.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

இனி இல்லை மன அழுத்தம்!



இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?' என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.



 வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம்.


இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை.


மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம் இயற்கையாகவே வந்துவிடாது. அவற்றை நாம் கற்று நம் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப அமைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை வெல்லலாம்.


'வா‌ய்‌ ‌வி‌ட்டுச் ‌சி‌ரி‌த்தா‌ல், நோ‌ய் ‌வி‌ட்டு‌ப் போகும்' எ‌ன்ற பழமொ‌ழி, மன அழு‌த்த‌த்‌துக்கு மிகச் சரியாகப் பொரு‌ந்து‌ம். மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புகள்,  அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி மனநல மருத்துவர்கள் பி.ஆர்.ராஜேஷ் குமார், ஆவுடையப்பன், பொது மருத்துவர் நாகராஜன் ஆகியோர் இங்கே  பகிர்ந்துகொள்கின்றனர்.
  இனி, எல்லாம் சுகமே! வாழ்த்துக்கள்!

அன்பு எங்கே வாழ்ந்தது?!



அன்பினால் உலகையே வளைத்து விடலாம் என்று நினைத்தேன். கடைசியில் வளைந்தது. என்னவோ நான்தான். அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன் என்ற புலம்பலைக் கிட்டத்தட்ட எல்லோரிட மும் கேட்க முடிகிறது. நமது துன்பத்துக்கு காரணம் அன்பல்ல.... பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 
அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. நந்தவனத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் சில மலர்களே இறை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீதமுள்ளவை பதில் புன்னகையைக் கூட எதிர்பாராமல் சிரிக்கின்றன. அன்பு எதிர்பார்ப்புகள் அற்றது பற்று, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. நாம். அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் மூட்டை மூட்டையாக எதிர்பார்ப்புகளையும் சேர்த்துச் செலுத்துகிறோம்.


 அதனால் ஏமாற்றங்களை சந்தித்துத் துவண்டு போகிறோம். அன்பு ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில் அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆங்காங்கு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் உயிரூட்டியபடி நகர்ந்து கொண்டிருக்கும் நதியைப் போல அன்பு உடையவனின் வாழ்க்கையும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இடையறாது அன்பு செலுத்துதலே தனது இயல்பாகக் கொண்டவனின் எண்ணங்கள் மேன்மையானவையாக இருக்கும். அவனது சொற்களில் தூய்மையும் இனிமையும் ததும்பும் செயல்கள் சமுதாயத்துக்கு நன்மை பயப்பனவாக இருக்கும்.


சிறு வயதில் ஆசையாக மணல் வீடு கட்டி பிறகு காலால் அதை எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர். தனது காரின் மீது சின்ன கீறல் விழுந்தாலும், தன் உடலிலேயே கீறல் விழுந்தது போல் துடிப்பவர்கள் உண்டு பற்று கொண்டவன் தன்னையும் அறியாமல் பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து தானும் சுதந்திரமாக இருக்கிறான்.


 பறவையின் மீது பற்று கொண்டவன். அதை கூண்டில் அடைக்கிறான். பறவையைப் பாதுகாக்கும் பொறுப்பில் தானும் சிக்கிக் கொள்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன் அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பற்று பந்தப்படுத்துகிறது. அன்பு, விடுதலை அளிக்கிறது பற்று கொண்டவன், தன்னைச் சுற்றி வட்டங்கள் போட்டுக் கொண்டு தானும் அதில் சிக்கிக்கொள்கின்றான்.


அன்பு கொண்டவன். எல்லைகளைக் கடந்தவனாக நிம்மதியை சுவாசிக்கிறான். பற்று குறுகிக் கொள்கிறது அன்பு பரந்து விரிகிறது. வாழ்க்கை என்பது அன்பால் விரியும் வட்டம்! சுவாமி விவேகானந்தரது சிறு வயதில், அவரைப் பெற்றெடுத்த அன்னையும், சில சகோதர, சகோதரிகளும் இருந்தனர். அவரது வட்டம் விரிந்தது. அவர் ராமகிருஷ்ணரின் சீடரானதும் அன்னை சாரதாதேவி அவருக்கு அன்னையானார். ராமகிருஷ்ணரின் பிற சீடர்கள், சகோதரர்கள் ஆனார்கள். வட்டம் விரிந்தது பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு குமரி முனையில் தவம் செய்தார்.


