.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 30, 2013

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்




2013-ம் ஆண்டில் டாப் கியரில் பயணித்த ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அந்த வேகத்தை சற்றும் குறைக்காமல் அடுத்த ஆண்டிலும் பயணிக்க தயாராகி வருகிறார். 2014-ல் ரிலீஸாகவுள்ள அவரது முதல் படம் ‘மான் கராத்தே’. இந்தப் படத்துக்காக ஹன்சிகா மோத்வானியுடன் காதல் கராத்தேவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாமல்லபுரம் சாலையில் சந்தித்தோம்.


இந்தப் படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 


முதல்லயே இப்படி தொடங்கினா எப்படி நண்பா. நீங்களே சொல்லுங்க, நாம வந்து கருத்து சொன்னா சரியா இருக்குமா? புதுசா ஒரு காதல் சொல்ல வர்றோம். துறுதுறுனு சுத்திக்கிட்டிருக்கிற வெகுளிப் பாப்பா ஹன்சிகாவை, எவ்ளோ தூரம் துரத்தி துரத்தி காதல் செய்றான் பீட்டர் (சிவா) அப்படிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன். இந்தப் படத்துல மீசை இல்லாமல் நடிச்சிருக்கேன்.


அதுக்காக உடைகள், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் மாத்த கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்துல முழுக்க முழுக்க காமெடியெல்லாம் இருக்காது. கொஞ்சம் ஆக்‌ஷன். அள்ள அள்ள காதல் இருக்கும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட கதை. அவர் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். இளைஞர்கள் ஒவ்வொருத்தருக்கும் இந்தப் படம் காதல் உணர்வைக் கொடுக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலி விருந்து.


ஷூட்டிங்ல ஹன்சிகா என்ன சொல்றாங்க? 


கதை சொல்லும்போதே ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணுன்னு எடுத்துக்கிட்டுதான் சொன்னாங்க. கதை முழுக்க ஹன்சிகா மாதிரி, ஹன்சிகா மாதிரின்னு பேசிவிட்டு அவங்க இல்லாமல் இருந்தால் எப்படின்னு யோசிச்சோம். தயாரிப்பு தரப்பில் அவங்ககிட்ட கதையைச் சொன்னாங்க. கிளைமேக்ஸ் வரைக்கும் அவங்க கேரக்டரோட முக்கியத்துவத்தை பார்த்துட்டு உடனே ஒப்புக்கொண்டாங்க.


ஷூட்டிங்குல ஹன்சிகா, பயங்கர துறுதுறு கேரக்டர். செம ஜாலிப் பேர்வழி. யாரையாவது வம்புக்கு இழுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க அமைதியா இருந்து பார்த்ததே இல்லை. அதுவும் இயக்குநர் திருக்குமரனை வம்புக்கு இழுக்கலைன்னா அவங்களுக்கு பொழுதே போகாது. அவர் என்கிட்ட வந்து ஹன்சிகா பத்தி புகார் கொடுப்பார். நம்ம சிக்கிடுவோமா நண்பா, சொல்லுங்க.

உங்க குழந்தை ஆராதனா எப்படி இருக்காங்க?

குட்டிப்பாப்பா சமத்தா அம்மாக்கூட விளையாடிக்கிட்டிருக்காங்க. பிறந்து 2 மாசம் ஆகுது. ஆனா நான் அவங்களோட இருந்தது ரொம்ப குறைச்சலான நாட்கள்தான். இப்பக்கூட அவளைப் பார்த்து 20 நாட்கள் ஆச்சு. அவங்க அம்மாதான் அவங்களுக்கு எல்லாம். அவளோட விளையாட்டு, தூக்கம், புன்னகைன்னு எல்லா விஷயங்களையும் நான் செல்போன் மூலமாதான் பார்த்துக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இந்த புத்தாண்டை என் ஆராதனாவுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறேன்.


 அதேபோல அவங்க எங்களுக்கு பரிசா கிடைச்சபெறகு முதலில் வெளிவரப்போற படம் ‘மான் கராத்தே’. படம் ரிலீஸப்போ அவங்க 6 மாதக் கைக்குழந்தையா இருப்பாங்க. முதன்முதலா அப்போ அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு போகணும்னு இருக்கேன். திரையில வர்ற என்னை பார்த்துட்டு அவங்க எப்படி பாவனை காட்டப்போறாங்கன்ற எதிர்பார்ப்பு எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.


உங்க தலையில் இருந்த தொகுப்பாளர் கிரீடத்தை தூக்கி மா.கா.பா ஆனந்த் தலையில் வச்சீங்க. இப்போ அவரும் உங்களை பின் தொடர்ந்து சினிமாவுக்கு வந்துட்டாரே?


இதுதானே வேணும். அங்கிருந்து சினிமாவுக்கு வர முடியாதுங்கிற நிலையை உடைச்சிருக்கீங்கன்னு என்கிட்ட நண்பர்கள் சொல்வாங்க. அது தொடர்ந்து நடந்தா சந்தோஷம். இனிமேல் தொலைக்காட்சியை யாரும் சாதாரணமா பார்க்க மாட்டாங்க. பெரிய லிப்ட் அதுதான்னு நம்புவாங்க. அங்கிருந்து வரும்போது நிறைய கத்துக்கணும். அதுவேற இதுவேறதான். சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் மட்டும்தான் வரமுடியுது.


மா.கா.பா அப்படித்தான். நிறைய உழைப்பார். அதேபோல தொடர்ந்து எல்லாருமே வர்றது நல்ல விஷயம். இங்கே வந்துட்டோம் ஜெயிச்சிட்டோம் என்பதெல்லாம் எனக்கு இல்லை. சரியான ஆரம்பம் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாதுகாப்பானதா தொடர்ந்து கொண்டுப்போகப் போகிறேன் என்பதில்தான் எல்லாம் இருக்கு. ம்ம்ம்… பார்க்கலாம்.

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…




ஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.


    ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள்.


    எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.



    கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும்,
    சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும்,
 

 இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுத் தாருங்கள்.

    பொறுமையின்றி இருக்கும் துணிச்சலும், துணிவோடு இருக்கும் பொறுமையும் அவனுக்கு வேண்டும்.



    தன்னிடம் நம்பிக்கை வைப்பதை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அப்போது தான் மனித சமுதாயத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.”


இது லிங்கன், கடிதத்தின் முக்கியமான பகுதி மட்டுமே.


உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.


அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்…


* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?


* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?


* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?


* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?


* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?


* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?


* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?


* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?


* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?


இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்’ என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!




இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
 
back to top