.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 17, 2013

வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்!




இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது.


இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப் பயன்படுத்தி கண்ணாடியின் மேல் விழும் குப்பைகள், பூச்சிகள், மண் மற்றும் நீர் முதலியவற்றை சுத்தம் செய்யமுடியும். மேலும்,வைப்பர்களை நீக்குவதன் மூலம் காரை ஓட்டுபவர்களுக்கு வெளிப்புறப்பார்வை தெளிவாகக் கிடைக்கும்.


இதற்கான மோட்டார்களை நீக்குவதன் மூலம் எரிபொருள் சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்தில் இந்த வைப்பர்களின் தகடுகள் இறுகி செயல்படாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளும் இந்தப் புதிய முறையில் தோன்றாது என்று மக்லரென் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அதிர்வெண் அலைகள் முறையே பல் மருத்துவத்திலும், கருவிலுள்ள சிசுக்களைக் கண்டறியும் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. மக்லரென் நிறுவனத் தயாரிப்பு கார்களில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வரும் 2015க்குப் பிறகு அறிமுகப் படுத்தப்படும். அவற்றின் விலை 1,70,000 பவுண்டுகளில் இருந்து 8,70,000 பவுண்டுகள் வரை இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசை.....?



கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.



நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..



“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.



ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.



மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை இவ்வாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.



“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.



நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது.

    * நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்.
    * மெய்யாகவே விரும்ப வேண்டும்.
    * ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும்.
    * உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்.
    * மேலும், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்.

அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.



“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”

ஆஸ்கார் பூனை...



மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.

”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.

பிடிவாதம்.....?



எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது ‘பிடிவாத’ குணத்தால்தான் நிகழ்கிறது. காலம், சூழ்நிலை, தன்நிலை, பிறர்நிலை, அறிவு சார்ந்த ஆய்வு, மாற்றத்தைப் புரிந்துகொள்ளல், புரிந்ததை ஏற்றுக் கொள்ளல் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் தோல்வியடைகிறார்கள். உலகச் சர்வாதிகாரிகள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன், சதாம் உசேன் போன்றவர்களை உதாரணங்களாகக் கூறலாம்.


ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் வென்ற ஹிட்லர், பிரிட்டனை ‘கோழிக்குஞ்சு’ என்று கூறிவிட்டு சோவியத் யூனியனை (ரஷ்யா) பிடித்தால் தான் என் ஆசை தீறும் என்ற ‘பிடிவாத’ குணத்தால் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தான். கால நிலைகளின் மாறுதல் அறியாமையாலும், அப்போதைய தன் படையின் பலவீனத்தாலும் ‘அவனது சவம்’ அங்கேயே புதைக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவனாக ஆட்சி செய்த ஹிட்லர் தனது ‘பிடிவாதத்தால்’ இறுதியில் தன்னையே இழந்தார்.


“தான் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன், சிறதும் விட்டுக் கொடுக்காமல், எந்தத் துன்பம் வந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் போராடுவது பிடிவாதம் ஆகாது”.


“அதே சமயத்தில் எது எப்படி இருந்தாலும், எனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன். அந்த நிலைப்பாடு தவறு என்று தெரிந்தாலும் மாற மாட்டேன் என்று இருப்பதுதான் பிடிவாதம்”.



நாம் பிறர் போற்றத்தக்க அல்லது மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குணம் உடையவர்களைப் பற்றி நம்மூர் மக்கள் கூறுவது:


    * காட்டான். ஒரு விஷயமும் தெரியாது.

    * தான் பிடித்த பிடியிலேயே இருப்பான், புரிய வைக்கவும் முடியாது.

    * பணம் மட்டும் இருக்கிறது, அறிவு கிடையாது.

    * தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான்.



இலக்கியம் கூறுவது: 


மகாபாரதத்தில், துரியோதனனிடம் கிருஷ்ணர் கடைசியாகக் கேட்டது ஐந்து கிராமங்களையாவது பஞ்ச பாண்டவர்களுக்குத் தர வேண்டும் என்பதைத்தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க முடியாது என்ற மூர்க்கத்தனமான பிடிவாதத்தால், துரியோதனன் அனைத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.
 
back to top