பாரதத் தாய் அன்னையானாள் பாரத தேசத்தவர் அனைவரும் அவரது சகோதர சகோதரிகள் ஆனார்கள். வட்டம் இன்னும் விரிவடைந்தது. சிகாகோவில் உலக மதங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் இப்போது உலக அன்னை அவரின் அன்னையானாள். உலக மக்கள் அனைவரும் அவரின் சகோதர சகோதரிகள் ஆனார்கள்.


 ‘அமெரிக்க நாட்டு சகோதர - சகோதரிகளே!’ என்று அவரின் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த அந்த தூய சொற்கள் பொருளியலில் மூழ்கி, குறுகிய மனம் படைத்தவர்களாக துயரத்தில் ஆழ்ந்திருந்த எண்ணிலடங்கா மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அன்பில் இருந்து உதித்த அவரது சொற்கள், வாழ்க்கையை பற்றிய விசாலமான பார்வையையும் பாரத நாட்டின் அருளியல் சிந்தனையையும் இன்றும் உணர்த்திக்கொண்டிருக்கிறது. பற்று சுயநலம் மிக்கது அன்பு, சுயநலமற்றது!


ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு திட்டத்துடன் உலகில் பிறந்திருக்கிறான். நமக்குக் குழந்தைகளாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவர்கள் மீது நமது கருத்துகளைத் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்து நீ வைத்தியராகவா பொறியியலாளராகவா என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்கிறோம். அந்தப்பிஞ்சு மனதுக்குள் ஓர் உயர்ந்த கவிஞனோ, ஓவியனோ உறங்கிக்கொண்டிருக்கலாம்.


அவனைத் தட்டி எழுப்ப நமக்குத் தெரிவதே இல்லை. ‘உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வரவில்லை. உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். கலீல் ஜிப்ரானின் வசீகர வரிகள் இவை! தவறு செய்யும் குழந்தைகளை அல்லது குடும்பத்தினரைக் கண்டிப்பதோ அறிவுறுத்துவதோ தவறு இல்லை. நம் எண்ணப்படி அவர்கள் நடக்கவில்லையே என்று கவலைக்கடலில் ஆழ்வதுதான் தவறு.


மாற்றங்கள் இயல்பாக நிகழும் வரை பொறுமை அவசியம் தானே மலர்ந்த மலருக்கும் நாம் தட்டியதால் வலிக்க வலிக்க இதழ்களை விரித்த மலருக்கும் வித்தியாசம் உண்டு. பற்று, பதட்டத்தில் ஆழ்ந்து புலம்புகிறது. அன்பு, பொறுமையாகச் சிந்தித்துப் புரிந்துகொள்கிறது. அன்பு கொண்டவன், எவரையும் உடைமைப் பொருளாகக் கருதுவது இல்லை. அவன் தனது உடைமைகளின் மீது கூட உரிமை கொண்டாடுவது இல்லை. புகையிரதத்தில் பயணிக்கிறோம்.


ஆறு மணி நேர பயணத்தில் இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை ஓய்வதற்குள் சேருமிடம் வந்துவிடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்! வாழும் சிறிது காலத்துக்குள், இது எனது நிலம், அது உனது நிலம் என்று சண்டையிட்டு என்னுடையவர் உன்னுடையவர் என்று பிரிவினை பேசி, துன்பத்தை வளர்த்துக் கொள்கிறோம்.


பற்று கலவாத உண்மையான அன்பு தெய்வீகம் ஆனது. ஆற்றல் மிக்கது அது. உலகையே அரவணைத்துக் கொள்ளும். உலகப் பற்றில் திழைத்திருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. கடவுளுக்கென ஒதுக்க அவன் உள்ளத்தில் இடமும் இல்லை! பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு கடவுளை எங்கும் காணும் அறிவை அடைந்து அந்தப் பற்றையும் நீக்கி விடுகிறான்.


