.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

பிறந்தவுடன் குழந்தைகள் எதற்காக அழுகிறது?



இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள்
அழுகிறது காரணங்கள் என்ன?


இதோ தெரிந்து கொள்ளுங்கள்.


ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.


இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத்துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டமும் வெற்றியும்!!!





 ஒடிஷா மாநிலத்தில் நியமகிரி மலைப்பகுதியில் வாழும் டோங்கிரியா கோண்ட் (Dongria Kondh) பழங்குடியினர் தங்கள் மலைகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் தாதுவினை வெட்டி எடுக்க திறந்தவெளி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்திய உச்ச நீதி மன்றம் டோங்கிரியா கோண்ட் கிராம சபைகளின் சம்மதமும் அனுமதியும் இல்லாமல் வேதாந்தா தன் சுரங்கத்தை அமைக்க முடியாது என்று இந்த வருடம்  ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது; இந்திய பழங்குடிகளுக்கு இயற்கை வளங்களின் மேல் உள்ள பாரம்பரிய உரிமைகளுக்கு வலு சேர்க்கக்கூடியது; கிராமசபை போன்ற அடிமட்ட ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை உறுதிப்படுத்துவது; இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் மைய வழிகாட்டுதலை வழங்கக்கூடியது. டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டத்துக்கு ஆதரவான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அவ்வளவு எளிதாக இந்த எளிய மக்களுக்குக் கிடைத்துவிடவில்லை. 


திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியினை பேசும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர்  நுட்பம் மிகுந்த பல கலைகளை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டவர்கள். கழுத்தை நிறைக்கும் உலோக அணிகலன்கள், காதுகளிலும் மூக்கிலும் பல வளையங்கள், நுட்பமான கை வேலைப்பாடு நிறைந்த துணிகள், திரைச் சீலைகள், சுவரோவியங்கள் நிரம்பிய மண் வீடுகள் ஆகியன டோங்கரியா கோண்ட் பழங்குடியினரை எளிதில் அடையாளம் காட்டக்கூடியவை.


நியமகிரி மலைச்சரிவுகளில் உள்ள காடுகளில்,  ராயகாடா, காளஹண்டி, கோராபுட் ஆகிய மாவட்டங்களில் வாழும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். 2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின்படி டோங்கிரியா கோண்ட் மக்களின் எண்ணிக்கை 7952 மட்டுமே. அவர்கள் முற்றிலும் அழிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதினால் இந்திய அரசியல் சாசனத்தின் ஐந்தாவது ஷெட்யூலின் ஷரத்துக்களின்படி  டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் பாதுக்காக்கப்பட வேண்டியவர்கள்.


டோங்கிரியா கோண்ட் மக்கள் நியமகிரி மலைகளையும் அவற்றிலிருந்து உற்பத்தியாகி ஓடிச் செல்லும் நீரோடைகளையும் தங்கள் கடவுளர்களாகக் கருதுவதே அவர்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணமாகும். நியமகிரி மலைகளை ‘நியமராஜா’, ‘ஆதி சட்டங்களை இயற்றியவர்’ என்றும் பூமியை ‘தாரிணிப் பெண்’ என்றும் அவர்கள் வழிபடுகின்றனர். நியமகிரி மலைகள் இருக்கும் வரையே தங்கள் இனமும் உயிரோடு இருக்கும் என்று உறுதியாக நம்பும் டோங்கிரியா கோண்ட் மக்களின் தலைவர் லாடு சிகாகா “ எங்கள் கடவுள்கள் திறந்த வெளியில் இருப்பவர்கள்; அவர்கள் உங்கள் கடவுள்களைப் போல அறைக்குள் பூட்டி வைக்கப் படுபவர்கள் அல்ல” என்று குறிப்பிட்டார்.


வேதாந்தாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அமைதியான அகிம்சை வழியில் நடத்திச் சென்ற லாடு சிகாகாவும் நியமகிரி மலைகளின் உச்சியில் வாழும் பன்னிரெண்டு கிராம மக்களும் சர்வதேச கவனத்தையும் கவர்ந்தனர். சர்வைவல் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நிதியும் அறிவுஜீவிகளின் ஆதரவையும் கோரி பிரச்சாரம் மேற்கொண்டது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற படமான ‘அவதார்‘ படத்தின் கதையைப் போன்றதே டோங்கிரியா கோண்ட் மக்களின் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் என்ற பிரச்சாரம் பல வகைகளிலும் இந்த மக்கள் போராட்டத்தினை பிரசித்தி பெறச் செய்தது.


 ‘அவதார்‘ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரனுக்கு டோங்கிரியா கோண்ட் மக்கள் சார்பில் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மனு அனுப்பப்பட்டது. எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகை யோஹன்னா லும்லெ, நடிகர் மைக்கேல் பாலின் ஆகியோர் டோங்கிரியா கோண்ட் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ நியமகிரி மலை போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது.


