலைகீழாக எடுக்கப்பட்ட “அண்ணாமலை” இந்த விதத்தில் வெகுசுவாரஸ்யமான படம். 80 லட்சம் சொத்துக்கு மதிப்புள்ள அண்ணாமலை அத்தனையும் வஞ்சகத்தால் இழக்கிறான். ஆனால் அவன் பிரச்சினை பணமல்ல. நண்பனுக்கு இணையாக மாறுவது.


 இருசமூகத் தட்டுகளில் இருப்பவர்கள் நண்பர்களாக இருக்கும் சிக்கலைப் பற்றிய படம். இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் இது சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை பற்றின படமும்தான். அதாவது இடதுசாரிகள் பேசும் சமத்துவம் அல்ல. நம்மளவுக்கு நுணுக்கமான பல சமநிலையின்மைகள் கொண்ட இன்னொரு சமூகம் கிடையாது. எல்லா நிலையினரோடும் உறவாடும்போது பல நெருக்கடிகள் வருகின்றன. கண் முன்னே தினம் தினம் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கிறோம். பிரச்சினை இத்தனை ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில் இது எதுவுமே இல்லாதது போல் நம்மை விட உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்களிடம் உறவாடுவது என்பது. அடுத்தவருக்கு இணையாக உயர வேண்டும் என்பது நம் அனைவருக்குள்ளும் உள்ள மற்றொரு தீராத ஏக்கம். அலுவலகத்தில் அண்டை வீட்டில் இன்னொருவர் சட்டென்று நம்மை விட பொருளாதார நிலையில் உயர்ந்து விடும் போது நமக்கேற்படும் பதற்றம் ரஜினியைப் போல் ஆகாயத்தை நோக்கி சவால் விட தூண்டுகிறது. ஆனால் இன்றுள்ள போட்டியில் இன்னொருவருக்கு இணையாக உயர்வதற்கு அவரை நாம் அழிக்கவும் வேண்டி இருக்கிறது. அண்ணாமலையும் மெல்ல மெல்ல தன் நண்பனை அழிக்கிறான். இறுதியில் தன் முன்னேற்றத்தின் வெறுமையை உணர்கிறான்.


 இறுதியில் ரஜினி தொன்மத்தின் படி எல்லாவற்றையும் உதறி விட்டு மீண்டும் பால்காரன் ஆகிறார். உண்மையில் சமநிலை என்பது ஒரு கற்பிதம் தான். அண்ணாமலையால் தன் நண்பன் அசோக்குக்கு என்றுமே இணையாக முடியாது. இன்றைய சமூக நிலையில் யாராவது ஒருவர் விழ வேண்டும், இன்னொருவர் எழ வேண்டும். நகரமயமாக்கலில் உள்ள போட்டி என்பது தற்காலிகமான சமநிலைக்கான போட்டியும்தான். அதாவது நிறைய உருவக ரத்தம் சிந்தி ஏற்கனவே இருந்தவனை அழித்து விட்டு அவன் இடத்தை நாம் அடையும் போது தராசு ஒரு கணம் சீராகிறது. ஆனால் மீண்டும் சாயத் துவங்குகிறது. இன்னொருவன் நம் பதவிக்காகக் கால் பாதத்தை சுரண்டி தன் கூர் பற்களால் கடிக்க ஆரம்பிப்பான். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் மீதான ஏக்கம் கொண்டவர்கள் இன்றைய சமூக நகர்வில் உள்ள இந்த வன்முறையை, குரூரத்தை இப்படித்தான் பார்ப்பார்கள். சமூக மேல்நிலையாக்கம் (upward mobilization) குறித்த ஒரு ஆழமான கசப்பு நம் தமிழ் சமூகத்தில் இருக்கிறது. ரஜினியின் தொன்மம் இந்தக் கசப்பான மனதிடம்தான் பேசுகிறது. பழைய நிலையான சமூகம் இனி கிடைக்காது. அதேவேளை சமத்துவத்துக்கான வன்முறையும் வெறுப்பும் நமக்கு வேண்டாம். அதனால் அனைத்தையும் துறந்து விடுவோம் என்கிற தற்காலிகத் தீர்வை அளிக்கிறது. சமூக முன்னேற்றத்தில் மேலேயும் போக முடியாமல் கீழேயும் செல்ல விரும்பாமல் இடையில் எந்திர சக்கரத்தினிடையே மாட்டிக் கொண்ட நிலையில் நிறைய பேர் இருக்கிறோம். நமக்கிந்த தற்காலிக “பற்றற்று இருப்போம்” தீர்ப்பு பிடித்துப் போகிறது.


ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தியா சிதறி விடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழாமல் இருந்ததற்கு வேற்றுமையில் ஒற்றுமை எண்ணம் அல்ல காரணம். நம் பக்கத்தில் சுத்தமாய் பிடிக்காமல் இருவர் இருந்து சுத்தமாய் பிடிக்காத ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தால் கூட எளிதில் நம்மால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும். நம் நாடு கடந்த ஐநூறு வருடங்களில் பல பெரும் மாற்றங்களை, ஆக்கிரமிப்புகளை, கொந்தளிப்புகளை எளிதில் ஒன்றுமே நடக்காதது போல் கடந்து வந்தது இப்படித்தான். எதையும் செய்யாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று நடக்கும் என நம்பிக் கொண்டு இருக்கிறோம். உளவியல் ரீதியாக, உறவுகளைக் கையாள்வதைப் பொறுத்தவரையி லும், அக ஆரோக்கியத்துக்கும் இந்தப் பட்டும்படாத அணுகுமுறை மிக நல்லதுதான். எல்லா ஆசியர்களுக்கும் இந்த ஒட்டாமை கருதுகோளின் மீது ஆகர்சம் உள்ளது. புரூஸ்லீயின் படங்களுக்கும் ரஜினியின் தொன்மத்துக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை இந்த ஒட்டாமை தான். க்ளைமேக்ஸில் வில்லனைக் கொன்று விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அவனது கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தி விட்டு தனியான பாதையில் நடந்து செல்வார் (Return of the Dragon). ரஜினியின் பல படங்களில் வில்லன் ஏதோ திருஷ்டி பூசணிக்காய் போலத்தான் இருப்பான்.


ஒரு சடங்கு போல் ஈடுபாடில்லாமல் அவனை தூக்கிப் போட்டு உடைத்து விட்டுப் போவார். “சிவாஜி”, “பாட்ஷா” போன்ற படங்களை சொல்லலாம். “தளபதி”யில் க்ளைமேக்ஸில் ரஜினி அவ்வளவு ஆவேசமாக வில்லனை அடித்துக் கொல்லும் போது அவன் ஏற்கனவே தன் நண்பனை இழந்து வில்லனிடம் தோற்றுப் போயிருக்கிறான். அது “ஆரண்யகாண்டத்தில்” பிணத்தை நோக்கி “நீ மட்டும் உயிரோட  இருந்திருந்தால் உன்னைக் கொன்னிருப்பேன்” என்று கூறுவது போலத் தான். வில்லனை ஒரு பொருட்டாகவே கருதாமல் “கடந்து” செல்வதைப் பின்னர் மிஷ்கினும் தன் “அஞ்சாதே” , “முகமூடி”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியிலும்” சித்தரித்தார். “அஞ்சாதே”வில் சுவாரஸ்யமாக பிரசன்னா கொல்லப்படும் போது தன் நின்று போன கைக்கடிகாரத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொள்வான். அவனை ஹீரோ கொல்லவில்லை. அவன் காலம் நின்று விட்டது, கூட அவனும் நின்று விட்டான். “முகமூடி”யிலும் வில்லன் தன் சாவை இதே கனிவுடன்தான் ஏற்கிறான். கதம் ததம்.


இதே போன்றதுதான் பெண்கள் மீதான கடும் வெறுப்பு. ரஜினியின் படங்களில் தான் நாயகி ஒரு கட்டத்துக்கு மேல் கதையில் பயணிக்க மாட்டாள். அல்லது அவள் ரஜினியை தன் அப்பாவித்தனத்தால் காட்டிக் கொடுப்பாள் (”சிவாஜி”) அல்லது அவனைப் புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் (”பாபா”). கல்லூரியில் படிக்கையில் “கதம் ததம்” என்கிற வசனம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்கள் மீதான வெறுப்பும் கோபமும் இன்று பல படங்களில் வெளிப்படுகிறது. இது பெண் மீதான பயத்தில் இருந்து வருவது தான். ஜெயலலிதாவிடம் மோதல் ஏற்பட்ட பின் பெண்களைப் பழிக்கும் வசனங்களும் பாத்திர, கதை அமைப்புகளும் ரஜினி படங்களில் வந்ததைப் பார்த்தோம். ஆனால் அதற்கு முன்பிருந்தே பெண்களுக்கும் சமூக மாற்றத்துக்கும் எதிரான நிலப்பிரபுத்துவ கருத்துக்கள் தான் ரஜினி தொன்மத்தின் வேராக இருந்து உள்ளன. பெண்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் எனும், ஆண்களால் மட்டும் நிரம்பிய வைதீக மரபின் தாக்கம் அவரது ஆரம்ப படங்களில் இருந்தே உள்ளது. பெண்களின் முன்னேற்றம், அவர்கள் முன்பை விட அதிக வன்முறையுடன் ஆண்களிடம் இன்று நடந்து கொள்வதும், வீட்டுக்குள்ளும் வெளியேயும் நம் முதுகில் ஒரு துப்பாக்கியை சதா அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதும் சமூக மாற்றத்தின் அசலான பிரதிபலிப்பு எனலாம். ரஜினியை நமக்குப் பிடிப்பதற்கு இன்னொரு காரணம், இந்த சமூக மாற்றம் நமக்குப் பிடிக்கவில்லை என்பதும்தான்.
 
back to top