ஆனந்தத்தில் நிலைத்திருந்து. எங்கும் அன்பை பாய்ச்சுகிறான். அனைத்திலும் பரம்பொருளைக் காண்பதே ஆன்மீகத்தின் அறுதித் தத்துவம். பற்றை நாம் நீக்கத்தான் வேண்டும். இல்லையெனில் பற்றுக்கு உரிய பொருளையோ மனிதரையோ காலம் நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்றுவிடும். பற்றை துறப்பதே உண்மையான துறவு உலகை வெறுத்து ஒருவன் துறவியாக முடியாது.


அனைத்திலும் தன்னையே கண்டு அந்த ஞானத்தால் பற்றறுத்தவனே உண்மையான துறவி!

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில்?

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......


திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்...


தனிக்குடித்தன தயாரிப்புகள்!


திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது.


வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை அவர்களின் சேட்டைக்குஈடுகொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு பொருளையும் வாங்கினால், 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்று இடையிடையே காசை விரயமாக்காமல், கொடுக்கும் விலைக்கு ஏற்ற பலனைப் பெறலாம்.

 உதாரணமாக... 

ஃப்ளாட் டி.வி. வாங்கிய பின், 'எல்.சி.டி வாங்கியிருக்கலாம்' என்று அலைபாய்வது வேண்டாம். பிறக்கப் போகும் குழந்தையையும் மனதில் கொண்டு டபுள் பெட்டுக்கு பதிலாக, முன்கூட்டியே டிரிபிள் பெட் என்பதாக கட்டில் வாங்கிவிடலாம்!


குழந்தைக்குப் பின் வேலை..?


வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தை பிறந்த பின், வேலையைத் தொடர்வது அல்லது விடுவது பற்றி முன்கூட்டியே கணவருடன் கலந்து பேசி முடிவெடுங்கள். சில வருடங்கள் மட்டும் வேலைக்கு பிரேக் விட முடிவெடுக்கும் பெண்கள், குழந்தை வளர்ப்பினூடே தங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் அந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தலாம்.


சாஃப்ட்வேர் துறை பெண்கள், வளர்ந்து வரும் துறைகளான மொபைல் ஆப்ஸ், க்ளவுட் அப்ளிகேஷன், பிக் டேட்டா போன்ற ஆன்லைன் கோர்ஸ்களைக் கற்கலாம். அக்கவுன்டன்ஸி துறையிலிருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணும் வேலையை தெரிந்தவர்களுக்கு செய்து கொடுத்து, வருமானம் பார்க்கலாம். அரசு வேலை, வங்கி வேலைகளில் விருப்பமுள்ளவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
எமர்ஜென்ஸி தொகை!


வரவு - செலவு, நீண்டகாலத்துக்கான முதலீடு, சேமிப்பு தவிர, எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கையில் எமர்ஜென்ஸி தொகை எப்போதும் இருப்பது நல்லது. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் தொகையை, குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த ஆரம்ப வருடங்களிலேயே தயார் செய்து வைப்பது புத்திசாலித் தனம்.


வருமான வரி விவரங்கள்!


இன்கம்டாக்ஸ் நடைமுறைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதன் சாதக, பாதகங்களை புரிந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, குழந்தைகள் பெயரில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் அதில் வரும் லாபத்தை பெற்றோரின் வருமானத்தில் சேர்த்துக் கணக்குக் காட்ட வேண்டும். என்றாலும், ஒரு குழந்தைக்கு 1,500 ரூபாய் வரை என்கிற விகிதத்தில் வருமான வரிவிலக்குக் கோரலாம். முதலீடு செய்யும்போதே, முதலீட்டு ஆலோசகரை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


எதிர்கால நிதி திட்டமிடல்!