பாக்சைட்டைத் தோண்டி எடுப்பதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமலேயே அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை ஒடிஷாவிலுள்ள லஞ்சிகாரில் அமைத்ததிலிருந்தே வேதாந்தா பல விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாகப் பலரும் குற்றஞ் சாட்டி வருகின்றனர். ஒடிஷா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தாவின் லஞ்சிகார் ஆலை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்துவதாக கண்டித்தது.


 அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் வேதாந்தாவின் ஆலையிலிருந்து வெளிவரும் தூசு மக்களின் உடைகளில், பயிர்களில், உணவுகளில் படிவதாகவும் இது மனித உரிமை மீறல் பிரச்சினை என்றும் குற்றம் சாட்டியது. சுற்றுச் சூழல் ஆய்வாளர்களால் வேதாந்தா ஆலை பரிசோதிக்கப்பட்டபோது அதன் லஞ்சிகார் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு வம்ஷதாரா நதியினை கடுமையாக மாசு படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.


2010 ஆம் ஆண்டு நியமகிரி மலையில் பாக்சைட் அகழ்ந்தெடுப்பதற்கான திறந்தவெளி சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி கேட்டு வேதாந்தா ஸ்டெர்லைட் தொழில் நிறுவனங்களோடு சேர்ந்து விண்ணப்பித்தபோது அது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நிராகரிக்கப்பட்டது. மக்களின் ஆதரவினை வேண்டி பல பிரச்சாரங்களை மேற்கொண்ட வேதாந்தா டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் கிராமங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைப்பதாக விளம்பர பேனர்களை அமைத்தது. அந்த பேனர்களெல்லாம் இன்று துருப்பிடித்துக் கிடக்கின்றன.


2013 ஏப்ரல் மாத உச்ச நீதி மன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து வேதாந்தா சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பன்னிரெண்டு டோங்கிரியா கோண்ட் கிராமங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசாங்கம், மாவோஸ்டுகளினால் வன்முறை நடந்தேறக்கூடும் என்று அச்சம் தெரிவித்து, ஏராளமான போலீஸ் படையையும்  துணை ராணுவப் படையினரையும் நியமகிரி மலைகள் முழுக்கக் குவித்தது. எந்த நேரமும் கலவரம் வெடிக்ககூடும், துப்பாக்கிச்சூடு நிகழக்கூடும் என்ற சூழலில் வாக்களித்த டோங்கிரியா கோண்ட் மக்கள் நூறு சதவீதம் வேதாந்தா பாக்சைட் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.


வாக்கெடுப்பு நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாலும் பயமும் பீதியும் நியமகிரி மலைகளில் தொடர்வதாக பங்கஜா சேதி என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார். டோங்கிரியா கோண்ட் மக்களின் துணிகளிலுள்ள கதையாடல்களையும் கைவேலைப்பாடுகளையும் ஆராய்ச்சி செய்து வரும் பங்கஜா சேதி டோங்கிரியா கோண்ட் மக்களின் நியமகிரி மலை நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்து நிற்பதால் அவை மாறவே மாறாது என்றும் நம்பிக்கையூட்டுகின்றார்.


இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்குக்காக, இந்திய கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்திற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்குடியினர் பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அணைகள் அமைப்பதற்காக, கனிமச் சுரங்கங்கள் தோண்டுவதற்காக, மின்சாரம் தயாரிப்பதற்காக தங்கள் காடுகளை, மலைகளை, வசிப்பிடங்களை, பாரம்பரிய உரிமைகளை இழந்து பழங்குடியினர் துரத்தப்பட்டிருக்கின்றனர். தங்கள் மொழிகளை இழந்து, பண்பாட்டு வளங்களை இழந்து தாங்கள் அரசர்களாக ஆண்ட பகுதிக்கு வெகு அருகாமையிலேயே தரித்திரர்களாக இந்தியா முழுவதும் பழங்குடியினர் இன்று வாழ்ந்துவருகின்றனர்.


டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்ட வெற்றியும் அதற்கு வழி செய்த உச்ச நீதி மன்ற தீர்ப்பும் இந்தியப் பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்குமான முதல் படிகளாகும்.

சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?




கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?


சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?


நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.


ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.


நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360 oC ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது. அப்போது ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 oC வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது.


சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும் , ஆக்சிஜனும் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம் ரப்பர் டியூப்களைத் தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லை.சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் மிக மிக உயர்ந்த அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது.


எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை (Athmospheric Pressure) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன் அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.


இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரிபொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனிரூ.26 கட்!



வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!


வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.


பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.


வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்! தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.


தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது. ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.


 இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
 
back to top