ஏப்ரல் 2014ல் தான் கமலின் 'விஸ்வரூபம் 2' வெளியாக இருக்கிறது என்று தமிழ் திரையுலகில் பரவலான பேச்சு நிலவுகிறது.
கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'விஸ்வரூபம் 2'. கமல் எழுதி இயக்கி வருகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'விஸ்வரூபம்' படம் வெளியாகும் போதே, விரைவில் 2ம் பாகம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் கமல். அதுமட்டுமன்றி 'விஸ்வரூபம்' படம் முடிவடையும் போதும் இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளை இணைத்து 'விரைவில் 2ம் பாகம்' என்று முடித்திருந்தார்.
'விஸ்வரூபம்' முதல் பாகம் எடுக்கும் போதே, இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளை படமாக்கி விட்டார் கமல். மீதமுள்ள காட்சிகளை மட்டுமே 'விஸ்வரூபம்' வெளியீட்டிற்குப் பிறகு காட்சிப்படுத்தி வந்தார்.
'விஸ்வரூபம்' சில திரையரங்குகளில் மட்டுமே ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், 'விஸ்வரூபம் 2' பொருத்தவரை அனைத்து மொழிகளிலும், திரையரங்குகளிலும் படத்தை ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட இருக்கிறார்.
ஆரோ 3டி தொழில்நுட்பத்திற்காக விரைவில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருக்கிறார் கமல். அங்கு சுமார் 1 மாதம் தங்கியிருந்து பணிகளை முடிக்கவிருக்கிறார். அமெரிக்கா சென்று திரும்பியவுடன் தான், டிரெய்லர் வெளியீட்டிற்கான பணிகளை கவனிக்க இருக்கிறார்.
ஆக, பிப்ரவரி மாதம் தான் 'விஸ்வரூபம் 2' டிரெய்லர் பணிகள் துவங்கவிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதியில் டிரெய்லர் வெளியீடு, மார்ச் மாதம் முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் கமல்.