இன்றைய சூழலில், எடுத்த எடுப்பிலேயே வாங்கும் செழிப்பான சம்பளத்தில் 30 வயதுக்குள்ளாகவே வீடு, கார் என்று எல்லாம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, 'அதுக்குள்ளயா..?' என்று தயங்காமல், அதற்கான முயற்சியை தாமதிக்காமல் முடுக்குங்கள். லேண்ட் லோன், ஹவுஸிங் லோன் பற்றிய விவரங்களை சேகரியுங்கள். காலம் வரும்போது, சட்டென சொந்த வீட்டுக் கனவை நனவாக்குங்கள். அதேசமயம், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் ஏரியாக்களில் பெருகிக் கிடக்கும் ஏமாற்று வேலைகளிலும் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம், குழந்தையின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, திருமணம் என பிற் காலத்திய செலவுகளை மேலோட்டமாகவாவது திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.


வீண் செலவுகள் வேண்டாம்!


ஒரு குட்டி ஜீவன் வந்த பின், குழந்தைகளுக்கென்று மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்குக் கொண்டு வர மனம் பரபரக்கும். பெரும்பாலும்... குழந்தைகளுக்கான பயன்பாட்டைவிட, பெற்றோரின் ஆசைகளைத் தூண்டும் வித மாகவே அவை தொடர்பான விளம்பரங்களும், பொருட்களும் இருக்கும். எனவே, 'குழந்தைக்காக' என்ற மாயையில், காசைக் கரைக் காதீர்கள். எதை வாங்கினாலும், தேவையானதாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களிடம் நம் ஆடம்பரத்தைக் காட்டுவதற்காக இருக்கக் கூடாது.


மெட்டர்னிடி லீவ் பாலிஸி! 


வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தின் மெட்டர்னிடி லீவ் பாலிஸி பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பேறுகால விடுப்பு எத்தனை மாதங்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, பிரசவத்துக்கு முன், பின் என்று அந்த விடுப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதைத் திட்டமிடுங்கள்.

சிலருக்கு கர்ப்பம் தரித்த ஆரம்ப மாதங்களில் உடம்பு அலுவலகச் சூழலுக்கு ஒத்துழைக்காது போகும். அப்போது எடுக்கும் விடுப்பு, பேறுகால விடுப்பில் சேராது. என்றாலும், அது 'லாஸ் ஆஃப் பே' ஆகிவிடாமல், மெடிக்கல் லீவாக மாற்றிக்கொள்ளும் அனுகூலத்தை ஆராயுங்கள். சில அலுவலகங்களில் அப்பாவாகும் ஆண்களுக்கும் மனைவியின் பேறுகாலத்தில் 'பெட்டர்னிடி லீவ்' (Paternity leave) வழங்குவார்கள்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?



ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?


அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.


ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அதிலிருக்கும் கெமிக்கல்களின் நாற்றம் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருப்பதோடு, அந்த கெமிக்கல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்திவிடும்.


* ஸ்ப்ரே பெயிண்ட்டானது, சாதாரண பெயிண்ட்டை விட எளிதில் போகக்கூடியது.


* மேலும் இந்த ஸ்ப்ரே பெயிண்ட் மிகவும் விலை அதிகமானது. அதுமட்டுமின்றி, நம் மக்களின் மனதில் விலை அதிகமான பொருட்கள் நல்ல தரமாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அதனால் தான் பலர் இதனைப் பற்றிய உண்மையை சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர்.


* ஸ்ப்ரே பெயிண்ட் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியவை. அதிலும் மழைக்காலங்களாக இருந்தால், இந்த பெயிண்ட் தண்ணீரை உறிஞ்சி வீட்டின் உள்ளே ஆங்காங்கு ஈரப்பதமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, அந்த ஈரப்பதம் உலர்ந்துவிட்டால், அங்கு திட்டுகளாக காணப்படும்.


* குறிப்பாக ஸ்ப்ரே பெயிண்ட் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் ஸ்ப்ரே பெயிண்ட்டை பயன்படுத்த வேண்டாம் என்று பலர் சொல்கின்றனர்.
 
back to top