.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 18, 2013

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!




தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.


முருங்கைகீரை சூப் செய்யும் முறை:


முருங்கைகீரை - 2 கப்

வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்

கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்

உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு


முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.



அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்!



ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”


மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.

‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.

துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!




"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"


நேர் விளக்கம்

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

அறிந்த விளக்கம் :

உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.

அறியாத விளக்கம் :

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

திருமூலர் சொன்னதைப் பாருங்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
---------------
தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.
யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை. 

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை....




பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை


வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- பகவான் கிருஷ்ணர்
 
back to top