.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?




கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?


சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?


நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.


ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.


நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360 oC ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது. அப்போது ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 oC வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது.


சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும் , ஆக்சிஜனும் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம் ரப்பர் டியூப்களைத் தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லை.சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் மிக மிக உயர்ந்த அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது.


எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை (Athmospheric Pressure) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன் அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.


இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரிபொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனிரூ.26 கட்!



வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!


வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.


பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.


வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்! தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.


தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது. ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.


 இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?



சாதிகள் இல்லையடி பாப்பா என்போம், ஆனால்... சாதி சான்றிதழ் கேட்போம்....
வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது.


இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேறு வகுப்பிற்குச் சென்றுவிடுவார்.


இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச் சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல.


இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், மாணவர்களின் பெற்றோர் இடையில் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது சாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ளவேண்டும்.


கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக இச் சான்றிதழ் வேண்டுமென்றால், உதாரணமாக இரண்டு பெண் குழந்தைகள் நலத் திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.


வழக்கம் போல், இச் சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சான்றிதழே ஆகும். இச் சான்றிதழுக்கான விண்ணப்பம் இந்த முகவரியில் கிடைக்கும்.

http://www.tn.gov.in/appforms/cert-community.pdf


 (இந்த விண்ணப்பத்தில், எண் 5, 6, மற்றும் 7 ஆகியவை குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று உள்ளிட்டவைகளைக் கேட்கின்றன. இருப்பினும் இவை எதுவும் இல்லாத பொழுது, இவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.)


இச் சான்றிதழ் தேவைப்படுவோர், தங்களது குடும்ப அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது எதற்கென்றால், வட்டாட்சியரின் பணிகளில் ஒரு எளிமையை கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவது ஒன்றுதான் காரணம்.


சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொழுது, குடும்ப அட்டை கூட இருந்தால் மட்டுமே அளிக்க வேண்டும்.


ஒருவருக்குக் குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் சாதிச் சான்றிதழே வாங்க முடியாது என்பதெல்லாம் தவறு. மனுதாரர் தன்னிடம் வேறு சான்று/ஆவணங்கள் எவையும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.


இப்படி மனு அளிக்கும் பொழுது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற கால தாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது.


ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம் தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகமாகும். அவர்களே பொது மக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால் தான் பொது மக்கள் கேட்க்கும் சான்றினை வழங்க முடியும் என்று கேட்பது முறையல்ல. எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாத பொழுது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.


அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல. ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.

கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?



கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?


தங்கம், நிலம், வீடு ஆகியவை நம் முதலீட்டில் முக்கிய அங்கம் வகித்தாலும், அதன் பிறகு நம்மில் பலருக்கு முதலீடு என்பதே கடன் பத்திரங்கள்தான். கடன் பத்திரங்கள் நிலையான வட்டியை, வருவாயை கொடுப்பதுதான் அதன் சிறப்பு. கடன் பத்திரங்களில் முதலீடு செய்வோர் வங்கிகளில் வைப்புக் கணக்கு, பிராவிடன்ட் தொகை, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு பாலிசி என பலவகைகளில் வைத்திருப்பார்கள். இந்தக் கடன் வகைகள் யாவும் வெவ்வேறான கால அளவுகளில் இருக்கும். வெவ்வேறான வட்டி விகிதங்களைக் கொடுக்கின்றன.


நீங்கள் ஓராண்டு வைப்புக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மீதான ஆண்டு வட்டி 10%. ஒரு வருட முடிவில் உங்களுக்கு ரூ.10,000 வட்டியாகக் கிடைக்கும். இந்த வட்டியை நீங்கள் மாதம்தோறும் வாங்கினால் (10000/12) ரூ.833 மாத வட்டியாகக் கிடைக்கும். அந்த மாத வட்டியை மீண்டும் 10 சதவீதத்தில் முதலீடு செய்தால், ஓராண்டு இறுதியில் உங்கள் மொத்த வட்டி 10 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும். இவ்வாறு நீங்கள் வாங்கும் வட்டி மாத வட்டி, கால் அல்லது அரை வருட வட்டி, ஒரு வருட வட்டி, முதிர்வு கால வட்டி என்று பலவிதத்தில் இருக்கும்.


பொதுவாக பிராவிடன்ட் தொகை, அதன் முதிர்வில்தான், அதாவது 15 அல்லது 20 வருட முடிவில் கிடைக்கும். தேசிய சேமிப்பு பத்திரங்களும் அவ்வாறுதான்.


கடன் பத்திரங்களில் ஒரு வகை Bond. இதில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் Government Securities, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் Corporate Bond அல்லது Debenture என பல வகைகள் உண்டு. Bond என்பது ஒரு குறிப்பிட்ட வட்டித் தொகையை மாதம் அல்லது வருடம்தோறும் தருவதாகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட முதிர்வுத் தொகையை மட்டும் கொடுப்பதாகவும் இருக்கும். சில corporate debenture-கள் பின்னர் பங்குப் பத்திரமாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன் வருகின்றன.


வட்டி விகிதம், பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்பது கோட்பாடு. நீண்டகாலத்துக்கு (3 ஆண்டுக்கும் அதிகமாக) கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும்போது, நிகரவட்டி (ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி – பணவீக்க விகிதம்) சில ஆண்டுகளில் குறைவாகவும், சில ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும். இதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே வருமான வரி, பணவீக்கம் நீங்கலாக உள்ள நிகர வருவாயைக் கணக்கிடுவது முக்கியம்.


மாதம் அல்லது வருட வட்டி கொடுக்கும் நீண்ட கால கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். வட்டி வருவாய் மாதம் அல்லது வருடம்தோறும் உங்கள் செலவுக்கு தேவை என்றால் மட்டுமே அவ்வாறான கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் வரும் மாதாந்திர, வருடாந்திர வட்டி வருவாயை மீண்டும் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு வரும் சிறியத் தொகைகளை மீண்டும் அதிக வட்டி வரும் வகையில் முதலீடு செய்ய முடியாது. எனவே, முதிர்வு கால வட்டி வழங்கும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்க. கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது கால அளவை நிர்ணயிப்பது முக்கியம்.


உங்கள் பணத்தை பல்வேறு கால அளவுகளில், பல கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். நீண்ட கால முதலீட்டுக்கு பிராவிடன்ட் தொகை, ஆயுள் காப்பீடு திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். குறுகியகால முதலீடு, மாதந்தோறும் வட்டி வாங்க வங்கி வைப்புக் கணக்கை தேர்ந்தெடுங்கள். வரி சேமிப்புக்கு அரசு கடன் பத்திரங்கள் உதவும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க நினைத்தால், corporate bond அல்லது debenture வாங்குங்கள்.
 
back to top